’’ஒரத்தநாடு அருகே தலித் இளைஞரை நிர்வாணப்படுத்தி தாக்குதல்’’- அமமுக நிர்வாகி மீது புகார்
’’அமமுக நிர்வாகி ஆசைத்தம்பி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் மீது, எஸ்.சி., எஸ்.டி., பிரிவிலும், கொலை முயற்சி, நிர்வாணப்படுத்தி தாக்கிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை’’
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் ஒன்றியம் கருப்பூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் சதீஷ்குமார். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிநாட்டில் வேலை செய்து வந்த நிலையில், கடந்த ஆண்டு கொரோனா காலகட்டத்தில் நாடு திரும்பியுள்ளார். தற்போது மீண்டும் வெளிநாடு செல்வதற்காக, வெளிநாட்டுக்கு ஆள் அனுப்பும் முகவரை சந்திப்பதற்காக, காரில் ஒரத்தநாடு அருகே உள்ள தொண்டராம்பட்டு கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு காரை நிறுத்தி, அங்கிருந்த தனது உறவினர் ஒருவருடன் கடையில் தேநீர் அருந்தி விட்டு தனது காரை எடுத்த போது, உறவினரின் இருசக்கர வாகனத்தில் மோதி தவறி விழுந்துள்ளது. அப்போது, அங்கு குடிபோதையில் இருந்த சிலர், எதற்காக வண்டியை இடித்து கீழே சாய்த்தாய் எனக் கேட்டுள்ளனர். அதற்கு, சதீஷ்குமார், தவறுதலாக இடித்து விட்டேன். மோட்டார் சைக்கிளும் என்னுடைய சகோதரது தான். எங்களுக்குள் பேசிவிட்டோம்.
ஒன்றும் பிரச்சினை இல்லை எனச் சொல்லி உள்ளார். அந்த நபர்கள், நீ எந்த ஊர், எந்த தெரு, யார் வீட்டுக்கு வந்தாய் என கேள்வி எழுப்பி, சதீஷ்குமார் பட்டியல் இனத்தவர் எனத் தெரிந்து கொண்டு, சாதிய வன்மத்துடன், அவரிடம், ஏன்டா சமூக ரீதியாக பேசி, இவ்வளவு திமிரா என காரின் சாவியைப் பிடுங்கிக் கொண்டு, தகராறு செய்துள்ளனர். இதையடுத்து, பிரச்சினையை வளர்க்க விரும்பாத சதீஷ்குமார் அங்கிருந்து செல்ல முற்பட்டுள்ளார். அப்போது அங்கு வந்த அமமுக நிர்வாகி ஆசைத்தம்பி, என்னடா, நாங்க கேட்டுக்கிட்டு இருக்கோம். நீ பாட்டுக்கு பதில் சொல்லாம போறே என்றார். இங்க ஒரு பிரச்சினையும் இல்லை என சதீஷ்குமார் சொல்லி இருக்கிறார். இதையடுத்து," நான் யாரு தெரியுமாடா எனச் சொல்லி, நிர்வாகிமற்றும் 10 க்கும் மேற்பட்ட நபர்கள், சாதியின் பெயரைச் சொல்லி, எனச் சொல்லி கடுமையாக தாக்கி உள்ளனர். தொடர்ந்து, சதீஷ்குமார் உடையைக் களைந்து நிர்வாணப்படுத்தி, மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர். இதையடுத்து தகவல் தெரிந்து அங்கு வந்த அவரது தந்தை தனபால், மைத்துனர்கள் பிரவீன், வீரராகவன் உள்ளிட்ட உறவினர்கள் அங்கு வந்து காலில் விழுந்து கெஞ்சி, சதீஷ்குமாரை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட நிர்வாகிகள், ஒரத்தநாடு காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுனிலை நேரில் சந்தித்து, இச்சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், கூறுகையில், பாதிக்கப்பட்ட இளைஞர் நடந்த சம்பவத்தால், தற்கொலை செய்யும் மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். உறவினர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தலித் இளைஞர் சதீஷ்குமார் மீது வன்கொடுமை தாக்குதல் நடத்திய நிர்வாகி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் மீது, எஸ்.சி., எஸ்.டி., பிரிவிலும், கொலை முயற்சி, நிர்வாணப்படுத்தி தாக்கிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளான சாதி ஆதிக்க சக்திகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும். சாதி ஆதிக்க சக்திகளுக்கு ஆதரவாகவும், சாதிய பாகுபாடுடன் செயல்படும், பாப்பாநாடு காவல் ஆய்வாளர் கருணாகரன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுப்போம் என்றார்.