தமிழும், தமிழரும் பெருமிதம் கொள்ளும் ஆட்சியாக தி.மு.க., வீறுநடை போடுகிறது: அமைச்சர் சாமிநாதன்
தொன்மை, இயன்மை, தூய்மை, தாய்மை, முன்மை, வியன்மை, வளமை, மறைமை, எண்மை, இளமை, இனிமை, தனிமை, ஒண்மை, இறைமை, அம்மை, செம்மை எனப் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழும் மொழி நம் தமிழ்மொழி.
தஞ்சாவூர்: தமிழும், தமிழரும் பெருமிதம் கொள்ளும் ஆட்சியாக தி.மு.க., வீறுநடை போட்டு வருகின்றது என்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.
தஞ்சாவூர் தமிழ் பல்கலைகழகத்தில் இன்று அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்துமட் தமிழ்க்கூடல் மாநாடு தொடக்க விழா நடந்தது. மாநாட்டுக்கு துணைவேந்தர் (பொ) சங்கர் தலைமை வகித்தார். அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை தலைவர் துரைசாமி வரவேற்புரையாற்றினார்.
விழாவை தொடக்கி வைத்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது: இளம் சமூகத்தினர் தாய்மொழியை விட்டு விலகியுள்ளனர். தமிழ் சங்கத்தினர், சான்றோர்கள் நினைத்தால், அதனை மாற்ற முடியும். தாய்மொழி என வரும் போது பலரும் அது பொதுசொத்து என நினைக்கிறார்கள். தாய் மொழிக்காக போராடுவர்களின் எண்ணிக்கை குறைவாக தான் உள்ளது.
தொன்மை, இயன்மை, தூய்மை, தாய்மை, முன்மை, வியன்மை, வளமை, மறைமை, எண்மை, இளமை, இனிமை, தனிமை, ஒண்மை, இறைமை, அம்மை, செம்மை எனப் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழும் மொழி நம் தமிழ்மொழி.
இந்நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலகளிலும், தமிழகத்திலும் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும், பல்வேறு தமிழ் அமைப்பினரை ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைத்திருப்பது பெருமைக்குரியது.
தமிழும், தமிழரும் பெருமிதம் கொள்ளும் ஆட்சியாக தி.மு.க., வீறுநடை போட்டு வருகின்றது. தமிழரின் நலமே என் நலம் என முதல்வர் ஸ்டாலின் உழைத்து வருகிறார். திராவிட மாடல் ஆட்சியில் தமிழகத்தில், தமிழ் தழைத்தோங்குகிறது
தமிழ்மொழியைச் செம்மொழியாக வீறுநடை போடச் செய்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. தமிழகக் கல்லுாரிகளில் இளங்கலையில் தமிழ் மொழி பயிற்றுமொழி, பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாடம், பொறியியல், மருத்துவக் கல்வியைத் தமிழ்வழிக் கற்பித்தல், அரசுப் பணியில் தமிழ் வழி பயின்றவர்களுக்கு இட ஒதுக்கீடு, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கக உருவாக்கம், இணையத்தில் தமிழ், சென்னை என்று தலைநகரின் பெயர் மாற்றம் எனத் தமிழுக்கு அவர் ஆற்றிய தொண்டு அளப்பரியது.
அவரது வழியில் நின்று, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு உரிய அங்கீகாரம் அளித்து, அரசாணை வெளியீடு, வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர்ப் பலகை வைக்க முன்வர வேண்டும் என வலியுறுத்தி, தமிழுக்குத் தன் மனதிலும் ஆட்சியிலும் உயர்ந்த இடம் தந்தவர் முதல்வர் ஸ்டாலின். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது ரூபாய் 10 இலட்சம் மதிப்பில் வழங்கப்படுகிறது.
தமிழ்ப் பணியைத் தலையாய பணியாகக் கருதி தமிழ் வளர்ச்சிக்குப் பங்களித்து வரும் தமிழ் அறிஞர் பெருமக்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் “தகைசால் தமிழர் விருது” உட்பட 55க்கும் மேற்பட்ட விருதுகளைத் தமிழ் வளர்ச்சித் துறை வழங்கி வருகிறது. எழுத்தாளர்களுக்குக் “கனவு இல்லம்” வழங்குதல் எனத் தமிழ் வளர்ச்சிக்கு நன்மை பயக்கும் எண்ணற்ற திட்டங்களை தமிழ் வளர்ச்சித் துறையின் வழி தமிழ்நாடு அரசு திறம்பட செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.