2 மாத மீன் பிடித்தடைகாலம் - பூம்புகாரில் மின்வளத்துறை அதிகாரிகளால் முதல் நாளிலேயே மீனவர்களுக்கு ஏமாற்றம்
பூம்புகாரில் மீன்பிடி தடைகாலம் முடிவடைந்து சுருக்குமடி வலையுடன் கடலுக்குப் புறப்பட்ட விசைப்படகு மீனவர்களுக்கு மீன்வளத்துறை அதிகாரிகள் தடை உத்தரவு பிறப்பித்ததால் மீனவர்கள் கடும் கொந்தளிப்படைந்தனர்.
தமிழகத்தில் மீன்பிடி ஒழுங்கு முறை சட்டத்தின் கீழ் மீன்வளம் பாதிப்பதாக கூறி சுருக்குமடிவலை, இரட்டைமடி வலை, அதிவேக எஞ்சின் பொருத்தப்பட்ட படகு உள்ளிட்ட பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை அரசு நடைமுறைப்படுத்தியிருந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக சுருக்குமடி மற்றும் இரட்டை மடி வலைகள், அதிவேக எஞ்சின் பொருத்தப்பட்ட படகு மூலம் மீன் பிடி தொழிலில் ஈடுபட்ட வந்த மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. மேலும் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு மேம்படு தொழில் செய்யும் மீனவர்களும் சுருக்குமடி பயன்படுத்தும் மீனவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த சூழலில் உச்ச நீதிமன்றம் பல்வேறு விதிமுறைகளை வகுத்து சுருக்குமடி மற்றும் இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்க அனுமதி வழங்கியது. அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த பூம்புகாரில் 60 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்து விசைப்படகு மீனவர்கள் சுருக்குமடி வலையுடன் கடலுக்கு மீன் பிடிக்க தயாராகிக் கொண்டிருந்தனர்.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு விசைப்படகு மீனவர்கள் சுருக்குமடி வலையுடன் கடலுக்குள் மீன் பிடிப்பு முறையை தொடங்கி வைக்க உத்தர பிரதேச மாநில மீன்வளத்துறை அமைச்சரும், தேசிய மீனவர் கட்சியின் தேசிய தலைவருமான டாக்டர் சஞ்சய் நிஷாந்த், மற்றும் புதுடெல்லி டாக்டர் தோமர் ஆகியோர் பூம்புகாருக்கு வந்தனர். அவர்களை விசைப்படகு மீனவர் சங்க நிர்வாகிகள் வரவேற்றனர். தொடர்ந்து சுருக்குமடிவலை விசைப்படகு மீனவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகள் மூலம் சந்தித்து வரும் இன்னல்களை, தேசிய தலைவர் சஞ்சய் நிஷாந்திடம் கூறினர். மீனவர்களிடையே சஞ்சய் நிஷாந்த் கலந்துரையாடினார். இதனிடையே கடலுக்குள் மீன் பிடிக்க சுருக்கு மடி வலையுடன் தயாராக இருந்த இரண்டு விசைப்படகுகளையும், உச்ச நீதிமன்றம் தெரிவித்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றப்படவில்லை என்று கூறி கடலுக்குள் செல்ல இருந்த இரண்டு விசை படகுகளுக்கும், மீன்வளத்துறை அதிகாரிகள் அனுமதி மறுத்தனர்.
இதனால் மீனவர்கள் கடும் கோபமும் கொந்தளிப்பும் அடைந்தனர். தொடர்ந்து சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா, மீன்வளத்துறை இணை இயக்குனர் வேணுகோபால், சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் லாமேக், கடலோர காவல்படை ஆய்வாளர் வெர்ஜினியா, மற்றும் தேசிய மீனவர் கட்சி நிர்வாகிகள் விசைப்படகு மீனவ சங்க பிரதிநிதிகள் பங்கேற்ற அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில் சுருக்குமடி விசைப்படகு மீனவர்கள் தரப்பில், கடந்த மூன்று ஆண்டுகளாக மீன்பிடி தொழிலுக்கு செல்ல முடியாமல் கடுமையான கஷ்டத்திலும் நெருக்கடியிலும் கடன் பட்டு வாழ்க்கையை நடத்தி வருகிறோம். தற்போது நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் அதிகாரிகள் தொழிலுக்கு அனுமதி மறுப்பது கண்டிக்கத்தக்கது. ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் இழந்து நிற்கும் எங்களுக்கு எந்த தொந்தரவுகளும் இல்லாமல் நிம்மதியாக தொழில் செய்ய விடுங்கள் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.
கூட்டத்தின் முடிவில் நீதிமன்றம் தெரிவித்துள்ள வழிகாட்டு விதிமுறைகளின் படி ஆய்வு செய்யப்பட்டு ஒரு வாரத்திற்குள் அனுமதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, முதல் நாளில் கடலுக்கு தொழிலுக்கு செல்ல முடியாமல் மீனவர்கள் பலரும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். இதனிடையே பாதுகாப்பு கருதி பூம்புகார் துறைமுகம் பகுதியில் ஏராளமானோர் காவல்துறையினர் பாதுகாப்பிற்கு குவிக்கப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சுருக்குமடி வலையுடன் கடலுக்குள் மீன் பிடிப்பு முறையை தொடங்கி வைக்க வந்த உத்தர பிரதேச மாநில மீன்வளத்துறை அமைச்சரும், தேசிய மீனவர் கட்சியின் தேசிய தலைவருமான டாக்டர் சஞ்சய் நிஷாந்த் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்.