கோடை கோபம் குமுற, காணவில்லை இளநீரை: மக்கள் பார்வை திரும்பியது கரும்பு ஜூஸ் பக்கம்
இளநீர் உற்பத்தியில் தமிழகமும், கர்நாடகமும் முன்னிலை வகிக்கின்றன. கடந்த டிசம்பர் மாதத்தில் இளநீர் வரத்து 6 லட்சமாக இருந்தது. பிப்ரவரி மாதத்தில் 2.50 லட்சமாக குறைந்தது.

தஞ்சாவூர்: கோடையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இளநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தேவையை விட வரத்து குறைவாக இருப்பதால் ஒரு இளநீரின் விலை 80 ரூபாயைக் கடந்து விற்பனையாகிறது. இதனால் நடுத்தர மக்களின் கவனம் கரும்பு ஜூஸ் பக்கம் திரும்பி உள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகம் இருந்து வருகிறது. அக்னி நட்சத்திரம் ஆரம்பிப்பதற்கு முன்பே வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. இதனால் மதிய வேளைகளில் மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். வெயில் தாக்கத்தால் இளநீர், பழங்கள், ஜூஸ், சர்பத், நுங்கு போன்றவற்றின் விற்பனை அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடந்த மாதத்தில் இருந்தே இளநீர் விலை அதிகரித்துக் கொண்டே இருந்தது. சாதாரணமாக கடந்த கோடைகாலத்தில் ரூ.35, ரூ.40 என்ற விலையில் விற்பனையாகி வந்த இளநீர் இருமடங்கு விலை உயர்ந்து ரூ. 80 முதல் விற்பனையானது..
இளநீர் உற்பத்தியில் தமிழகமும், கர்நாடகமும் முன்னிலை வகிக்கின்றன. கடந்த டிசம்பர் மாதத்தில் இளநீர் வரத்து 6 லட்சமாக இருந்தது. பிப்ரவரி மாதத்தில் 2.50 லட்சமாக குறைந்தது. தற்போது ஒன்றேகால் லட்சமாக குறைந்துள்ளது. ஆனால், இளநீர் தேவை 4 லட்சமாக அதிகரித்துள்ளது. கடும் வெயிலால் விளைச்சல் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இளநீரின் கொள்முதல் விலை 49 ரூபாயாக உயர்ந்துள்ளது. சில்லரை விலையில் 80 - 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கத்திரி வெயில் முடியும் மே மாத இறுதி வரை இந்த விலை உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
தஞ்சை மாவட்டத்தின் பேராவூரணி, பட்டுக்கோட்டை மற்றும் ஒரத்தநாடு ஆகிய பகுதிகளில் தென்னை சாகுபடி அதிகம். கடந்த சில மாதங்களாக தேங்காய்க்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. இப்பகுதி விவசாயிகளிடம் இருந்து மட்டை உரிக்காத தேங்காயை வியாபாரிகள் ரூ.37 முதல் ரூ.40 வரை விலைக்கு வாங்கி வந்து விற்பனை செய்தனர். பின்னர் விலை குறைந்து ரூ.17, ரூ.18 வரைக்கும் வந்தது. மீண்டும் தற்போது ரூ.20 முதல் ரூ_22 வரை விற்பனை ஆகி வருகிறது. பட்டுக்கோட்டை பகுதிகளில் இளநீர் இறக்குவது குறைவுதான். கஜா புயலுக்கு பின்னர் ஒரு சில இடத்துல விவசாயிகள் குட்டை ரகம் பயிரிட்டனர்.
அதுதான் இளநீருக்கு பயன்படுத்திட்டு கொண்டு உள்ளனர். தஞ்சை மாவட்ட இளநீர் வியாபாரிகள் வீரசிங்கம்பேட்டை, மாத்தூர், வல்லம், திருவையாறு பகுதியிலிருந்துதான் அதிகம் இளநீரை வரவழைத்து விற்பனை செய்கின்றனர். தேங்காய்க்கு நல்ல விலை கிடைப்பதால் இளநீர் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாம். இதனால் சில வியாபாரிகள் திருச்சிக்கு வரும் கோயம்புத்தூர், பொள்ளாச்சி இளநீர் காய்களை அங்கிருந்து கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். வாகன வாடகை அதிகரித்துள்ளதால் இளநீர் விலையும் உயர்ந்துள்ளது. கோடை வெயில் தாக்கம் அதிகம் இருப்பதால் விற்பனையும் அதிகரித்துள்ளது. ஆனால் அதற்கு ஏற்ப வரத்து குறைவாகி உள்ளது.
பெரிய வகை இளநீர் ரூ.70 முதல் ரூ.80 வரையும், சிறு வகை இளநீர் ரூ.50 முதல் ரூ.60 வரையும் விற்பனையாகி வருகிறது. ஆனால் தற்போது தேவைக்கு ஏற்ப இளநீர் வரத்து இல்லை. முன்பு ஒரு நாளைக்கு 500 இளநீர் வரை விற்பனை செய்து வந்த வியாபாரிகளுக்கு இப்போது 100 இளநீர் கிடைப்பதே குதிரைக்கொம்பாக உள்ளது. கோயம்புத்தூர், பொள்ளாச்சி பகுதிகளில் இருந்து வரும் இளநீருக்கு வண்டி வாடகை மற்றும் ஆள் கூலி போக அதிக விலைக்கு விற்பனை செய்தால் மட்டுமே அசலை எடுக்க முடியும் என்ற நிலை உள்ளதாம்.
இளநீர் விலை விண்ணைத் தொடுவதால், பொதுமக்கள் குறைந்த விலையில் கிடைக்கும் நுங்கு, பதநீர் மற்றும் கரும்புச்சாறு போன்ற இயற்கை பானங்களை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர். இருப்பினும், இளநீருக்கான மவுசு குறையாததால் தட்டுப்பாடு வரும் வாரங்களில் மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற நிலையும் உருவாகி உள்ளது. நடுத்தர மக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து காத்துக் கொள்ள இளநீர் அருந்த நினைத்தால் அதன் விலை உச்சத்தில் இருப்பதால் கரும்பு ஜூஸை அதிகம் விரும்புகின்றனர். இதனால் வழக்கத்தை விட அதிகளவில் கரும்பு ஜூஸ் விற்பனை நடந்து வருகிறது. ஒரு கிளாஸ் ரூ.20க்கும் கிடைப்பதால் இதற்கு மவுசு அதிகரித்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்





















