மயிலாடுதுறை: போதைப் பொருள் பழக்கத்தின் தீமையை எடுத்துக்கூறிய பொம்மலாட்டம் நிகழ்ச்சி
போதைப் பொருள் பழக்கத்தின் தீமைகளை எடுத்துக்கூறும் வகையில் மயிலாடுதுறை அருகே நடைபெற்ற பொம்மலாட்டம் நிகழ்ச்சியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அசையாமல் அமர வைத்த கலைமாமணி விருதாளர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த திருவிழந்தூர் காமராஜ் நகரில் போதைப்பொருள் பயன்படுத்துவதின் தீமையை விளக்கும் வகையிலும், சாலை விதிகளை மதித்தல், கல்வி கற்பதின் பயன், பொது சுகாதாரம் ஆகியவற்றை இளைய தலைமுறைக்கு சென்று சேர்க்கும் வகையில் ரோட்டரி சங்கம் சார்பில் பொம்மலாட்ட கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
கலைமாமணி விருது பெற்ற சோமசுந்தரம் என்பவர் இந்த பொம்மலாட்டம் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். பின்னணி இசை மற்றும் குரலுக்கு ஏற்ப விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பொம்மலாட்டம் நடைபெற்றது. சிறிய கதைகளுடன் கூடிய பின்னணி குரல் மற்றும் இசைக்கு ஏற்ப மேடையில் பொம்மைகள் ஆடிப் பாடிய காட்சி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவருவதாக இருந்தது. கணநாதர் பொம்மை நாடக சபா சார்பில் இந்த கலை நிகழ்ச்சி நடைபெற்ற போது பெரும்பாலான கதாபாத்திரங்களை 75 வயதிலும் தவறாமல் தொடர்ந்து இரண்டு மணி நேரம் கைகள் மற்றும் தலைகளில் பொம்மைகளுக்கான கயிறை கட்டிய படி பின்னணியில் இயக்கும் சூத்திரதாரியாக முதியவர் சலிக்காமல் செய்தது அனைவரின் பாராட்டை பெற்றது.
தற்போதைய காலத்தில் போதைப் பழக்கம் பெருகிவிட்ட நிலையில் மாணவ மாணவிகளுக்கு போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது கட்டாயம் என்பதால், இந்த நிகழ்ச்சி நடைபெற்றதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். கரகாட்டம், பரதநாட்டியம் ஆகியவற்றினுடே இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் ஆழ்மனதில் பதியும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வரும் கலைமாமணி சோமசுந்தரம் அனைவரின் பாராட்டல்களையும் பெற்றுள்ளார். தமிழக அரசு அழிந்து வரும் இக்கலையை காப்பாற்ற, இந்து அறநிலையத்துறை கோயில்கள் மற்றும் பள்ளிக்கூடங்களில் கலை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்குமாறு சோமசுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மின்சார சிக்கனம் மற்றும் சேமிப்பு வாரவிழாவையொட்டி மயிலாடுதுறையில் தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் விழிப்புணர்வு பேரணி
மின்சார சிக்கனம் மற்றும் சேமிப்பு வாரவிழா டிசம்பர் 14 -ஆம் தொடங்கி டிசம்பர் 20 -ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி மயிலாடுதுறையில் தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அலுவலகத்தில் புறப்பட்ட பேரணியை மயிலாடுதுறை கோட்டாட்சியர் யுரேகா தொடங்கி வைத்தார்.
பேரணியில் பொதுமக்கள் குழல் விளக்குகளுக்கு பதிலாக எல்இடி விளக்குகளைப் பயன்படுத்த வேண்டும், போதிய வெளிச்சத்துடன் வீடு கட்ட வேண்டும், கிரைண்டர்களில் நைலான் பெல்ட்டுகளை உபயோகப்படுத்த வேண்டும், தேவையில்லாமல் மின்சாரத்தை பயன்படுத்த கூடாது போன்ற விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வழங்கி ஒலிப்பெருக்கி மூலமும், விழிப்புணர்வு ஏற்படுத்திச் சென்றனர். மின்வாரிய பேரணி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று துவங்கிய மின்வாரிய அலுவலகத்திலேயே முடிவடைந்தது.