தேசிய அளவில் நடந்த யோகா போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த நரிக்குறவர் இன மாணவர்கள்
தேசிய அளவில் நடைபெற்ற யோகா போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்து மயிலாடுதுறை சேர்ந்த நரிக்குறவர் இன மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
பெரும்பாலும் நரிக்குறவர்கள் (ஆதியன்) மக்கள் கல்வியறிவு பெறாமல் நாடோடிகளாகவே தங்களின் வாழ்வை நடத்தி வருகின்றனர். இதனால் அவர்களின் குழந்தைகளும் பள்ளிக்குச் செல்லாமல் பொதுமக்களிடம் யாசகம் கேட்டு வாழ்ந்து வரும் சூழல் நிலவுகிறது. ஒரு சிலர் கல்வி கற்க விரும்பினாலும், இவர்களுக்கு அரசு சான்றிதழ்கள் கிடைப்பதில்லை சிக்கல் உள்ளதால் கல்வி என்பது இவர்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் திருவிழந்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பல்லவராயன்பேட்டையில் நரிக்குறவ சமுதாய மக்கள் 100 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அங்குள்ள நரிக்குறவர் காலனியில் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.
நாடோடிகளாக சுற்றித்திரியும் இப்பகுதி நரிக்குறவர்கள் சமுதாய மாணவர்கள் கல்வியில் மேம்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு கடந்த 2012-ஆம் ஆண்டு உண்டு உறைவிடப் பள்ளி அங்கு தொடங்கப்பட்டது. 10 மாணவர்களுடன் மட்டும் தொடங்கிய இப்பள்ளியில் தற்போது 120க்கும் மேற்பட்ட நரிக்குறவ இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு சேர்ந்து கல்வி பயின்று வருகின்றனர். மேலும் இப்பள்ளியில் 2012 இல் படித்த மாணவர்கள் பலர் தற்போது பட்டப்படிப்பை முடித்துவிட்டு, பணி வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.
நரிக்குறவர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப் பள்ளியில் பயிலும் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த 16 மாணவர்கள் கடந்த மாதம் 29 ஆம் தேதி இந்திய அரசு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், நேரு யுவகேந்திரா சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகா போட்டியில் கலந்து கொண்டனர்.
நான்கு வயது முதல் 17 வயது வரையிலான பல்வேறு பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் சீராசனம், மயூராசனம், பாகாசனம், காலபைரவாசனம் உள்ளிட்ட பல்வேறு யோகாசனங்களை போட்டியாளர்கள் செய்து காண்பித்தனர். பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்குபெற்ற இப்போட்டியில் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த இரண்டு சிறுமிகள் உட்பட ஆறு மாணவர்கள் முதல் மற்றும் மூன்றாம் பரிசுகளை வென்று குவித்துள்ளனர்.
11 வயதில் இருந்து 13 வயது பிரிவில் நடைபெற்ற போட்டியில் நவீன் ராஜ் என்ற சிறுவன் முதல் பரிசையும் 14 முதல் 17 வரை நடைபெற்ற போட்டியில் சாமுவேல் இரண்டாம் பரிசையும் மற்றும் சஞ்சனா ,மகாலட்சுமி, ஈஸ்வரன், சக்தி, உள்ளிட்டோர் மூன்றாம் பரிசையும் பெற்றனர். தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அவரது பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஆசைத்தம்பி ஆகியோர் பாராட்டுகளை தெரிவித்தனர். மேலும் மாணவர்களை ஊக்கப்படுத்துவதன் மூலம் தங்கள் சமூகத்தை சேர்ந்த அனைவரும் தேசிய அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று நாட்டிற்கு பெருமை சேர்ப்போம் என வெற்றி பெற்ற மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்