ரேஷன் கடைகளில் சர்வர் கோளாறு - பொருட்கள் வாங்க முடியாமல் தஞ்சாவூர் மக்கள் கடும் அவதி
’’குடும்பத்தில் உள்ள ஒருவர் மட்டும் பொருட்களை வாங்கி செல்ல வேண்டும் என உத்தரவு உள்ளதால், காலையில் ரேசன் கடைக்கு சென்றால், மதியம் வரை நேரமாகி விடுகிறது’’
தஞ்சாவூர் மாவட்டத்தில் 1,153 ரேஷன் கடைகள் உள்ளன. இதன் மூலம் 6 லட்சத்தி 93 ஆயிரத்தி 481 குடும்பத்தினர் மாதந்தோறும் அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை, பாமாயில், மண்ணெண்னை ஆகியவற்றை வாங்கி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க, பயோமெட்ரிக் முறை பயன்படுத்தப்பட்டு, குடும்ப உறுப்பினர்கள் கைரேகை பதிவு செய்ததும், அவை உறுதி செய்யப்பட்ட பின் பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பயோ மெட்ரிக் இயந்திரத்தில் இணைக்கப்பட்டுள்ள இணையதளம் (சர்வர்) சரிவர இணைப்புகள் கிடைக்காததால், பொது மக்கள் கடந்த ஒரு வார காலமாக அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் பொருட்கள் வழங்க முடியவில்லை. பொருட்கள் பெற சென்றால், நாளைக்கு வாருங்கள் என திருப்பி அனுப்புகின்றனர். இதனால் பணியாளர்களுக்கும் - பொதுமக்களுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்ட சில நேரங்களில் தகராறு ஏற்படுகிறது.
மாவட்டத்தில் குறிப்பாக தஞ்சாவூர் சீனிவாசபுரம், வேங்கராயன்குடிக்காடு, நாஞ்சி கோட்டை, பட்டுக்கோட்டை குறிச்சி, பேராவூரணி, சேதுபாவாசத்திரம் போன்ற மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் உள்ள ரேஷன் கடைகளில் இணைப்புகள் கிடைக்காததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இது குறித்து ரேஷன் கடை பணியாளர்கள் கூறுகையில், கடந்த ஒரு வார காலமாக சர்வர் குளறுபடியால் பொருட்களை முறையாக வழங்க முடியவில்லை. இது குறித்து பொது மக்களிடம் கூறினால், அவர்களுக்கு புரியவதில்லை. இதனால் தினந்தோறும் பொது மக்களுக்கும் எங்களுக்கும் தகராற ஏற்படுகிறது. இதுதொடர்பாக மேலதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளோம். தற்போது சர்வர் குளறுபடியாக இருந்தால் வாடிக்கையாளர் ஒருவரை 20 நிமிடம் காத்திருக்குமாறு கூறி, அவரிடம் கையெப்பம் பெற்று அதன்பின்னர் பொருட்கள் வழங்கலாம் என கூறியுள்ளனர். இந்த முறையிலும் காலதாமதம் ஏற்படுவதால் பொதுமக்கள்- பணியாளர்கள் இடையே தேவையில்லாத பிரச்சினை ஏற்படுகிறது. இதனை நிவர்த்தி செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இது குறித்து பொது மக்கள் கூறுகையில், தஞ்சை மாவட்டத்தில் இன்னமும் பெரும்பாலான பகுதிகளில் இணையதளம் சரியாக கிடைப்பதில்லை. அப்பகுதிகளில் பயோமெட்ரிக் முறையை பயன்படுத்துவதால், குளறுபடிகள் ஏற்படுகிறது. ஒரு சில நேரங்களில் வேலை செய்தாலும், மிகவும் தாமதமாகிறது. குடும்பத்தில் உள்ள ஒருவர் மட்டும் பொருட்களை வாங்கி செல்ல வேண்டும் என உத்தரவு உள்ளதால், காலையில் ரேசன் கடைக்கு சென்றால், மதியம் வரை நேரமாகி விடுகிறது. கடந்த காலங்களில் ரேசன் கார்டை அருகிலுள்ளவர்களிடம் கொடுத்து, பொருட்களை வாங்கி வரச்சொல்வோம். ஆனால் இப்போது இல்லை என்பதால், ரேசன் கடைகளில் பொருட்களை வாங்குவதில் சிரமமாகி விடுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம், அனைத்து ரேசன் கடைகளிலும் இணைய தளம் கிடைக்கும் வகையில் சிறிய அளவில் டவர் வைக்க வேண்டும் என்றனர்.