தஞ்சாவூர்: கஞ்சா போதை டிரைவரால் பறிபோன இளம்பெண்ணின் உயிர்..!
தஞ்சை நகரில் உலா வரும் கஞ்சாவை முழுமையாக ஒழிக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
கஞ்சா போதையில் இருந்த தனியார் பஸ் டிரைவரால் இளம் பெண் உயிர் பரிதாபமாக பறிக்கப்பட்டுள்ளது. விபத்து என்று நினைத்தாலும் போதையில் இருந்த அந்த டிரைவர் பயணிகளின் உயிருக்கு எமனாக மாறியிருப்பார் என்று தஞ்சை மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
தஞ்சை அருகே களிமேடு பகுதியை சேர்ந்தவர் அகிலாண்டேஸ்வரி (31). இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று வழக்கம் போல் பணி முடிந்து வீட்டுக்கு தனது ஸ்கூட்டியில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவர் நினைத்திருக்கவே மாட்டார் எமனின் பார்வை தன் மீது பட்டு விட்டது என்று.
கொண்டிராஜபாளையம் பகுதியில் இவர் ஸ்கூட்டியில் சென்று கொண்டு இருந்தபோது தஞ்சை பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து பாபநாசம் நோக்கி சென்ற தனியார் டவுன் பஸ் முன்னால் சென்ற அகிலாண்டேஸ்வரி ஸ்கூட்டி மீது மோதியது. மோதிய வேகத்தில் ஸ்கூட்டியை சுமார் 500 மீட்டர் தூரம் வரை இழுத்துச் சென்ற அந்த தனியார் பஸ் அப்பகுதியில் இருந்த கார் மீதும் மேலும் சில வாகனங்கள் மீதும் மோதி நின்றது.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தில் அலற கூட வாய்ப்பு இல்லாமல் படுகாயமடைந்த அகிலாண்டேஸ்வரி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இதை பார்த்த பொதுமக்கள் அலறினர். பொது மக்களில் சிலர் அந்த தனியார் பஸ் டிரைவரை பிடித்தனர். டிரைவர் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையில் தகவலறிந்து தஞ்சை நகர போக்குவரத்து குற்றப்புலனாய்வு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அகிலாண்டேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். போதையில் எப்படி பஸ்சை இயக்கி வந்தார். உடன் பணியாற்றும் கண்டக்டர் ஏன் இதை கண்டுக் கொள்ளவில்லை என்று பல கேள்விகள் எழுகின்றன. ஸ்கூட்டி மீது மோதிய வேகத்தில் பஸ் நிற்காமல் 500 மீட்டர் தூரத்திற்கு சென்று மற்றெரு கார் மீது மோதி நின்றது என்றால் பஸ் எந்தளவிற்கு வேகமாக வந்து இருக்க வேண்டும் என்று விபத்தை பார்த்த மக்கள் கூறுகின்றனர்.
தஞ்சை போலீசார் சோதனை மேல் சோதனை நடத்தி கஞ்சாவை பறிமுதல் செய்தாலும் மாநகர் முழுவதும் கஞ்சா விற்பனை மறைமுகமாக நடந்துதான் வருகிறது என்கின்றனர் பொதுமக்கள். கடந்த வாரத்தில் கஞ்சா போதையில் வாலிபர் ஒருவர் கரந்தையில் வியாபாரியை வெட்டி பணம் பறித்த சம்பவமும் நினைவுக்கூரத்தக்கது. அந்த வியாபாரி இறந்து கடையடைப்பு போராட்டமும் நடந்தது. இப்படி தஞ்சை நகரில் உலா வரும் கஞ்சாவை முழுமையாக ஒழிக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்