திரைப்பட பாணியில் திருட்டு! - கோபுர கலசத்தில் இரிடியம்! சிக்கிய இளைஞர்! என்ன நடந்தது?
திரைப்பட பாணியில் கோபுர கலசத்தில் இரிடியும் இருப்பதாக நூதன மோசடி மற்றும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திரைப்பட பாணியில் கோபுர கலசத்தில் இரிடியும் இருப்பதாக நூதன மோசடி மற்றும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் அவரிடம் இருந்து இரண்டு கோபுர கலசங்கள் உயரக காரை பறிமுதல் செய்துள்ளனர்.
சிதம்பரம் அருகே அண்ணாமலை நகர் பகுதியில் உள்ள மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக விக்னேஷ் 25 என்பவர் பணியாற்றி வருகிறார். அவரிடம் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் விளாங்குடியைச் சேர்ந்த ராஜி என்கிற ராஜசேகர் 27 என்பவர் இரண்டு கோபுர கலசங்கள் உள்ளதாகவும் அதில் இரிடியும் இருப்பதாகவும் ஒரு கலசம் 5 லட்சம் ரூபாய் எனவும் இரண்டு கலசமும் 10 லட்சம் ரூபாய் என பேசி அணுகி உள்ளார். பின்னர் அவரிடம் பத்தாயிரம் ரூபாய் முன்பணம் கேட்டு வாங்கிக்கொண்டு அவரை மிரட்டி சென்றதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து பாதிக்கப்பட்ட விக்னேஷ் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் போலீசார் பல்வேறு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது விக்னேஷ் வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது அந்த காரில் முலாம் பூசப்பட்ட கலசம் ஒன்றும் சாதாரண கோபுர கலசம் ஒன்றும் இருந்துள்ளது. அந்த இரண்டு கலசங்களையும் கைப்பற்றிய போலீசார் விக்னேஷ் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். பின்னர் விக்னேஷை காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
குறிப்பாக சதுரங்க வேட்டை என்ற தமிழ் சினிமா படத்தில் பழமை வாய்ந்த கோவில் கோபுர கலசங்களில் இரிடியும் இருப்பதாகவும் அது பல கோடி ரூபாய் மதிப்பு என ஏமாற்றும் கதையுடன் அந்த திரைப்படம் அமைந்திருக்கும். அதே போன்று ராஜசேகர் யாரோ ஒருவரிடம் ரூபாய் 8 லட்சம் வரை ஏமாந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அந்த குறுக்கு வழியில் தானும் முன்னுக்கு வரவேண்டும் என்று எண்ணிய ராஜசேகர் அரிசியுடன் காந்த துகள்கள் ஒட்டி வீடியோவாக சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதனைப் பார்த்து ஏமாந்து பல நபர்கள் அவரை அணுகியபோது உயர் ரக ஓட்டல்களில் ரூம் எடுத்து அவர்களுக்கு மது வாங்கி கொடுத்து அவர்கள் எடுத்து வரும் கார்களுக்கு போலியான சாவிகள் தயார் செய்து அதன் மூலம் பணம் எடுத்து வரும்போது போலி சாவிகளை வைத்து பணத்தை திருடி செல்வதும் போலியான கலசங்களை பல லட்சம் ரூபாய்க்கு விற்று ஏமாற்றி சென்றதும் தெரியவந்தது. இதனை கேட்ட போலீசாருக்கு மேலும் அதிர்ச்சி ஏற்பட்டது. இதனை அடுத்து வேறு யாருடன் தொடர்பு உள்ளது என தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து சிதம்பரம் டிஎஸ்பி லாமேக் கூறுகையில் இரிடியம் சக்தி உள்ளதாக ஏமாற்று வேலையில் ஈடுபட்டு வந்த ராஜசேகரை அண்ணாமலை நகர் காவல் நிலைய போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இது போன்ற சினிமா படங்களிலும் வந்துள்ளது. குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் வகையில் இதுபோல் அவர் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளதாகவும் அரிசியில் டெக்னிக்கலாக காந்த துகள்களை தடவி காந்தத்தை வைத்தால் அரிசி நகர்ந்து செல்லும். இதனைப் பார்த்து பணம் உள்ளவர்கள் ஆசைப்பட்டு ஏமார்ந்து செல்கின்றனர். இதற்கு முன்பு இவர் கைது செய்யப்படவில்லை. இது முதல் முறையாக புகார் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இணையதளம் மூலம் வீடியோ வெளியிட்டு ஏமாற்ற நினைக்கும் இவர் ஏமாறுபவர்களை முதலில் வரவைத்து ஹோட்டலில் ரூம் எடுத்து நம்பிக்கை வரும் அளவிற்கு பழகிய பின்பு அவர்களிடம் நூதன மோசடியில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது. ஆகவே பொதுமக்கள் போலீசார் கொடுக்கும் முன்னெச்சரிக்கைகளை பின்பற்ற வேண்டும். இதுபோன்று சந்தேகம் படியான நபர்களை கண்டால் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.