அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் வகையில், பெரியார் பற்றி 100 நொடி அனிமேஷன் வீடியோ ஒன்றை திராவிடர் கழகம் உருவாக்கி உள்ளது.
திராவிடர் கழகம், தன்னைத் தோற்றுவித்த தந்தை பெரியாரின் பணிகளைப் போற்றும் விதத்திலும் பெரியாரை உலகம் முழுவதிலும் அடுத்தடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவும் யாருமே செய்திராத முன்முயற்சியை மேற்கொண்டுள்ளது. சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் வகையில், பெரியார் பற்றி 100 நொடி அனிமேஷன் வீடியோ ஒன்றை உருவாக்கி உள்ளது.
தகர்த்திடு, வென்றிடு, புரிந்திடு, களைந்திடு, தெளிந்திடு, நிமிர்ந்திடு என்னும் 6 வார்த்தைகள் மட்டுமே வீடியோவின் சவுண்ட் ட்ராக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
கல்வி, மனிதம், மூடநம்பிக்கை எதிர்ப்பு, பகுத்தறிவு, பெண் விடுதலை, சமூக நீதி, சுய மரியாதை என பெரியார் களமாடிய அனைத்துத் துறைகளும் இந்த வீடியோவில் காத்திரத்துடன் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.
வீடியோ இதோ..!
இந்த முயற்சி மூலம் பெரியாரின் பகுத்தறிவுச் சுடர், புத்தொளி வீசி பார் முழுவதும் பாயும் என்று நம்புவதாகச் சொல்கிறார் அனிமேஷன் காணொலியை உருவாக்கிய சுஜித். பாயிண்ட் எஸ் என்னும் க்ரியேட்டிவ் விளம்பர முகமையின் நிறுவனர் சுஜித், பெரியார் குறித்த வீடியோ உருவாக்கம் பற்றி, ஏபிபி நாடுவிடம் விரிவாகப் பேசினார்.
பெரியார் குறித்து பன்னெடும் காலமாக ஏராளமானோர் அச்சு, காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் நிறைய எழுதி இருக்கிறார்கள், பேசி இருக்கிறார்கள். 100 நொடிகளில் பெரியார் குறித்து எடுக்கப்பட்ட உங்களின் அனிமேஷன் வீடியோ மூலம் எதைக் கடத்திவிடமுடியும் என்று நினைக்கிறீர்கள்?
பெரியார் என்ற ஒற்றைச் சொல் அவர் இறந்து 51 ஆண்டுகளுக்குப் பிறகும் தேவைப்படுகிறது. நாடு வெகு வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தாலும் நமக்கு அவர் தேவைப்படுகிறார். பெரியார், மொழி கடந்து பொதுவானவராக இருக்க வேண்டும் என்பதால், பொது மொழியாக அனிமேஷனைப் பயன்படுத்தி இருக்கிறோம்.
குறுகிய நேரத்துக்குள் குறிப்பாக 100 நொடிக்குள் வீடியோவை உருவாக்கி இருப்பதன் மூலம், இளைஞர்களிடமும் உலக மக்களிடமும் கொண்டுபோய்ச் சேர்க்க முடியும் என்று நம்புகிறோம்.
சினிமா, விளையாட்டு உள்ளிட்ட அதிக வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் அம்சங்களுக்கே கடும் உழைப்பு தேவைப்படும் அனிமேஷன் மாதிரியான மெனக்கிடல்கள் செய்யப்படும். ஆனால் ஓர் அரசியல் தலைவருக்கு அனிமேஷன் வீடியோ உருவாக்கியது ஏன்?
ஒரு குறிப்பிட்ட சாரார் மட்டுமே, பெரியாரைப் பின்பற்றுபவர்களாக, அவரின் தொண்டர்களாக இருக்கின்றனர். ஆனால் இன்றைய தலைமுறைக்கு அவரின் பெயர் மட்டுமே தெரிந்திருக்கிறது. அதனால் பெரியார் குறித்து விரிவாக, முழுமையாக எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தோம்.
பெரியாரா? யார் அவர்? என்று கூகுளிலோ, வேறு எங்காவதோ தேடுவதற்கு ஓர் உந்து சக்தியாக இந்த வீடியோ இருக்கும் என்று நம்புகிறோம். ஏதோ ஒரு விதத்தில் பெரியாரைப் பற்றியும் அவரின் பணிகள் பற்றியும் அறிய இந்த அனிமேஷன் வீடியோ நிச்சயம் உதவும்.
பெரியாரின் அடையாளங்களில் ஒன்று கைத்தடி. அதைக் கொண்டு சாதி, பெண்ணடிமை, சமத்துவமின்மை விலங்குகளை உடைத்தெறிய வேண்டும் என்று எப்படித் தோன்றியது?
காந்திக்கு எப்படி கண்ணாடி அடையாளமோ, அதுபோல பெரியாருக்கு தாடியும், கைத்தடியுமே அடையாளமாக இருந்தது. அதனால் கைத்தடியை வைத்து நிறைய காண்பிக்க முடியும் என்று நம்பினோம். பிரம்பு போல கூனிக் குறுகிக் கிடந்தவர்களை தலை நிமிர்த்தவும், தளைகளை அறுத்து எறியவும் சாதி வேறுபாட்டை அடித்து நொறுக்கவும் பெரியாரின் கைத்தடி, காலாகாலத்துக்குமான அடி என்று நிறுவ முயன்றோம்.
தொழில்நுட்ப ரீதியாக இந்த வீடியோவை உருவாக்க உதவி செய்தவர்கள் பற்றிச் சொல்லுங்களேன்.
ஆர்- ஆர்ட் வொர்க்ஸ் நிறுவனம் வி எஃப் எக்ஸ் மற்றும் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டது. VFX இயக்குநர் ரமேஷ் ஆச்சார்யா எங்களின் எண்ணத்தை தொழில்நுட்ப ரீதியாக நிஜமாக்கினார். அவர் இல்லையென்றால் இந்த வீடியோவை இவ்வளவு தரத்துக்குக் கொண்டு வந்திருக்க முடியாது. ஆர்ஆர்ஆர், பேட்ட, விஸ்வாசம் ஆகிய படங்களின் மோஷன் போஸ்டர்கள் இவரின் ஆர்- ஆர்ட் வொர்க்ஸ் நிறுவனம் தயாரித்ததுதான்.
வருங்காலத் தலைமுறைக்கு இந்த வீடியோ உணர்த்த வேண்டிய செய்தி என்று எதை நினைக்கிறீர்கள்?
மிகவும் எளிமைதான். இரண்டே வரிகளில் சொல்ல வேண்டுமெனில், பெரியாரை உலகமயாக்குவோம், உலகை பெரியார் மயமாக்குவோம் என்று நினைத்தோம். அதை சாத்தியமாக்கி இருக்கிறோம் என்று நம்புகிறோம்’’ என்று சுஜித் தெரிவித்தார்.
புகழாரம் சூட்டிய முதல்வர்
ஈராயிரம் ஆண்டு இழிவுகளைக் கொளுத்தி - திராவிடக் கருத்தியலால் சுயமரியாதை ஊட்டி, தமிழினம் தலைநிமிரச் செய்த தந்தை பெரியாரின் கைத்தடி நம் நிலத்தை - இனத்தை என்றும் காக்கும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
பெரியாரியக் கருத்துகளை அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்கும் அறிவுப் பணியைத் தொடர்வோம்! எங்கும் பகுத்தறிவுத் தீ பரவட்டும் என்றும் முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.