முன் அனுமதியின்றி வெளி நபர்களை அனுமதிக்கக்கூடாது: தஞ்சை கலெக்டர் அறிவுறுத்தல் எதற்காக?
கல்வி நிறுவனங்களின் சுற்றுச் சுவர்கள் பாதுகாப்புடன் உள்ளனவா என்பது குறித்தும் கண்காணித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்
தஞ்சாவூர்: கல்வி நிலைய வளாகங்களில் முன் அனுமதி இல்லாமல் வெளிநபர்களை உள்ளே அனுமதிக்கக் கூடாது என்று ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தினார்.
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் அனைத்து கல்வி நிறுவனங்களின் வளாகங்களில் பாதுகாப்பை மேம்படுத்துதல் தொடர்பான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கல்லூரி முதல்வர்கள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்ததாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்துத் கல்லூரி மற்றும் பள்ளி வளாகங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா? சி.சி.டி.வி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா என அனைத்து அலுவலகங்களிலும் தகுந்த ஆய்வுகள் மேற்கொண்டு பாதுகாப்பு பணிகளை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். கல்வி நிறுவனங்களின் சுற்றுச் சுவர்கள் பாதுகாப்புடன் உள்ளனவா என்பது குறித்தும் கண்காணித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
கல்லூரி வளாகத்தை தூய்மையாக வைத்திருத்தல் வேண்டும். பார்வையாளர் வருகைப் பதிவேடு கடைபிடிக்க வேண்டும். மாணவ,மாணவிகளின் நலனில் அக்கறை கொண்டு எப்போதும் கண்காணித்துக் கொண்டிருத்தல் வேண்டும். கல்லூரிகளில் மாணவிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும். கல்லூரி சுற்றுச்சுவரை இன்னும் கூடுதலாக உயரப் படுத்த வேண்டும். கல்வி நிலைய வளாகங்களில் முன் அனுமதி இல்லாமல் வெளிநபர்களை உள்ளே அனுமதிக்கக் கூடாது. மாணவ, மாணவியர் கல்வித்திறனில் மேம்பட்டு விளங்க பங்களிப்பை செய்ய வேண்டும். மண்டலக் கல்லூரி கல்வி இணை இயக்குநர் அவர்கள் தொடர்ச்சியாக கல்லூரிகளுக்கு சென்று முறையாக நடைபெறுகிறதா என ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கூட்டத்தில் மாவட்ட காவல் கணகாணிப்பாளர் ராஜாராம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சரவணகுமார் , வருவாய் கோட்டாட்சியர்கள் இலக்கியா (தஞ்சாவூர்), ஜெயஸ்ரீ (பட்டுக்கோட்டை), தஞ்சாவூர் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் ரோசி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.