தஞ்சாவூர் மக்களை உற்சாகத்தில் திளைக்க செய்த அரசின் அறிவிப்பு? என்ன தெரியுங்களா?
அணைக்கரை பகுதிகளில் முதலை பிடிக்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. விரைவில் தஞ்சாவூர் பகுதியில் முதலை பண்ணை அமைக்கப்பட உள்ளது.

தஞ்சாவூர்: அடிச்சாச்சு லக்கி ப்ரைஸ்... தஞ்சாவூருக்கு வருது முதலை பண்ணை என்று மக்கள் மகிழ்ச்சியில் திளைக்கும் அளவிற்கு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 3 முதலை பண்ணைகள் உள்ளன. புயல், வெள்ளநீர் என இயற்கை இடர்பாடுகள் அதிகரித்து விட்டால் அல்லது வறட்சி ஏற்பட்டு விட்டாலோ, ஆற்றுப்பகுதிகள் வழியாக முதலைகள் ஊருக்குள் நுழைந்துவிடும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.. இப்படிப்பட்ட சூழலில், சிதம்பரம் பழைய கொள்ளிடம் ஆற்று பகுதியில் முதலை பண்ணை அமைக்கப்படுமா? என்று எம்எல்ஏ பாண்டியன் இன்று சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு அமைச்சர் பொன்முடி அளித்த பதில்தான் தஞ்சை பகுதி மக்களை துள்ளி குதிக்க செய்துள்ளது.
சென்னையில் இருக்கும் முதலைகள் பண்ணை தான் ஆசியாவிலேயே முதல்முறையாக முதலைகளுக்கு என்றே பிரத்யேகமாக அமைக்கப்பட்ட காப்பிடம் ஆகும். 3 மூன்று வகை முதலைகளோடு தொடங்கிய இந்தப் பூங்காவில் உலகளவில் இருக்கும் 23 வகையான முதலைகளில் 17 முதலைகள் தற்போது பராமரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு வகை முதலைகளுக்கும் தனித்தனி வாழிடம், இனப்பெருக்க காலத்தில் அவற்றைத் தனியாக பராமரிப்பது, இயற்கையானச் சூழல் என்று அசத்துகிறது சென்னை முதலைகள் பண்ணை. சுமார் 5000 முதலைகள் வரை இனப்பெருக்கம் செய்ய உதவிகரமாக அமைந்த இங்கு 2000-க்கும் அதிகமான ஊர்வனப் பிராணிகள் வாழ்ந்து வருகின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அதேபோல, திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி நகர் முதலை பண்ணையானது, 12 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஆசியாவில் அழிந்துவரும் இனமாக கருதப்படும் சதுப்பு நில முதலை இனத்தை பாதுகாக்கும் நோக்கில் இந்த பண்ணை தொடங்கப்பட்டு, கடந்த 50 வருடங்களாக வனத்துறையால் சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
மலைவாழ் மக்கள் வனப்பகுதியில் சேகரிக்கும் பொருட்கள், உற்பத்தி செய்யும் கைவினைப்பொருட்கள், உணவு பொருட்கள் விற்பனை செய்யும் விற்பனை மையமும் இந்த திருப்பூர் முதலை பண்ணை அருகே அமைந்துள்ளது. அதுமட்டுமல்ல, மாணவர்களுக்கும், மக்களுக்கும், முதலை குறித்த அரிய தகவல்களின் பொக்கிஷமாக இருப்பதால், மாநில சுற்றுலா பட்டியலில் அமராவதி முதலைப்பண்ணை முக்கிய இடத்தை பிடித்துள்ளது.
இந்நிலையில்தான் தமிழகத்தில் மற்றொரு முதலை பண்ணை அமைப்பதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.. தமிழ்நாடு சட்டசபையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது சட்டமன்ற உறுப்பினர் சிதம்பரம் கே.ஏ.பாண்டியன், சிதம்பரம் பழைய கொள்ளிடம் ஆற்று பகுதியில் முதலை பண்ணை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி, தமிழ்நாட்டில் 3 இடங்களில் முதலை பண்ணைகள் உள்ளன.. கோடை காலத்தில் முதலைகள் ஆழமான பகுதிகளில் சென்று தங்கி விடுகிறது. அணைக்கரை பகுதிகளில் முதலை பிடிக்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. விரைவில் தஞ்சாவூர் பகுதியில் முதலை பண்ணை அமைக்கப்பட உள்ளது. அதற்கு அருகில் தான் சிதம்பரம் பகுதி உள்ளதால் முதலை பண்ணை அமைக்க வாய்ப்பில்லை" என்று பதிலளித்தார். அமைச்சரின் இந்த அறிவிப்பானது, தஞ்சை மக்களுக்கு செம கொண்டாட்டம் ஆகியுள்ளது.
காரணம், அணைக்கரையில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட முதலைகள் உள்ளன. இவைகள் உண்ண உணவின்றி அழிவின் விளிம்பில் தவிப்பதாக கூறப்படுகிறது. பொதுவாக, காவிரியில் நீர்வரத்து இல்லாதபோதும், போதுமான மழையின்றி பொய்த்து போகும் சமயத்திலும், கொள்ளிடம் ஆற்றிலும் முதலைகள் வெளியேறுகின்றன. அணைக்கட்டில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் பல இடங்களில் வறட்சியால் நீரின் அளவு குறைந்துவிட்டால், அங்குள்ள முதலைகள் ஊருக்குள் நுழையும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
எனவே, முதலைக்கு என்று தனி இடம் தேர்வு செய்து முதலைப் பண்ணை அமைத்து பராமரித்தால் சுற்றுலாத் தலமாக மாறும், இதனால் அரசுக்கு வருவாயும் கொட்டும். ஏற்கனவே பலமுறை கோரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில், தஞ்சாவூரில் முதலை பண்ணை ஏற்படுத்துவதாக அறிவிப்பு இன்று வெளியாகியிருப்பது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் எந்த இடத்தில் இந்த முதலைப்பண்ணை அமைக்கப்பட உள்ளது என்று அறிவிக்கப்படவில்லை.