Mayiladuthurai: மக்களை குழப்பி வரும் மின்வாரியம் - மின் நிறுத்தம் செய்வதில் சீர்காழியில் குளறுபடி
சீர்காழி தாலுக்காவில் மேற்கொள்ள இருந்த மின்நிறுத்தம் மூன்று முறை தேதி மாற்றப்பட்டதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கோடை காலங்களில் ஏற்படும் மின்வெட்டு இருக்காது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார். இருந்த போதிலும் கடந்த சில மாதங்களாக பல்வேறு பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவி வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் மின்வாரியத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டாலும். தடையில்லா மின்சாரம் வழங்குவதில் சிக்கல் நிலவி வருகிறது. மேலும் மழை, காற்று என பல்வேறு காரணங்களால் மின்தடை ஒருபுறம் ஏற்பட்டாலும், மாதந்தோறும் பராமரிப்பு பணிகளுக்காக ஒரு நாள் மின் நிறுத்தம் மின்சார வாரியம் மூலம் மேற்கொள்ளப்படும்.
அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த மாதம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக மின் நிறுத்தம் செய்வதாக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மூன்று முறை தேதிகள் அறிவிக்கப்பட்டு, பிறகு அது வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு தரப்பினரும் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட தேதியில் பல தொழிற்சாலைகளிலும், தொழில் நிலையங்களிலும், பணிகள் மேற்கொள்ள முடியாத சூழலில் அங்குள்ள பணியாளர்களுக்கு உரிமையாளர்கள் விடுமுறை அளித்து விடுகின்றனர். ஆனால் அறிவித்தபடி மின் நிறுத்ததை செய்யாமல் தொடர்ந்து தேதியை மாற்றி வருவதால் அவர்களுக்கு தொழிலில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 15 நாட்களில் மூன்று முறை மின் நிறுத்தம் செய்வதாக அறிவித்துவிட்டு, பின்னர் அதனை வாபஸ் பெற்றதால் மூன்று நாட்களுக்கு ஊழியர்களுக்கு விடுமுறை அளித்ததால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என்றும், இது போன்று பல்வேறு தரப்பினரும் மின் நிறுத்த தேதியில் வேறு பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டு அந்த பணிகளும் மின் நிறுத்தம் செய்யப்படாததால் பாதிக்கப்பட்டுள்ளது என வேதனை தெரிவிக்கின்றன. மேலும் பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் மேற்கொள்வதில் என்ன குளறுபடி எனவும், மின் நிறுத்தம் செய்யும் தேதி ஒரு முறை மாற்றம் என்பது இயல்பான ஒன்று என்றும், ஆனால் கடந்த 15 நாட்களில் 3 முறை தேதியை மாற்றி மக்களை பல இன்னலுக்கு ஆளாக்கி வருவதற்கான காரணம் என்ன என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இனி வரும் காலங்களில் முறையாக ஆய்வு செய்து மின் நிறுத்த தேதியினை சரியாக அறிவிக்க வேண்டும் என வேண்டுகோள் பல்வேறு தரப்பினரும் விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்