அரசு உத்தரவை மீறி பள்ளிகளுக்கு விடுமுறை - சீர்காழியில் தனியார் பள்ளிகளுக்கு எதிராக போராட்டம்
சீர்காழியில் அரசு உத்தரவை மீறி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதை கண்டித்து பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என்ற தனியார் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 3,500 க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றன. இப்பள்ளியில், பிளஸ்-2 மாணவிகள் தங்கி பயிலும் வகையில் விடுதி உள்ளது. இந்த விடுதியில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் கிராமம் மேற்கு தெருவை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள் 17 வயதான ஸ்ரீமதி என்ற மாணவி தங்கி பிளஸ் 2 படித்து வந்தார்.
இந்நிலையில் பொறியாளர், மருத்துவர் என சாதிக்கும் கனவுடன் இருந்த மாணவி ஸ்ரீமதி, கடந்த 13 ம் தேதி பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனால் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். பள்ளி விடுதியின் 3வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் கூறினாலும், மாணவியின் பெற்றோர் தரப்பில் சந்தேகம் எழுந்ததுதொடர்பாக அவர்கள் சின்னசேலம் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், மாணவி மரணம் குறித்து சந்தேக மரணம் என வழக்குப்பதிந்து காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர்.
மாணவி உயிரிழந்த மறுநாள் 14ம் தேதி மாணவியின் உடலை உடற்கூறு ஆய்வு செய்து, பெற்றோரிடம் ஒப்படைக்க காவல்துறையினர் முயன்றனர். ஆனால், மாணவியின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இதற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்கக்கோரியும், மாணவியின் சாவு குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், மாணவியின் சாவுக்கு நீதி வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவியின் பெற்றோர், உறவினர்கள், மாணவர் அமைப்பினர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கடந்த 4 நாட்களாக பள்ளி முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையே மாணவியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து இவர்களின் போராட்டம் நேற்று 5 வது நாளாக தொடர்ந்தது. ஒருகட்டத்தில் போராட்டக்காரர்கள் காவல்துறையினரின் தடுப்புகளையும் மீறி வளாகத்திற்குள் நுழைந்து, பேருந்துகள், மேஜை ,நாற்காலி என அனைத்து பொருட்களையும் தீயிட்டு கொளுத்தி பள்ளியை முழுவதுமாக சூறையாடினர்.
இந்நிலையில், பள்ளியில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று ஒருநாள் தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் இயங்காது என தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைபின் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட பள்ளிகள் இன்று வழக்கம் போல் இயங்குகின்றன. இம்மாவட்டத்தில் 55 மெட்ரிக் பள்ளிகள் ஐந்து சிபிஎஸ்சி பள்ளிகள் உள்ள நிலையில் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட பள்ளிகள் இன்று வழக்கம் போல் இயங்குகின்றன. மீதமுள்ள 50 சதவீத பள்ளிகள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுள்ளது.
இந்நிலையில் சீர்காழி காவல் நிலையம் எதிரே நாம் தமிழர் கட்சி சார்பில் அரசின் உத்தரவை மீறி தனியார் பள்ளிகள் மூடப்பட்டதை கண்டித்து சீர்காழி காவல் நிலையம் எதிரே தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது தனியார் பள்ளிகளை கண்டித்தும், அரசின் உத்தரவை மீறி விடுமுறை அளித்த தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யக் கோரியும் கண்டன முழக்கங்கள் எழுப்பினர். தொடர்ந்து சீர்காழி காவல் ஆய்வாளர் மணிமாறன் தலைமையிலான காவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 20க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதேபோன்று சீர்காழி நேதாஜி மக்கள் பொது நல அமைப்பு, சீர்காழி நகர அனைத்து வணிகர்கள் நல சங்கம் சார்பில் தனியார் பள்ளிகளை முற்றுகையிட்டு போராட்டம் அறிவித்திருந்தனர். தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய பேச்சு வார்த்தையை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்