Ayyampet Municipality: ’இல்லாத சாலை.. நடமாடவே முடியல..’ கலெக்டரிடம் மனு கொடுத்த யூஎப் நகர் பள்ளிவாசல் பகுதி மக்கள்!
அய்யம்பேட்டை பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட யூஎப் நகர் பள்ளிவாசல் பகுதிக்கு சாலை வசதி வேண்டி தமிழ்நாடு நலிவுற்ற விவசாய சங்க நிர்வாகிகள் தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப்பிடம் மனு அளித்தனர்.
தஞ்சாவூர்: அய்யம்பேட்டை பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட யூஎப் நகர் பள்ளிவாசல் பகுதிக்கு சாலை வசதி வேண்டி தமிழ்நாடு நலிவுற்ற விவசாய சங்க மாநில தலைவர் முகமது இப்ராகிம் தலைமையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப்பிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அய்யம்பேட்டை பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட யூஎப் நகரில் உள்ள பள்ளிவாசல் பகுதி சாலை வசதி வேண்டி கடந்த நான்கு வருடங்களாக அய்யம்பேட்டை பேரூராட்சியில் பலமுறை மனு கொடுத்துள்ளோம்.
இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் பிறகு கடந்த 2022 ம் ஆண்டு அய்யம்பேட்டை பேரூராட்சியில் இருந்து வந்த தெருவை அளந்து பார்த்து இந்த தெருவிற்கு தார் சாலை அமைக்க நிதி ஒதுக்கி விட்டார்கள், எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் தார் சாலை அமைக்கப்படும் என 2022ம் ஆண்டு வருடம் ஜனவரி மாதம் அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு வருடத்திற்கு மேலாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும் பள்ளிவாசல் பகுதியில் இருந்து முக்கிய பகுதிகளான வங்கிகள், பள்ளிக்கூடங்கள், கடைவீதி மற்றும் ரவுண்டானா பகுதி ஆகியவை மிகவும் அருகில் உள்ளன. மேலும் எங்கள் பள்ளிவாசலுக்கு தினம் தோறும் ஐந்து வேலைகள் தொழுகை வைப்பதற்காக 100க்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கிறார்கள். மாலை வேளையில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் மார்க்க கல்வி கற்க தினசரி வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் மழை பெய்தால் தெருவெங்கும் தண்ணீர் தேங்கி சேரும், சகதியாக நடக்க முடியாத அளவிற்கு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளோம். சமீபத்தில் பேரூராட்சி அலுவலகத்தில் சென்று கேட்டபோது மேற்படி நகரில் இருந்து பேரூராட்சிக்கு சாலை எழுதிக் கொடுக்கவே இல்லை என்று கூறுகின்றனர்.
ஆனால் இதே தெருவில் பல வீடுகள் அரசு அனுமதி பெற்று வீட்டு வாரியம் கட்டிடம் கட்டி வருகிறார்கள். கடந்த வருடம் தார்ச்சாலை அமைக்க நிதி ஒதுக்கி விட்டது என்று கூறிய நிலையில் தற்போது சாலை அமைக்க நகர் அமைப்பாளர்கள் பேரூராட்சிக்கு எழுதிக் கொடுக்கவில்லை என்று கூறுகிறார்கள். எனவே பொதுமக்களும் குழந்தைகளும் மிகவும் சிரமப்பட்டு செல்கின்றனர்.
எனவே மாவட்ட கலெக்டர் இது தொடர்பாக உடன் விசாரணை செய்து நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதிக்கு தார் சாலை அமைத்து தர ஆவணம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது தவ்ஹித் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் முகமது கவுஸ் , அய்யம்பேட்டை தவ்ஹித் ஐமாஅத் கிளை தலைவர் முகமது ரிஜ்வான், செயலாளர் முகமது இம்தியாஸ், பொருளாளர் சாகுல் ஹிமீது, முன்னாள் தலைவர் முகமது யஹ்யா மற்றும் நிர்வாகிகள் பக்கிர் முகமது ராஜ் முகமது
மற்றும் கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.