சக மீனவர்களை சிறை பிடித்த தரங்கம்பாடி மீனவர்கள் - தொடரும் சுருக்குமடிவலை பிரச்னை
சுருக்குமடி வலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 21 மீனவ கிராம மீனவர்கள் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு கடல் வளத்தை பாதுகாக்கும் வகையில் சுருக்குமடி இரட்டைமடி வலை, அதிவேக குதிரை திறன் கொண்ட எந்திரம் பொருத்தப்பட்ட விசைப்படகு பயன்படுத்தி மீன் பிடித்தல் உள்ளிட்ட 21 மீன்பிடி ஒழுங்குமுறை தடைச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. இதனால் சுருக்குமடி வலை பயன்படுத்தி மீன்பிடிக்கும் மீனவர்கள், அதனை பயன் படுத்தாத மீனவர்கள் இன இருதரப்பு மீனவர்களால மீனவர்கள் இடையே பிரிவு ஏற்பட்டு, இருதரப்பினரும் அடிக்கடி மோதிக்கொள்வது தொடர் கதையாக இருந்து வருகிறது. மேலும், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் இருந்து வந்தது.
இந்நிலையில் பல்வேறு நிபந்தனைகளுடன் கடந்த சில மாதங்களுக்கு முன் சுருக்குமடி வலை பயன்படுத்தி 12 நாட்டிகல் மயிலுக்கு அப்பால் மீன் பிடிக்கலாம் என்று, உச்ச நீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு வழங்கியது. ஆனால் உச்சி நீதிமன்றம் சில நிபந்தனைகளையும் வழிகாட்டுதலும் கூறி இருந்தது. ஆனால் அதனை சுருக்குமடிவலை பயன்படுத்தும் மீனவர்களால் முழுமையாக நடைமுறை படுத்துவதில் சிக்கல்கள் உள்ளன. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீனவ கிராமம் அருகே கடலில் நேற்று தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்ததாக மீன்களை ஏற்றி வந்த பைபர் படகையும், படகில் இருந்த சந்திரபாடி மீனவர்கள் மூன்று பேரையும் தரங்கம்பாடி மீனவர்கள் சிறைப்பிடித்து, தரங்கம்பாடி துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர்.
இச்சம்பவம் அறிந்து வந்த கடலோர காவல் படை மற்றும் பொறையார் காவல்துறையினர் மீனவ பஞ்சாயத்தார்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சந்திரபாடி மீனவர்களை பொறையார் காவல் நிலையம் அழைத்து சென்றனர். மீன்வளத்துறை அதிகாரிகள் முன்னிலையில் படகில் இருந்த மீன்கள் தரங்கம்பாடி துறைமுகத்தில் ஏலமிடப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக பொறையார் காவல் நிலையத்திற்கு வந்த சந்திரப்பாடி மீனவர்கள் தரங்கம்பாடி மீனவர்களின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த சூழலில், சுருக்குமடி வலையை முழுமையாக தடை செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி, சின்னூர்பேட்டை, குட்டியாண்டியூர், வெள்ளக்கோயில், பெருமாள் பேட்டை, புதுப்பேட்டை, சின்னங்குடி, சின்னமேடு, வானகிரி, நாயக்கர் குப்பம், கீழ மூவர்கரை, மேலமூவர்கரை, தொடுவாய், பழையார், கொடியம்பாளையம் உள்ளிட்ட மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 21 மீனவ கிராம மீனவர்கள் இன்று முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் 4000 -க்கும் மேற்பட்ட பைபர் படகுகள், 300 - க்கும் மேற்பட்ட விசை படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அரசால் தடைசெய்யப்பட்ட சுருக்குமடிவலை சம்பந்தமாக இன்று மாலை தரங்கம்பாடியில் 21 மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதனால் மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராமங்களுக்கு இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.