கொள்ளிட கரையோர கிராமங்களில் மீண்டும் வெள்ளப்பெருக்கு - அமைச்சர் மெய்யநாதன் நேரில் ஆய்வு
சீர்காழி அருகே கொள்ளிட கரையோர கிராமங்களில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து அமைச்சர் மெய்யநாதன் நேரில் ஆய்வு செய்தார்.
தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முறையான காலத்தில் தொடங்கி சரியாகப் பெய்து வருகிறது. அதன் விளைவாக கர்நாடகம் முழுவதும் அதிகமழை பெய்து அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பியது. அதன் காரணமாக காவிரியில் வரும் நீர் முழுவதும் அப்படியே தமிழகத்திற்கு கர்நாடகம் அனுப்பி வைத்தது. அதனால் கடந்த மாதம் 16 -ம் தேதி மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியது. அதனைத்தொடர்ந்து அணைக்கு வந்த மொத்த நீரும் அப்படியே காவிரியில் திறந்து விடப்பட்டதால் ஒன்றரை லட்சம் கன அடி அளவிற்கு நீர் காவிரியில் பெருக்கெடுத்து வந்தது. ஆற்றின் இருபுறமும் சேதங்களை ஏற்படுத்தி கொள்ளிடம் ஆறு வழியாக கடலுக்குள் சென்று கலந்தது. அதனைத் தொடர்ந்து இந்த மாத இரண்டாவது வாரத்தில் மீண்டும் கர்நாடகத்திலிருந்து ஒன்றரை லட்சம் கன அடி அளவிற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இப்போதும் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவில் இருந்ததால் மொத்த நீரும் அப்படியே காவிரி, கொள்ளிடம் ஆறுகளின் வழியாக கடலுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் கீழணை கொள்ளிடம் ஆற்றின் வழியாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பழையார் கடலில் கலந்து வருகிறது. கடந்த இரண்டு தினங்களாக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு அதிகரிப்பின் காரணமாக கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சீர்காழி தாலுக்கா பகுதி ஆற்றுப் படுகை மக்களுக்கு வருவாய் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாதல்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளை மணல் உள்ளிட்ட ஆற்று படுகை கிராமங்களை சுற்றி தண்ணீர் சூழ்ந்து 1000க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் உட்புகுந்துள்ளது. இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 தினங்களுக்கு முன்பு இதே பகுதி வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
மேலும், அந்த பகுதி மக்கள் மீண்டும் தங்களது கால்நடைகளை அழைத்துக் கொண்டு ஆற்றின் கரைசாலையில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு மேற்கொண்டார். முதலில் ஆச்சாள்புரம் பகுதியில் அமைக்கப்பட்ட பாதுகாப்பு முகாமுக்கு சென்று அங்கு தங்கி உள்ள பொதுமக்களுக்கு உணவுகளை வழங்கினார். தொடர்ந்து வெள்ளம் சூழ்ந்த பகுதியான முதலை மேடு திட்டு பகுதிக்கு சென்ற அவர் அங்கு பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்
அதைத்தொடர்ந்து பத்திரிகையாளர் சந்தித்த அவர், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரின் அளவு அதிகரிப்பின் காரணமாக மீண்டும் முதலைமேடு திட்டு, நாதல்படுகை உள்ளிட்ட கிராமங்களை சுற்றி தண்ணீர் சூழ்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை ஏற்பட்டுள்ளது. தற்பொழுது கொள்ளிடம் ஆற்றில் ஒரு லட்சத்து 85 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் முதலைமேடு திட்டு, நாதல் படுகை உள்ளிட்ட கிராமங்கள் முற்றிலும் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ததாகவும், அந்த பகுதி மக்களை மீட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தி உள்ளதாக அவர் தெரிவித்தார்.