(Source: ECI/ABP News/ABP Majha)
ஸ்டாலினின் 100 நாள் ஆட்சி சாதனை அல்ல; வேதனை...! - அர்ஜுன் சம்பத் பேட்டி
’’ஸ்டாலின் மிகவும் நல்லாட்சியை தர முடியும். அதற்கு மத்திய அரசுடன் சுமூகமான உறவை பேணி வளர்க்க வேண்டும். மத்தி அரசு உடனான மோதல் போக்கை கடைபிடிக்க கூடாது’’
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் மாட்டிறைச்சி கடையை மூடக்கோரி இன்று நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக இந்து மக்கள் கட்சி மாநிலதலைவர் அர்ஜூன்சம்பத், கும்பகோணத்திற்கு வந்தார், பின்னர் அதிகாரிகள் , நடத்திய பேச்சு வார்த்தையை அடுத்து ஆர்ப்பாட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர், கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன் சம்பத், ,
கோயில் நகரம் என போற்றப்படும் கும்பகோணத்தில் பக்தர்களின் மனம் புண்படும் விதமாக, எவ்வித அனுமதியும் இன்றி, ஒரு மாட்டு இறைச்சி கடை அமைக்கப்படுள்ளது கண்டனத்திற்குரியது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம், போலீஸாரிடம் தெரிவித்தும் அவர்கள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மாட்டு இறைச்சி கடை தொடர்ந்து நடத்தப்படுகிறது. உணவகம் என்ற பெயரில் மாட்டு இறைச்சி விற்பனை, மாட்டு இறைச்சி பிரியாணியை விற்பனை செய்து வருகின்றனர்.
அந்த மாட்டு இறைச்சி கடையை நடத்துவர்கள், மத அமைப்பினர், விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்ட் கட்சி போன்றவர்களுடன் உறவு வைத்துக்கொண்டு, உணவகம் என்ற பெயரில் இப்பகுதியில் பதட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகின்றனர். இதுபோன்ற கடைகளை தமிழகம் முழுவதும் செயல்படுத்தி வருகின்றனர். இது அநீதியான ஒன்று. இஸ்லாமியர்கள் மாட்டு இறைச்சி தான் உண்ண வேண்டும் என்கிற அவசியம் கிடையாது. அப்படியாக குரானிலும் கூறப்படவில்லை. இது இஸ்லாமியர்களுக்கும் எதிரானது.
இன்றைக்கு இஸ்லாமியர்கள் பலரும் சைவத்தை உணவாக சாப்பிடுகிறார்கள். இந்துக்கள் மாடுகளை புனிதமாக போற்றி வருகிறார்கள். அவர்களின் மனதை புண்படுத்தும் விதமாக திராவிட கழகங்களுடன் சேர்ந்துக்கொண்டு சதி வேலையை செயல்படுத்தி வருகிறார்கள்.
கேளரா மாநிலத்தில் மாட்டு இறைச்சியை எப்படி ஒரு உணவாக மாற்றினார்களோ, அதை போல தமிழத்திலும் மாற்ற நினைக்கிறார்கள். மாட்டு இறைச்சி விற்பனைக்கு அரசு தடை செய்ய வேண்டும். கும்பகோணத்தில் மாட்டு இறைச்சியை கடையை அகற்ற வேண்டும். மாட்டு இறைச்சி விற்பனைக்கு எதிராக இந்து மக்கள் கட்சி சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளுக்கு பலருக்கும் கொலை மிரட்டல் போன் வந்துள்ளது. இது மிகவும் ஆபத்தான விஷயம்.
இதற்கு பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிகிருல்லாவும் இறைச்சிக்கு கடைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். தி.மு.க அரசு 100 நாள் சாதனை என விளம்பரம் படுத்திக்கொள்ளுகிறார்கள். ஆனால் தமிழக மக்களுக்கு 100 நாள் சாதனை அல்ல; வேதனைதான். இப்பவும் காலம் கடந்து விடவில்லை. தி.மு.க. 10 ஆண்டுக்கு பிறகு ஆட்சிக்கு வந்துள்ளது. முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின் மிகவும் நல்லாட்சியை தர முடியும். அதற்கு மத்திய அரசுடன் சுமூகமான உறவை பேணி வளர்க்க வேண்டும். மத்தி அரசு உடனான மோதல் போக்கை கடைபிடிக்க கூடாது.
நெற்பயிர்களுக்கான பயிர் காப்பீட்டை தமிழக அரசு செய்ய தவறியுள்ளது. இதனால் சுமார் 3.50 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பாதுகாப்பற்ற சூழலில் உள்ளனர். இதுவரை தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. கொரோனவையும் தமிழக அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை, இதற்கு திமுகவின் நிர்வாக கோளாறுதான் காரணம்.
அதே போல நிதிசுமை அதிகரித்துள்ளது. நாள் ஒன்றுக்கு தமிழக அரசு 400 கோடி ரூபாய் வரை கடன் வாங்கி வருகிறது. எந்தவிதமான நல திட்டங்கள், வளர்ச்சி திட்டங்களுக்கு திட்டமிடவில்லை. நிதி அமைச்சர் மக்களை அச்சுறுத்துவிதமாக கடன் சுமை இருப்பதாக பேசியுள்ளார். கடன் சுமை குறைப்பதற்கு என்ன நடவடிக்கையை எடுத்துள்ளது போல் தெரியவில்லை.
நிதி அமைச்சர் மத்திய அரசிடம் மோதல் போக்கை தான் கடைபிடிக்கிறார். அந்த வகையில், பட்ஜெட் கூட்டத்தொடரில் கடன் சுமையை குறைப்பது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவது போன்ற விசயங்களை பேசாமல், நீட் தேர்வு, சி.ஏ.ஏ., என மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் போட்டுள்ளார். இதை எல்லாம் திசை திருப்பும் விதமாக, தங்களுக்கு உள்ள ஊடகபலத்தை கொண்டு பொய்யாக விளம்பரம் செய்துக்கொள்ளுகிறார்கள். தி.மு.க. தாங்களின் போக்கை மாற்றிக்கொண்டு நல்லாட்சியை தர வேண்டும்.
தமிழகத்தில், இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சுமார் 43 ஆயிரம் திருக்கோயில்களில் சுமார் 35 ஆயிரம் திருக்கோயில்களில் ஏற்கனவே பல்வேறு சாதியினரும் அர்ச்சகராகவும், பூசாரிகளாகவும் உள்ளனர். தமிழக அரசு, வேண்டும் என்றே இதில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது, பூசாரி, அர்ச்சகர் நியமனத்தில் அரசு தலையிட வேண்டிய அவசியம் இல்லை. இதனை அறங்காவலர் குழுவும் அந்த அந்த ஊர் பொது மக்களும் அங்குள்ள பாரம்பரிய முறைப்படி முடிவு செய்ய வேண்டியது. திருக்கோயில் நிர்வாக அலுவலரை வேண்டுமானால் அரசு நியமிக்கலாம் என்றார்.
பேட்டியின் போது இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொது செயலாளர் குருமூர்த்தி, அகிலபாரத ஆன்மீகப்பேரவை இளைஞர் அணி பொது செயலாளர் கண்ணன், சிவசேனா தஞ்சை மாவட்டப்பொது செயலாளர் குட்டிசிவக்குமார், மாநில துணை தலைவர் புழவஞ்சி போஸ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.