27 கிலோ கட்டியை அகற்றி பெண்ணுக்கு மறுவாழ்வு! அதிசயம்! தஞ்சையில் நடந்த அதிசயம்
தீங்கற்ற கழலைக் கட்டியிலிருந்து அழுத்தத்திற்கு இந்த உறுப்புகள் உட்படுத்தப்பட்டிருந்தன. இந்த வெற்றிகர சிகிச்சை, அப்பெண்மணியின் இரண்டு ஆண்டுகால கடும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது.

தஞ்சாவூர்: டெல்டா பிராந்தியத்தின் பிரபல மருத்துவமனையான மீனாட்சி மருத்துவமனை 45 வயதான பெண்ணின் கர்ப்பப்பையிலிருந்து சினைப்பை மற்றும் கர்ப்பப்பையோடு 27 கிலோ எடை கொண்ட நார்த்திசு திரளை அகற்றுவதற்கு ஒரு சிக்கலான அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக செய்து அந்த பெண்ணை காப்பாற்றியுள்ளது..
தீங்கற்ற கழலைக் கட்டியிலிருந்து அழுத்தத்திற்கு இந்த உறுப்புகள் உட்படுத்தப்பட்டிருந்தன. இந்த வெற்றிகர சிகிச்சை, அப்பெண்மணியின் இரண்டு ஆண்டுகால கடும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது. நார்த்திசு திரள் என்பது கர்ப்பப்பையிலிருந்து உருவாகிற, ஒரு புற்றுநோய் அல்லாத திசு வளர்ச்சியாகும்; தசை மற்றும் நார்த்திசுக்களால் உருவானதாக இந்த கழலைக் கட்டி இருக்கும். தசைத்திசுக்கட்டிகள் (லியோமியோமாஸ்) எனவும் இவை அழைக்கப்படுகின்றன. ஆனால் இப்பெண்ணிடம் காணப்பட்ட கட்டியானது உண்மையிலேயே மிக அரிதான நேர்வாகும்; 2.5 இலட்சம் நபர்களில் ஒரே ஒருவருக்கு மட்டுமே இந்தளவிற்கு தசைத்திசுக்கட்டிகளின் வளர்ச்சி இருக்கும். இப்பெண்ணிற்கு செய்யப்பட்ட இந்த அறுவைசிகிச்சைக்கு முன்பு விரிவான திட்டமிடலும், மற்றும் அதற்கு பிறகு துல்லியமான பராமரிப்பும் அவசியமாக இருந்தது.

இந்த அறுவைசிகிச்சை ஏறக்குறைய ஐந்து மணி நேரங்களுக்கு நீடித்தபோதிலும் இப்பெண் அவரது பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டு வந்திருக்கிறார். பல மாதங்களாக அவர் அனுபவித்த கடுமையான அசௌகரியத்திலிருந்து இப்போது அவர் விடுதலை பெற்றிருக்கிறார். இரண்டு மகள்களுக்கு தாயான இப்பெண் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவரது அடிவயிற்றுப் பகுதியில் ஒரு சிறிய வீக்கம் உருவாகியிருப்பதை கவனித்தார். இந்த தசைத்திரளானது படிப்படியாக வளர்ச்சியடைந்து வயிற்றுப் பகுதியில் பிறருக்கு தெரியக்கூடிய அளவிற்கு பெரிய புடைப்பாக மாறியது. சௌகரியம் இருந்தபோதிலும், மருத்துவ உதவியை நாடுவதை இப்பெண்மணி தவிர்த்து விட்டார்.
அவரது கணவர் வெளிநாட்டில் பணியாற்றி வருவதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவது தனது குழந்தைகளை ஆதரவற்றவர்களாக ஆக்கிவிடும் என்ற அச்சமே இதற்கு காரணமாகும். எனினும், சமீப வாரங்களில் இந்த தசைத்திரளானது மிகப்பெரிதாக வளர்ச்சியடைந்ததால் சுவாசிப்பதே அதிக சிரமமானதாக இவருக்கு மாறிவிட்டது. கடும் சிரமம் இல்லாமல் அமரவோ அல்லது படுக்கவோ இயலாத நிலை ஏற்பட்டதால் மருத்துவ சிகிச்சையை பெற வேண்டிய சூழலுக்கு அவர் நிர்பந்திக்கப்பட்டார்.
