தாத்தாவுடன் சேர்ந்து அப்பாவை இரும்புக்கம்பியால் அடித்துக் கொன்ற மகன்: ஒரத்தநாடு அருகே பரபரப்பு
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே தாத்தாவுடன் சேர்ந்து அப்பாவை இரும்பு கம்பியால் அடித்து படுகொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே தாத்தாவுடன் சேர்ந்து அப்பாவை இரும்பு கம்பியால் அடித்து படுகொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார்
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கண்ணந்தன்குடிமேலையூர் செட்டிமண்டபம் பகுதியை சேர்ந்தவர் சமரசம் (64), டீ மாஸ்டராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி கெளரி. இவர்களுக்கு சத்யா என்ற மகளும், வீரமணி (26) என்ற மகன் உள்ளனர். சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக கருத்து வேறுபாடு காரணமாக சமரசம் தனது மனைவி கௌரியை விட்டு பிரிந்து வசித்து வந்துள்ளார்.
கிராமத்தில் கிடா வெட்டுக்கு வந்த மகன்
சமரசத்தின் மகன் வீரமணி திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் கிராமத்தில் நடந்த கிடாவெட்டு பூஜைக்காக வீரமணி திருப்பூரில் இருந்து ஊருக்கு வந்தார். ஆனால் கிடாவெட்டு பூஜைக்கு செல்லாமல் சமரசம் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை சமரசம் இருந்த வீடு திறந்து கிடந்தது. அங்கு சமரசம் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து ஒரத்தநாடு போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஒரத்தநாடு ஏ.எஸ்.பி., சகுனாஸ், இன்ஸ்பெக்டர் சுதா ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். பிறகு, போலீஸ் மோப்பநாய் சோழா, தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் சோதனை செய்யப்பட்டது.
மோப்ப நாய் சோழா கவ்வி எடுத்த ரத்தக்கறை சட்டை
சம்பவ இடத்தை மோப்பம் எடுத்த மோப்பநாய் சோழா சுமார் இரண்டு கிலோமீட்டர் ஓட்டமாய் ஓடியது. பின்னர் கண்ணந்தங்குடிகீழையூர் கண்டப்பிள்ளை தெருவில் வசிக்கும் சமரசம் மகள் சத்யாவின் வீட்டில் போய் மோப்ப நாய் சோழா சென்றடைந்தது. தொடர்ந்து அங்கு ரத்த கறையுடன் இருந்த சட்டையை கவ்வி எடுத்தது.
விசாரணையில் வெளியான திடுக் தகவல்கள்
இதையடுத்து சமரசத்தின் மகள் சத்யாவிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். தொடர்ந்து அந்த சட்டை தம்பி வீரமணியுடையது என்று தெரிய வந்தது. இதையடுத்து அங்கு இருந்த வீரமணியை பிடித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற மகன்
குடும்பத் தகராறில் சமரசமும் அவரது மனைவி கௌரியும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இருப்பினும் சமசரம் குடிப்போதையில் அடிக்கடி கெளரியிடம் சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதை போல நேற்றுமுன்தினம் இரவும் குடிபோதையில் சமரசம் கௌரியிடம் மீண்டும் தகராறு செய்துள்ளார். அப்போது இதை பார்த்த வீரமணிக்கு மிகவும் ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனது தந்தையின் வீட்டிற்கு சென்று அவரை இரும்பு கம்பியால் தாக்கி படுகொலை செய்து விட்டு அக்கா சத்யா வீட்டிற்கு ரத்தக்கறையுடன் உள்ள சட்டையுடன் வந்துள்ளார்.
பின்னர் அந்த சட்டையை துவைத்து காய வைத்ததை வீரமணி ஒப்புக்கொண்டார். மேலும் வீரமணிக்கு இந்த கொலைக்கு கௌரியின் தந்தை கலியபெருமாள் உதவி செய்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஒரத்தநாடு போலீசார் வீரமணியை நேற்று கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கலியபெருமாளை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ஒரத்தநாடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.