ஆன்லைன் வகுப்பு: வீடியோ வெளியிட்டு விழிப்புணர்வு தந்த எஸ்.பி!
மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் இணையதள வகுப்பு குறித்த விழிப்புணர்வை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கியதை அடுத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு முதல் முறையாக அமல்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் காலவரையறை இன்றி மூடப்பட்டன. தொடர்ந்து கொரோனா வைரஸ் வேகமாகப் பரவியதால் 2020- 21ஆம் கல்வி ஆண்டுக்காகக் கடந்த ஜூன் மாதத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்காமல், ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து ஊரடங்கில் படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் பிப்ரவரி மாதத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இருப்பினும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தாக்கம் காரணமாக மீண்டும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. இதன் காரணமாக இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்புகள் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இதற்காக செல்போன், கணினிகளை மாணவ-மாணவிகள் அதிகம் பயன்படுத்த வேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் அவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இதனால் ஒவ்வொரு மாணவர்களுக்கும் அவர்கள் வீடே வகுப்பறை என்றாகிவிட்டது. அதனால் மாணவர்கள் பாடங்களை முறையாக பின்பற்றுகிறார்களா? என்பதை பெற்றோர்கள் தான் கவனிக்க வேண்டும். மேலும் ஆன்லைன் கல்வி பயிலும் மாணவர்களுக்கு, பாதுகாப்பான மற்றும் நேர்மறையான சூழலை உருவாக்குவதை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும். இது தவிர மாணவர்களை அவர்களது வயது வாரியாக கண்காணித்து, அவர்களின் தேவைகளை அறிந்து வழிநடத்த வேண்டியது பெற்றோர்களின் கடமை என மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்புகள் தவிர்க்க முடியாதது என்பதால் செல்போன், கணினிகளை மாணவ-மாணவிகள் அதிகம் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதேவேளையில் கல்வியும் அவசியம் என்பதால் பாதுகாப்பை உணர்ந்து மாணவ-மாணவிகள் தங்களின் ஆன்லைன் வகுப்பு முடிந்ததும் செல்போன், கணினியிடம் இருந்து விலகி இருக்கவேண்டும்.
இதற்கிடையே தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை அடுத்து தொற்றுப் பரவல் படிப்படியாக குறைந்து வரும் சூழலில், தற்போது பள்ளிகள் மூடப்பட்டுள்ளன நிலையில் ஆண்ட்ராய்டு மொபைல்கள் மூலமாக பாடங்கள் ஆன்லைன் முறையில் நடத்தப்படுகிறது. ஆண்ட்ராய்டு செல்போன்களில் ஆபத்தான இணையதளங்களை பள்ளி மாணவ-மாணவிகள் பயன்படுத்தாமல் இருப்பது குறித்து மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுகுணா சிங் ஒரு விழிப்புணர்வு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் எவ்வாறு யூடியூப், கூகுள், ப்ளைஸ்டோர் உள்ளிட்டவற்றில் எவ்வாறு குழந்தைகளுக்கு தொடர்பில்லாத பதிவுகளை தடை செய்வது குறித்து செயல் முறை விளக்கத்துடன் கூடிய அந்த வீடியோ மூலம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆபத்தான இணையதள விளையாட்டுகள் மற்றும் இணையதள பக்கங்களில் இருந்து குழந்தைகளை காப்பாற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.