இந்த திசுத்திரள் வளர்ச்சியானது, இதயம் மற்றும் நுரையீரல்கள் உட்பட பல உள்ளார்ந்த உறுப்புகளின் அமைவிடத்தையும், இயக்கத்தையும் பாதிக்கும் சாத்தியத்தைக் கொண்டிருந்ததால், இப்பெண்ணின் மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை செயல்முறைகளின் மதிப்பாய்வில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவர்களின் குழு ஒருங்கிணைந்து ஈடுபட்டது. பெண் பாலுறுப்பியல் துறையின் முதுநிலை நிபுணரான டாக்டர் ஆர். நிர்மலாவின் தலைமையில் இயங்கிய அறுவைசிகிச்சை குழுவில் மயக்கமருந்தியல் துறையின் முதுநிலை நிபுணர்கள் டாக்டர். ஜி. அரிமாணிக்கம் மற்றும் டாக்டர். வினோதா தேவி ஆகியோர் முக்கிய பங்களிப்பை வழங்கினர். அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பை டாக்டர். செந்தில்குமார் தலைமையிலான தீவிர சிகிச்சை பிரிவு குழு வழங்கியது.
இந்த அறுவை சிகிச்சை குறித்து டாக்டர். நிர்மலா கூறியதாவது: “இந்த பெண் எங்களிடம் சிகிச்சைக்காக வந்தபோது கடுமையான சுவாச சிரமம், மலச்சிக்கல் மற்றும் அமர்வது, நிற்பது அல்லது படுத்திருப்பது போன்ற அடிப்படையான இயக்கச் செயல்பாடுகளில் பிரச்சனை உட்பட பல்வேறு மருத்துவச் சிக்கல்களை கொண்டிருந்தார். சிடி மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் சோதனைகளையும் மற்றும் கர்ப்பப்பை புற்றுக் கட்டி குறிப்பான்களை கண்டறிவதற்கான சோதனைகளையும் நாங்கள் இப்பெண்ணிற்கு மேற்கொண்டோம். புற்றுநோய் குறிப்பான்கள் எதிர்மறையாக இருந்தபோதிலும் இந்த திசுத்திரளின் அளவு மற்றும் அதிவேக வளர்ச்சியின் காரணமாக புற்றுநோய் இல்லை என்று எங்களால் ஒதுக்கித்தள்ள இயலவில்லை. இத்தகைய தீவிர வளர்ச்சி என்பது தீங்கற்ற ஒரு கழலைக்கட்டியில் காணப்படுவது வழக்கத்திற்கு மாறானதாகும். ஸ்டேஜிங் லேபரோடோமி-ஐ மேற்கொண்ட நாங்கள் கர்ப்பப்பை, சினைப்பைகள், இடுப்பு நிணநீர் முடிச்சுகள் மற்றும் உதரமடிப்பு ஆகிய உறுப்புகளோடு சேர்த்து நார்த்திசு திரளையும் அகற்றினோம். அதிர்ஷ்டவசமா திசு ஆய்வு (பயாப்சி) முடிவுகள் இந்த வளர்ச்சியானது, புற்றுநோய் சாராத ஒரு மிகப்பெரிய நார்த்திசு திரள் என்பதை உறுதி செய்தன.
பெரிய அளவிலான இந்த நார்த்திசுக்கட்டி, இதயம் மற்றும் நுரையீரல்கள் உட்பட பல முக்கியமான உள்ளார்ந்த உறுப்புகளை இடம்பெயரச் செய்து அவைகளின் செயல்பாட்டை பாதித்திருந்ததால் ஒரு சிக்கலான அறுவைசிகிச்சையாக இது இருக்கும் என்பதை நாங்கள் எதிர்பார்த்தோம். இந்த அறுவைசிகிச்சைக்கு நோயாளியை தயார் செய்வதற்காக, அறுவைசிகிச்சைக்கு பிந்தைய காலகட்டத்தில் சிறப்பான மீட்சிக்கு உதவ மூச்சுப் பயிற்சிகளை மேற்கொள்ள நாங்கள் அப்பெண்ணிற்கு பயிற்சியளித்தோம். நார்த்திசுக்கட்டி அகற்றப்பட்டவுடன் அந்த நார்க்கட்டியால் இதுவரை இருந்த மேல்நோக்கிய அழுத்தத்திலிருந்து தீடீரென நுரையீரல்கள் விடுவிக்கப்படும் என்பதால் அதற்கு நுரையீரல்கள் எப்படி பதில்வினையாற்றும் என்பது எங்களுக்கு இருந்த கவலைகளுள் ஒன்றாகும்.
அதிர்ஷ்டவசமாக எவ்வித சிக்கல்களும் இல்லாமல் அறுவைசிகிச்சை வெற்றிகரமாக நிறைவேறியது. இவ்வாறு அவர் கூறினார்.
தஞ்சை மீனாட்சி மருத்துவமனையின் துணை மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர்.வி.பிரவீன், மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ ஆலோசகர் டாக்டர். நுஜாத் ஜெபா மற்றும் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ இணை ஆலோசகர் டாக்டர். ஸ்டெஃபி கிரண் பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.




















