மயிலாடுதுறையில் கொட்டும் மழையில் 90 வயது தாயை வீட்டை விட்டு வெளியேற்றிய மகன்கள்
’’உயிர் வாழ நடவடிக்கை அரசு உதவு வேண்டும் இல்லை எனில் தன்னை கருணை கொலை செய்து விடுங்கள் என கண்ணீர் மல்க கோரிக்கை’’
மயிலாடுதுறை அடுத்த வாணாதிராஜபுரத்தை சேர்ந்த 90 வயதான தாவூத்பீவிக்கு இரண்டு மகன் ஒரு மகள் உள்ள நிலையில், இவர் தனது கணவனை இழந்த பின்னர் தனது வீட்டில் இளைய மகன் அசரப்அலியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மகன் அசரப்அலி வெளிநாடு சென்றதும் மருமகள் மாமியார் தாவூத்பீவியை கடந்த மாதம் வீட்டைவிட்டு வெளியை விரட்டி உள்ளனர்.
அதனை தொடர்ந்து அதே ஊரில் வசித்துவரும் தனது பெரிய மகனிடம் தாவூத்பீவி சென்றுள்ளார். அவரும் பெற்ற தாய் மீது சிறிதும் இரக்கம் இன்றி விரட்டி அனுப்பியுள்ளார். மகள் வீட்டிற்கு சென்றவரை அவரும் ஏற்று கொள்ளாமல் வெளியை அனுப்பியுள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான தாவூத்பீவி வானாதிராஜபுரம் ஊர் பஞ்சாயத்தாரிடம் இதுகுறித்து முறையிட்டுள்ளார். ஆனால் ஊர் பஞ்சாயத்தார் தாவூத்பீவியை தங்களுடன் வைத்து கவனித்து கொள்ள வலியுறுத்தியுள்ளனர். அதற்கும் அவரது மகன்கள் ஒத்துக்கொள்ளவில்லை.
இந்த சூழலில் அக்கம்பக்கத்தினர் அளித்த உணவை உண்டு வந்த தாவூத்பீவி, மயிலாடுதுறையில் கடந்த மாதம் 4 ஆம் தேதி மாவட்ட ஆட்சியரின் மனுநீதி நாள் முகாமில் கலந்துகொண்டு என் கடைசி காலத்தில் என்னை என் பிள்ளைகள் எனது கணவர் உழைப்பில் உருவான வீட்டை பிடுங்கி அதில் வசித்து வருவதாகவும், ஒருவேளை உணவு கூட கொடுக்க மன இன்றி என்னை வீட்டை விட்டு துரத்தி வீட்டினர் என்றும், எனக்கு உரிய சொத்தை தன் பெற்ற பிள்ளைகளிடம் இருந்து மீட்டு தரும் பட்சத்தில் அதனை விற்று அந்த பணத்தை வங்கியில் செலுத்தி அதில் வரும் வட்டியில் தனது இறுதி காலத்தை கழித்துக் கொண்டு, நிம்மதியாக வாழ்வேன் எனவும், இல்லை என்றால் என்னை கருணை கொலை செய்துவிடுங்கள் என்று மாவட்ட ஆட்சியர் லலிதாவிடம் மனு அளித்தார்.
மனுவை பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் லலிதா வருவாய் கோட்டாட்சியர் பாலாஜியிடம் தாவூத்பீவியின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி உரிய தீர்வு பெற்றுத்தர உத்தரவிட்டார். இதனை அடுத்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி , மூதாட்டியின் மகன்களை விசாரணைக்கு வர உத்தரவிட்டு அதுவரை இளைய மகன் வீட்டில் தாய் தாவூத்பீவி பாதுகாப்பாக இருப்பதற்கு பேசி நடவடிக்கை எடுத்திருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் மழை நேரத்தில் வீட்டைவிட்டு வெளியேற்றி வாசல்கதவை இளைய மகன் அசரப்அலியின் மனைவி பூட்டியுள்ளார். இதனால் செய்வதறியாது தவித்த 90 வயதான தாய் கொட்டும் மழையில் நனைந்தபடியே எதிர்வீட்டில் கையேந்தி உண்டு வருகிறார். மேலும் தான் உயிர்வாழ நடவடிக்கை அரசு உதவு வேண்டும் இல்லை எனில் தன்னை கருணை கொலை செய்து விடுங்கள் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார்.