தஞ்சாவூரில் ஒரு லட்சம் பேர் வாங்கலைங்க... ஆர்வம் காட்டலைங்க: எதற்கு தெரியுங்களா?
ஒரு லட்சம் பேர் பொங்கல் தொகுப்பை வாங்க ஆர்வம் காட்டவில்லை என்று தெரியவந்துள்ளது. பொங்கல் தொகுப்பு வழங்குவது நேற்றுடன் நிறைவடைந்தது

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் 85.50 சதவீதம் பேருக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள ஒரு லட்சம் பேர் பொங்கல் தொகுப்பை வாங்க ஆர்வம் காட்டவில்லை என்று தெரியவந்துள்ளது. பொங்கல் தொகுப்பு வழங்குவது நேற்றுடன் நிறைவடைந்தது. இருப்பினும் வரும் 31ம் தேதி வரை வேட்டி, சேலைகளை மட்டும் வாங்கிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் திருநாளை முன்னிட்டு, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலை வழங்குவது வாடிக்கை. தமிழகஅரசு கைத்தறி நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்குவதற்காகவும், கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்காக விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இந்தாண்டு தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கப்படும். பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி-சேலைகள் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதன்படி தஞ்சை மாவட்டத்தில் பொங்கல் தொகுப்பு பெற தகுதியான 7 லட்சத்து 4 ஆயிரத்து 596 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது. கடந்த 9-ந் தேதி பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது. தஞ்சை மாவட்டத்தில் 6 லட்சத்து 2 ஆயிரத்து 433 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவற்றில் பூதலூர் தாலுகாவில் 31 ஆயிரத்து 5 பேருக்கும், கும்பகோணம் தாலுகாவில் 1 லட்சத்து 8 ஆயிரத்து 273 பேருக்கும், ஒரத்தநாடு தாலுகாவில் 44 ஆயிரத்து 826 பேருக்கும், பாபநாசம் தாலுகாவில் 70 ஆயிரத்து 6 பேருக்கும், பட்டுக்கோட்டை தாலுகாவில் 95 ஆயிரத்து 753 பேருக்கும், பேராவூரணி தாலுகாவில் 31 ஆயிரத்து 489 பேருக்கும், தஞ்சை தாலுகாவில் 1 லட்சத்து 8 ஆயிரத்து 476 பேருக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.
திருவையாறு தாலுகாவில் 32 ஆயிரத்து 151 பேருக்கும், திருவிடைமருதூர் தாலுகாவில் 58 ஆயிரத்து 902 பேருக்கும், திருவோணம் தாலுகாவில் 21 ஆயிரத்து 552 பேருக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 85.50 சதவீதம் பேருக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக திருவோணம் தாலுகாவில் 88.79 சதவீதம் பேருக்கும், குறைந்தபட்சமாக தஞ்சை தாலுகாவில் 82.14 சதவீதம் பேருக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் பூதலூர் தாலுகாவில் 4 ஆயிரத்து 333 பேரும், கும்பகோணம் தாலுகாவில் 20 ஆயிரத்து 125 பேரும், ஒரத்தநாடு தாலுகாவில் 6 ஆயிரத்து 438 பேரும், பாபநாசம் தாலுகாவில் 10 ஆயிரத்து 450 பேரும், பட்டுக்கோட்டை தாலுகாவில் 15 ஆயிரத்து 244 பேரும், பேராவூரணி தாலுகாவில் 4 ஆயிரத்து 103 பேரும், தஞ்சை தாலுகாவில் 23 ஆயிரத்து 584 பேரும், திருவையாறு தாலுகாவில் 5 ஆயிரத்து 826 பேரும் பொங்கல் தொகுப்பு வாங்கவில்லை.
திருவிடைமருதூர் தாலுகாவில் 9 ஆயிரத்து 338 பேரும், திருவோணம் தாலுகாவில் 2 ஆயிரத்து 722 பேரும் என மொத்தம் 1 லட்சத்து 2 ஆயிரத்து 163 பேர் பொங்கல் தொகுப்பு வாங்கவில்லை. இவர்கள் அனைவரும் பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 பரிசு வழங்கப்படாததால் வாங்க ஆர்வம் காட்டவில்லை என்று தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், அனைவருக்கும் பொங்கல் தொகுப்பு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. நேற்று மாலையுடன் பொங்கல் தொகுப்பு பெறுவதற்கான காலக்கெடு முடிவடைந்துவிட்டது. வேட்டி, சேலை விநியோகம் குறைவாக இருப்பதால் வருகிற 31-ந் தேதி வரை வேட்டி, சேலை வாங்கி கொள்ளலாம் என்றனர்.

