சீர்காழி அருகே பயிர் பாதிப்பை பார்வையிட வராத அதிகாரிகள் - விவசாயிகள் சாலை மறியல்
சீர்காழி அருகே பயிர் பாதிப்புகளை பார்வையிட வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துவிட்டு வராததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் தென்மேற்கு பருவழை முடிந்து, வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. கடந்த மாதம் 29 -ம் தேதி தாமதமாக வடகிழக்கு பருவமழை தொடங்கினாலும் கூட தற்போது தமிழகம், புதுச்சேரி, காரைக்காலின் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அதிகபட்சமாக 19 சென்டிமீட்டர் மழை பதிவானது. இதனால் சீர்காழி தாலுக்கா முழுவதும் பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கியது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பெய்த கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை மயிலாடுதுறை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அமுதவல்லி மற்றும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா பார்வையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தென்னாம்பட்டினம், எடமணல், வழுதலைகுடி, திருமுல்லைவாசல் உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய வருவதாக கூறிய நிலையில் காலை 9 மணியிலிருந்து விவசாயிகள் காத்திருந்த நிலையில் இந்த பகுதிகளுக்கு அதிகாரிகள் யாரும் வராததால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திருமுல்லைவாசல் - சீர்காழி சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மூழ்கி பாதிப்படைந்த பயிர்களை கையில் வைத்துக்கொண்டு சாலை மறியலில் விவசாயிகள் ஈடுபட்டனர். பாதித்த பகுதிகளை பாரபட்சம் இல்லாமல் பார்வையிட்டு கணக்கெடுப்பு செய்து முழுமையான நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை நகராட்சி 6வது வார்டில் நடைபெற்ற பகுதி சபை கூட்டத்தில் பாதாள சாக்கடை பிரச்சனை மற்றும் நகராட்சியால் பல்வேறு இடங்களில் பொதுவெளியில் கொட்டப்படும் குப்பைகளை அகற்றி நிரந்தர தீர்வு காண பொதுமக்கள் வலியுறுத்தினர்.
ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுவதைப் போன்று நகர் பகுதிகளிலும் பகுதி சபை கூட்டங்களை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் நவம்பர் 1 -ஆம் தேதி முதல் பகுதி சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி மயிலாடுதுறை நகராட்சி 6 -வது வார்டில் நேற்று நடைபெற்ற பகுதி சபை கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளர்களாக மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ராஜகுமார், நகராட்சி நகர மன்ற தலைவர் செல்வராஜ் கலந்து கொண்டனர்.
அப்போது வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை நகராட்சி ஊழியர்கள் பொது இடங்களில் கொட்டுவதை தடுக்க வேண்டும், வார்டில் பாதாள சாக்கடை நீர் வழிந்தோடுவதை சரி செய்து சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும், காவிரி ஆறு நாலுகால் மண்டபத்தில் மது அருந்துவதை தடுத்து, தூய்மைப்பணி மேற்கொள்ள வேண்டும், சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மற்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து வார்டின் வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.