சீர்காழி அருகே வயல்வெளியில் வேலை பார்த்த பெண்களை வைத்து மின்கம்பம் நட்ட மின்வாரியம் - பொதுமக்கள் அதிர்ச்சி
சீர்காழியை அருகே வயல் வெளியில் வேலை பார்த்த பெண்களை கொண்டு கம்பம் நட்டு வைத்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த அரசூரில் சீர்காழி கோட்டம் அரசூர் துணை மின்நிலையம் இருந்து வருகிறது. இங்கிருந்து சுற்றுவட்டார பகுதிகளுக்கு மின்விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் இந்த மின்நிலையத்தில் போதிய மின்ஊழியர்கள் இன்றி அரசூர் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் ஏற்படும் மின் பிரச்னைகளை சரி செய்வதில் வாழ தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் விவசாய பணி, பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் முதியவர்கள் சீரான மின்சாரம் இன்றி அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த சூழலில் அரசூர் அருகே உயர் அழுத்த மின்கம்பம் செல்லும் பாதையில் மின்கம்பம் ஒன்று வயல்வெளியில் சாய்ந்துள்ளது.
இது பல நாட்களாக ஆபத்து விளைவிக்கும் நிலையில் இருந்ததை அடுத்து, அதனை நிமிர்த்து வைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர். ஆனால், போதுமான ஊழியர்களும், மின்கம்பங்களை நிமிர்க்க, ஜேசிபி உள்ளிட்ட எந்த ஒரு தொழில்நுட்பமும் இல்லாததால், அதனை ஊழியர்கள் கயிறு கட்டி நிமிர்த்த முயற்சித்தனர். இருப்பினும் மின்கம்பத்தை நிமித்த முடியாத ஊழியர்கள் அங்கு அருகில் வயல்வெளியில் வேலை செய்த பெண்மணிகளை உதவிக்கு அழைத்து மின் கம்பத்தை நிமிர்த்தி சரி செய்துள்ளனர்.
மின்கட்டணத்தை உயர்த்தி அதிக லாபம் ஈட்டும் அரசு, மின் கம்பத்தை நடுவதற்கும் அதனை நிமிர்த்துவதற்கும், ஜேசிபி உள்ளிட்ட எந்த வாகனங்களின் செலவழிக்காமல், அப்பாவி பொதுமக்களை வைத்து அதும் பெண்களைக் கொண்டு நிமிர்த்திய செயல் கண்டனத்திற்குரியது எனவும், மின் ஊழியர்களே பலர் இப்பணியின் போது உயிரிழப்பு ஏற்பட்ட சம்பவங்கள் நடந்தேறி வரும் நிலையம் இதுபோன்று பாமர மக்களின் உயிருடன் மின்வாரிய ஊழியர்கள் விளையாடுவது மிகவும் கண்டனத்துக்கு உரியது என பதிவிட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் மின் அதிகாரிகளை விமர்சித்து வைரல் ஆகி வருகிறது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்