கொரோனா விளம்பரத்தில் கூட்டுக்கொள்ளை; அதிமுக பிரமுகர் மீது ஆட்டோ ஓட்டுநர் புகார்!
ஆட்டோ 68 நாட்கள் தான் ஓடியதாகவும் அதற்கான வாடகை தொகை ரூபாய் 86 ஆயிரம் மட்டுமே என்றும், நகராட்சி அதிகாரிகள் துணையுடன் நாட்களை கூடுதலாக காண்பித்து 2,40,500 ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையின் பரவல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்தனர். தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் கொரோனோ வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை 11 மாவட்டங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த 11 மாவட்டங்களில் தமிழ்நாட்டில் நாகப்பட்டினத்தில் இருந்து கடைசியாக பிரிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டமும் ஒன்று. மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 20 ஆயிரத்து 797 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, 265 பேர் உயிரிழந்துள்ளனர். மயிலாடுதுறை, சீர்காழி, செம்பனார்கோயில், குத்தாலம், புத்தூர் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையம், கொரோனோ சிகிச்சை மையம் வீட்டில் தனிமை படுத்தி சிகிச்சை என மாவட்டம் முழுவதும் தற்போது 312 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றிக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் கொரோனா வைரஸ் தொற்று பரவாத வண்ணம் தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அரசு அலுவலகங்களில் கிருமிநாசினி தெளித்தல், பிளீச்சிங் பவுடர் தெளித்தால், கவசம் அணிய அறிவுறுத்துதல், ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளுதல், கொரோனா தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட பல தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சி சார்பில் ஆட்டோவில் ஒலிபெருக்கி அமைத்து அதன் மூலம் கொரோனா விழிப்புணர்வு செய்ய கடந்த 2020 ஆண்டு டெண்டர் விடப்பட்டுள்ளது. அதனை சீர்காழி அதிமுக நகர துணை தலைவர் ஏ.வி மணி கடலூரை சேர்ந்த ஷேசாத்திரி என்பவரின் பெயரில் ஏலம் எடுத்ததாக செல்லப்படுகிறது. இதனையடுத்து சீர்காழி நகர் முழுவதும் விழிப்புணர்வு செய்ய சீர்காழியை சேர்ந்த ராஜ்குமார் என்பவிடம் ஆட்டோ வாடகைக்கு ஒப்பந்தம் செய்துள்ளார் ஏ.வி.மணி. இந்நிலையில் நகராட்சியில் போலியாக ரசீது கொடுத்து 76 நாட்கள் ஆட்டோ ஒலிபெருக்கி செய்ததாக ரூபாய் (2,40,500) இரண்டு லட்சத்து நாற்பதாயிரத்து ஐநூறு ரூபாயை அதிமுக பிரமுகர் மணியும், ஷேசாத்திரியும் நகராட்சியில் பணத்தை பெற்று சென்றுள்ளனர்.
ஆனால் ஆட்டோ ஒலிபெருக்கி செய்த ஆட்டோ ஓட்டுநர் ராஜ்குமாருக்கு வாடகை தரமால் ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்து சீர்காழி காவல்நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர் ராஜ்குமார் அதிமுக பிரமுகர் ஏ.வி.மணி, ஷேசாத்திரி மீதும் பணத்தை தரமால் ஏமாற்றியதாக புகார் அளித்துள்ளார். மேலும் ஆட்டோ 68 நாட்கள் தான் ஓடியதாகவும் அதற்கான வாடகை தொகை ரூபாய் 86 ஆயிரம் மட்டுமே என்றும், நகராட்சி அதிகாரிகள் துணையுடன் நாட்களை கூடுதலாக போட்டு ரூபாய் இரண்டு லட்சத்து நாற்பதாயிரத்து ஐநூறு (2,40,500) கூட்டு கொள்ளை அடித்துள்ளதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவ தொடங்கி பல உயிர்களை காவு வாங்கியதை அடுத்து பல பேராசை மனிதர்களையும், மனமாற செய்த நிலையில் நாளை வாழ்வு நிச்சயம் இல்லை என்பதை மறந்து மக்கள் வரிப்பணத்தை குறுக்கு வழியில் கொரோனாவை பயன் படித்தி கொள்ளையடிக்கும் மனிதர்களும் இங்குதான் வாழ்கின்றனர்.