தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு: எதற்காக?
மத்திய அரசு நிதி ஒதுக்கீடு அவ்வப்போது நிறுத்தியிருந்தாலும், மாநில அரசு நிறுத்தாமல், ஊதியம், ஓய்வூதியப் பலன்கள், மேம்பாட்டுப் பணிகளுக்கு நிதியை எக்காலத்திலும் நிறுத்தியதில்லை.

தஞ்சாவூர்: மொழி என்று வரும்போது அவரவர் தாய்மொழி காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது போல ஒரு கருத்தாக தான் அதை நான் பார்க்கிறேன் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் சிறப்பான அந்தஸ்து பெற்ற இந்த நூலகத்தில் மழை நீர் கசிவுகள் இருக்கக்கூடாது என ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டது. இதற்காக அருகிலேயே புதிதாகக் கட்டடம் கட்டி, சில தளவாடப் பொருட்களை அங்கு மாற்றி பாதுகாப்பாக வைக்கலாம் என ஆலோசிக்கப்படுகிறது. தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தின் தலைவர் என்ற முறையில் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சரஸ்வதி மஹால் நூலகத்தின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை தயார் செய்து வருகிறோம். ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் சில கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். புதிய கட்டிடம் கட்டி இங்கு இருந்து ஒரு சில தளவாடங்களை இடமாற்றம் செய்து வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நூலகத்திலிருந்து நமக்கு கிடைக்கக்கூடிய தகவல் மூலம் தான் ஓலைச்சுவடியாக இருந்தாலும் சரி காகித அச்சு வழியாக இருந்தாலும் சரி பல செய்திகள் நம்மால் எடுக்க முடிகிறது. நாம் யார் என்ற செய்தியை தரக்கூடியது இந்த ஓலைச்சுவடிகள் தான். புதிதாக கட்டிடம் கட்ட என்ன நிதி தேவை என்பது குறித்து மாவட்ட கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார். அது குறித்து பரிசீலிக்கப்படும். பள்ளி திறக்கப்படுகிறது அன்றே புத்தகங்கள் உள்ளிட்ட விலையில்லா பொருட்கள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது.
நூலகம் குறித்து கலெக்டர் தெரிவித்த தகவல்கள் அனைத்தையும் அமைச்சரிடம் எடுத்துக் கூறப்படும். இதை காக்க வேண்டியது சீர்படுத்த வேண்டியது நமது மிகப்பெரிய கடமை. எனவே ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒரு முறையும் ஏதாவது ஒரு பணிகளை செய்யுமாறு வலியுறுத்தியுள்ளோம். தமிழக முதல்வரிடம் தலைமைச் செயலாளர் மாவட்ட கலெக்டர் வழங்கிய அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளோம். மொழி என்று வரும்போது அவரவர் தாய்மொழி காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது போல ஒரு கருத்தாக தான் அதை நாம் பார்க்க வேண்டும்.
இந்த நூலகத்தில் மாநில அரசு ஒரு தொகையும், மத்திய அரசு ஒரு தொகையும் ஒதுக்கீடு செய்கிறது. ஆனால், மத்திய அரசு நிதி ஒதுக்கீடு அவ்வப்போது நிறுத்தியிருந்தாலும், மாநில அரசு நிறுத்தாமல், ஊதியம், ஓய்வூதியப் பலன்கள், மேம்பாட்டுப் பணிகளுக்கு நிதியை எக்காலத்திலும் நிறுத்தியதில்லை. இந்த நூலகத்தில் தற்போது போதுமான பணியாளர்கள் உள்ளனர். இன்னும் கூடுதல் பணியாளர்களை நியமிப்பது தொடர்பான அறிக்கையும் பெற்றுள்ளோம்.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை தொடர்பாக மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யாவிட்டால், தமிழக முதல்வர் கூறியபடி வழக்குத் தொடுப்பதற்கான பணி நடைபெறுகிறது. அரசு பள்ளியில் எவ்வளவு மாணவர்கள் சேர்ந்துள்ளார்கள் என்பது குறித்து ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி தான் எவ்வளவு மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்பது தெரியவரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அப்போது, மாவட்ட கலெக்டர் பா. பிரியங்கா பங்கஜம், சரசுவதி மகால் நூலக நிர்வாக அலுவலர் எஸ். மார்ஸ் மற்றும் பலர் உடனிருந்தனர்.





















