நீங்க மீட்காவிடில் சிலையை மீட்டுக் கொண்டு வர சட்ட நடவடிக்கை எடுப்பேன்: பொன்.மாணிக்கவேல்
இன்னும் 90 நாட்களுக்கு சிவகாமி அம்மன் பஞ்சலோக சிலையை மீட்க தமிழக அரசும், அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தஞ்சாவூர்: திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோயில் சிவகாமி அம்மனின் பஞ்சலோக சிலை அமெரிக்காவின் நியூயார்க்கில் தனியார் அருங்காட்சியகத்தில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி பொன். மாணிக்கவேல் தெரிவித்தார்.
திருச்சிற்றம்பலம் கோயிலில் சிறப்பு யாகம்
தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அமைந்துள்ள புராதனவனேஸ்வரர் கோவிலில் நேற்று கிராம மக்கள் மற்றும் ஓம் நமச்சிவாய பக்தர் குழுவின் சார்பில் நடந்த சிறப்பு யாகத்தில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி பொன். மாணிக்கவேல் கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.
பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோயில், சோழ மன்னர் பராந்தகன் என்பவரால், 1374ம் ஆண்டு கற்கோவிலாக கட்டப்பட்டது. சைவ சமய குரவர் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றது. இக்கோயிலில், மூன்று முறை சிலை திருட்டுக் குற்றங்கள் கடந்த காலத்தில் நடந்துள்ளன.
20 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட சிலை
இக்கோயிலில் இருந்து சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, சிவகாமி அம்மன் பஞ்சலோக தெய்வ திருமேனி திருடப்பட்டு மும்பை வழியாக, அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் ஒரு தனியார் அருங்காட்சியகத்தில் காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளது. அந்த அருங்காட்சியகம், சிலையை காட்சி படுத்தி தினந்தோறும் பொருள் ஈட்டி வருகிறது. தற்போது, சிவகாமி அம்மன் சிலையை ஒரு சில மாதங்களில் அருங்காட்சியகம் நிர்வாகம் ஏலம் விடுவதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த சிலை 10 கோடி ரூபாய் மதிப்பாகும்.
சிவகாமி அம்மன் பஞ்சலோக சிலையை மீட்கணும்
இதனை தடுப்பது இன்றுள்ள மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் எழுந்துள்ள ஒரு மிக முக்கிய பொறுப்பும், சவாலும் ஆகும். இன்னும் 90 நாட்களுக்கு சிவகாமி அம்மன் பஞ்சலோக சிலையை மீட்க தமிழக அரசும், அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அரசு நடவடிக்கை எடுக்க தவறும்பட்சத்தில், கிராம மக்களின் ஆதரவுடன் சிலையை மீட்டுக் கொண்டு வர சட்ட நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
சில நாட்களுக்கு முன்புதான் கிடைத்த ஜாமீன்
சிலை கடத்தல் வழக்கில், ஓய்வு பெற்ற ஐஜி-யான பொன்.மாணிக்கவேலுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது. பொன். மாணிக்கவேல் மீது சிலை கடத்தல் தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘டிஎஸ்பி காதர் பாட்ஷா வழக்கில் டிஐஜி அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியை கொண்டு என் மீதான புகார் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதற்கு மாறாக, சிபிஐ எஸ்பி என் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். ஆகவே இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்’ என அவர் கோரியிருந்தார். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது சிபிஐ தரப்பில், “மனுதாரர் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொன். மாணிக்கவேலை கைது செய்து காவலில் எடுத்து விசாரித்தால் தான், அவருக்கும் சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூருக்கும் உள்ள தொடர்பு குறித்து தெரிய வரும். எனவே முன்ஜாமீன் வழங்கக்கூடாது” என வாதிடப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி பரதசக்கரவர்த்தி முன்பு கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில், “உயர் நீதிமன்ற உத்தரவுபடியே பொன். மாணிக்கவேல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கப்படும்” எனக் கூறப்பட்டது. இருப்பினும் பொன்.மாணிக்கவேல் தரப்பில், “என்னுடைய பணிக்காலத்தில் ஏராளமான சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. என் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை. எனவே, முன் ஜாமீன் வழங்க வேண்டும்” எனக் கூறப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “பொன்.மாணிக்கவேலுக்கு முன்ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர் நான்கு வாரம் சென்னை சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்” என உத்தரவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.