தஞ்சை: குடமுருட்டி ஆற்றில் மணல் அள்ளியதால் நீரின்றி கருக்கும் 1500 ஏக்கர் பயிர்கள்....!
’’குடமுருட்டி ஆற்றிலுள்ள மணல்களை, இரவு நேரத்தில் திருட்டுத்தனமாக எடுத்து சென்று வருவதால், ஆறு பள்ளமாகி விட்டது’’
திருவையாறு தாலுக்கா கீழத்திருப்பூந்துருத்தி, மேலத்திருப்பூந்துருத்தி, திருவாலம்பொழில், கண்டியூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் சுமார் 1500 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் நாற்று நடவு செய்து, தற்போது அனைத்து பயிர்களும் வளர்ந்து சூல் பருவம் எனும் பால் பருவத்தில் உள்ளது. வாய்க்காலில் வந்த தண்ணீரை வைத்து விதை தெளித்தனர். அதன் பிறகு வாய்க்காலில் தண்ணீர் வராததால், மின் மோட்டாரை கொண்டு, நாற்று பறித்து, நடவு செய்தனர். வாய்க்காலில் தண்ணீர் வரும் நம்பி இருந்த நிலையில், தண்ணீர் வராததால், நடவு செய்யப்பட்ட அனைத்து வயல்களிலும், தண்ணீர் இல்லாமல் வரண்டு, பாளம் பாளமாக வெடித்து, பரிதாப நிலையில் காட்சியளிக்கின்றது.
சூல் பருவத்தின் போது, நெற்பயிருக்கு தேவையான தண்ணீர் கிடைக்காமல் போனால், அனைத்து பயிர்களில் உள்ள நெல்மணிகள் பதறாகியும், முதிர்ச்சியடையாமல் வீணாகி விடும். இதனால் ஏக்கருக்கு சுமார் ரூ. 30 ஆயிரம் வரை செலவு செய்த தொகை கிடைக்குமா என்பது கேள்வி குறியாகியுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம், உடனடியாக, கீழத்திருப்பூந்துருத்தி, மேலத்திருப்பூந்துருத்தி, திருவாலம்பொழில், கண்டியூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட 1500 ஏக்கர் நெற்பயிரை காப்பாற்ற, வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட வேண்டும், தவறும் பட்சத்தில் அனைத்து பயிர்களும் நாசமாகி, செலவு செய்த தொகை அனைத்து வீணாகிவிடும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், குடமுருட்டி ஆற்று நீர், இப்பகுதியிலுள்ள வாய்க்கால்களில், ஒரு முறை மட்டுமே வாய்க்காலில் தண்ணீர் வந்தது. அதன் பிறகு இரண்டாவது மற்றும் மூன்றாவது முறை தண்ணீர் கிடைக்காததால், சூல் பருவத்தில் உள்ள குறுவை பருவ நெற் பயிர்கள் காய்ந்து வருகின்றன. மேலும், வயல்களிலும் தண்ணீர் இன்றி வெடிப்புகள் காணப்படுகின்றன. அப்பகுதியை சேர்ந்தவர்கள், குடமுருட்டி ஆற்றிலுள்ள மணல்களை, இரவு நேரத்தில் திருட்டுத்தனமாக எடுத்து சென்று வருவதால், ஆறு பள்ளமாகி விட்டது. வாய்க்காலின் தண்ணீர் நுழைவுப்பகுதி உயர்ந்திருப்பதால், ஆற்றில் வரும் தண்ணீர் வாய்க்காலுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகாரளித்தும், கண்டு கொள்ளாமல் இருந்து வருகின்றனர்.
விவசாயிகள், கடன் வாங்கியும், நகைகளை அடமானம் வைத்தும், சாகுபடி செய்த நிலையில், வயல்களில் தண்ணீரில்லாமல் பாளம் பாளமாக வெடித்திருப்பதால், அனைத்து நெற்பயிர்களின் நிலை கேள்வி குறியாகியுள்ளது. தற்போது பகலில் வெயில் அடித்த வருவதால், சூல் பருவத்திலுள்ள நெல்மணிகள் அனைத்து கருகி விடும். இதனால் ஏக்கருக்கு சுமார் 10 மூட்டை வருமா என்பது சந்தேகமாக உள்ளது. இதனால், ஆற்று நீரை சார்ந்துள்ள விவசாயிகள் பெரும் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலைமை தொடர்ந்தால், பயிர் காப்பீடு இல்லாத நிலையில் விவசாயிகளுக்குக் கடுமையான பாதிப்பு ஏற்படும். எனவே, குடமுருட்டி ஆற்றில் உடனயாகக் கூடுதலாக தண்ணீர் திறந்து விட வேண்டும், அந்த தண்ணீர் வாய்க்காலுக்கு வரும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.