Pongal 2023: உயிரை பணயம் வைத்து உழைத்து, உரிய விலை கிடைக்கவில்லை - விவசாயிகள் வேதனை
சீர்காழி அருகே நெட்டிமாலை தயாரிக்கும் கிராம மக்கள், நெட்டிமாலைகளை அரசு கொள்முதல் செய்து வங்கி கடனுதவி செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் விவசாயிகளுக்கு உற்ற தோழனாய் விளங்கும் கால்நடைகளை போற்றும் வகையில் உழவர் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. பாரம்பரியமாக நடைபெற்று வரும் இந்த திருநாளன்று மாடுகளின் கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி, நெட்டி மாலைகள் அணிவித்து, பொங்கள் வைத்து கால்நடைகளுக்கு வணங்கி மகிழ்வது தமிழர்களின் பண்பாடு.
ஆண்டுதோறும் கொண்டாடப்படும் இவ்விழாவில், மாடுகளை அலங்கரிப்பதற்கான முக்கிய இடத்தை பிடிப்பது பாரம்பரிய நெட்டி மாலைகளாகும். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அருகே மேலவல்லம் கிராமத்தில் 200 -க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்கள் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆண்டின் ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய மூன்று மாதம் விவசாய வேலை வாய்ப்பின்றி அப்பகுதியில் வசிக்கும் அனைவரும் வாழ்வாதாரம் இழந்து தவித்தனர். அதனை தவிர்க்க, தங்களது குடும்பத்தை காப்பாற்ற அதே பகுதியை சேர்ந்த சிலர் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு நெட்டி மாலைகள் தயாரித்து விற்பனை செய்ய தொங்கினர்.
அதில் ஓரளவு வருவாய் கிடைத்ததால் மேலவல்லம் கிராமத்தை சேர்ந்த அனைவரும் நெட்டி மாலை தயாரிப்பில் ஈடுபடத்தொடங்கினர். தற்போது 6 வயது சிறுவர்கள் முதல் 60 வயது முதியவர்கள் வரை அனைவரும் குடும்பத்தோடு நெட்டிமாலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் விவசாய கூலி வேலை கிடைக்காத இந்த மூன்று மாதங்களில் புதுச்சேரி, வீராணம், மரக்காணம், செங்குன்றம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ஆந்திராவின் பல இடங்களுக்கு சென்று அங்கு உள்ள ஏரிகளில் இயற்கையாய் விளையும் நெட்டிக்குச்சிகளை வெட்டி எடுத்துவருகின்றனர்.
பின்னர், அவற்றை தரம்பிரித்து, சீவி, சுத்தம் செய்து பல்வேறு வடிவங்களாக வெட்டி, கலர் சாயம் நனைத்து, உலர வைக்கின்றனர். நன்றாக உலர்ந்த பின்னர் அவற்றை இணைத்து பல்வேறு வடிவ மாலையாக தயாரிக்கின்றனர். இந்த மாலையை கட்டுவதற்கு செயற்கை பொருட்களை பயன்படுத்தாமல் தாழை நார்களை மட்டுமே இவர்கள் பயன்படுத்தி வருவது தனி சிறப்பாகும். இதற்காக பல்வேறு காட்டுப் பகுதிகளுக்கு சென்று தாழை நார்களை சேகரித்துவருகின்றனர். நெட்டிக்குச்சி மற்றும் தாழை நார்களை சேகரிக்கும் போது ஆழமுள்ள நிலையில்லா தண்ணீரில் நீந்தியும், பல்வேறு விஷ ஜந்துக்கள் வாழும் காடுகளிலும் உயிரை பணயம் வைத்தே அவற்றை சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய அரசு கொண்டுவந்த ஜிஎஸ்டி வரியால் 600 ரூபாய்க்கு வாங்கிய சாயத்திற்கான மூலப்பொருட்களின் விலை தற்போது 2000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. ஏற்கனவே உயிரை பணயம் வைத்து பொருட்களை சேகரித்து வந்து மாலையாக தொடுத்து குறைந்த விலைக்கே விற்பனை செய்வதாக தயாரிப்பாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதனால் மூன்றுமாத உழைப்பிற்கு உண்டான வருவாயை கூட அவர்கள் ஈட்டமுடியவில்லை என்றும், வட்டிக்கு வாங்கிய கடனை கூட திருப்பிச்செலுத்த முடியாத நிலையில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதாகவும், எனவே, நெட்டி மாலைகளை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் கடன் தொல்லையில் இருந்து மீள்வதற்கு நெட்டி மாலை தயாரிப்பாளர்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் வழங்க வேண்டும் என்றும் மேலவல்லம் கிராமமக்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.