தஞ்சை மாநகராட்சியில் பளபளக்குது சாலைகள்... குவிகிறது மேயருக்கு பாராட்டுக்கள்
தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகத்தினர் மக்களின் புகார்கள் மீது உடன் நடவடிக்கை மேற்கொள்கின்றனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் நகரின் பல்வேறு பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறையுடன் சேர்ந்து மாநகராட்சி நிர்வாகம் புதிதாக சாலைகள் அமைத்துள்ளது. இதனால் தஞ்சை நகரில் சாலைகள் புத்தம் புதிதாக மிளிர்கிறது. இதையடுத்து மாநகராட்சி மேயருக்கு பொதுமக்கள் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூரில் பெரியகோயில், சிவகங்கை பூங்கா, அரண்மனை, புன்னைநல்லூர் மாரியம்மன்கோயில் என்று ஏராளமான சுற்றுலாத்தலங்கள் உள்ளன. இதனால் தஞ்சைக்கு வரும் வெளி மாவட்ட, மாநில சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகம். தஞ்சாவூரில் பல கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
தஞ்சை நகர் பகுதியில் வாகனப் போக்குவரத்து எப்போதும் மிகுந்து காணப்படும். இந்நிலையில் தஞ்சை மாநகரில் ஒரு சில பகுதிகளில் சாலைகள் பழுதடைந்து காணப்பட்டது. குறிப்பாக ராஜா மிராசுதார் மருத்துவமனை சாலை, பெரியகோயில் பகுதி, மேம்பாலம் பகுதியில் உள்ள சாலை, மணிமண்டபம் பகுதி, மேரீஸ்கார்னர் பகுதியில் உள்ள சாலைகளை மாநகராட்சி நிர்வாகம் அவ்வபோது சீரமைத்து வந்தது.
இந்த சாலைகளை புதுப்பித்து தர வேண்டும் என்று பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதன் பேரில் உடனடி நடவடிக்கையாக மேயர் சண்.ராமநாதன் மற்றும் மாநகராட்சி நிர்வாகிகள் நெடுஞ்சாலைத்துறையுடன் கலந்து பேசினர். இதையடுத்து மணிமண்டபம் பகுதியில் இருந்து மேரீஸ்கார்னர் மேம்பாலம் வரையுள்ள சாலையை அகலப்படுத்தி புதிதாக அமைத்துள்ளனர். இதேபோல் பெரிய கோயில் பகுதி சாலை, ராஜா மிராசுதார் மருத்துவமனை சாலை, மேம்பாலம் பகுதி வரை உள்ள சாலை என சீரமைக்கப்பட்டு புத்தம் புதிதாக மிளர்கிறது. இதனால் போக்குவரத்து இடையூறு இன்றி வேகமாக செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் கூறியதாவது: தஞ்சை மாநகராட்சி பகுதியில் உள்ள சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறையுடன் இணைந்து மாநகராட்சி நிர்வாகம் சாலைகளை புதுப்பித்துள்ளது. மக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறோம். சாலைகள் சேதமடைந்து இருந்ததால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வந்தது. இதனால் சாலைகள் அகலப்படுத்தி முழுமையாக புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக பெரிய கோயிலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள், பக்தர்கள் சிரமப்படக்கூடாது என்பதற்காக அப்பகுதியில் சாலை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. மக்களின் தேவைகளை அறிந்து உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகத்தினர் மக்களின் புகார்கள் மீது உடன் நடவடிக்கை மேற்கொள்கின்றனர். குடிநீர் பிரச்னை, பாதாள சாக்கடை அடைப்பு, சான்றிதழ்கள் பெறுவது உள்ள குறைபாடுகள் என்று எந்த புகாராக இருந்தாலும் உடன் அதை நிவர்த்தி செய்கின்றனர். அந்த வகையில் பெரிய கோயில் பகுதி சாலை, மேரீஸ்கார்னர் சாலை, மணிமண்டபம் சாலை, ராஜா மிராசுதார் மருத்துவமனை சாலை அனைத்தும் புதிதாக போடப்பட்டுள்ளது. இதனால் தஞ்சைக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் சிரமமின்றி செல்ல நடவடிக்கை எடுத்த மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.

