மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடரும் கதண்டு வண்டு தாக்குதல் - பொதுமக்கள் பீதி
சீர்காழி அருகே நூறுநாள் வேலையில் ஈடுபட்டிருந்தவர்களை கதண்டு வண்டு கடித்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கதண்டு என்ற கொடிய விஷவண்டு அதிகஅளவில் காட்டுப்பகுதியில் காணப்படும். காடுகள் அழிக்கப்பட்டதால் பனைமரங்கள், தென்னை மரங்கள் மற்றும் பாழடைந்த கட்டங்களில் இவைகள் கூடுகட்டி வசித்து வருகிறது. இந்த கொடிய விஷவண்டு கூட்டமாக வந்து தாக்கும் குணம் கொண்டது. ஒருவரை 5 -க்கும் மேற்பட்ட கதண்டுகள் கடித்தால் உயிர்பிழைப்பது கடினம். தலையில் கடித்தால் விஷம் உடனடியாக மூளையை தாக்கும் கிட்னியை செயலிழக்க செய்யும். சிறு குழந்தைகளை இரண்டு வண்டுகள் கடித்தாலே உயிரிழக்க நேரிடும்.

வண்டுகள் இனத்தில் கொடிய விஷமுள்ள இந்த வண்டுகள் கூடுகட்டியிருப்பதை அறிந்து தகவல் தெரிவித்தால், அதை உடனடியாக தீயணைப்பு துறையினர் அழித்துவிடுவர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அடர்ந்த காட்டுப்பகுதி பனைமரங்களில் உள்ள கதண்டுகள் அழிக்கப்பட்டு வந்தாலும், கதண்டு விஷவண்டு தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு அவ்வப்போது வந்து பொதுமக்கள் சிகிச்சை பெற்று செல்வது தொடர்கதையாக இருந்து வருகிறது.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா சரஸ்வதி விளாகம் கிராமத்தில் உள்ள கன்னி வாய்க்கால் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் இன்று தூர்வாரப்பட்டுள்ளது. இப்பணியில் அதே கிராமத்தைச் சேர்ந்த 55 வயதான வனமயில், 60 வயதான சந்திரன், 50 வயதான வாசுகி, 48 வயதான லதா, 60 வயதான சரஸ்வதி, 60 வயதான கஸ்தூரி, 60 வயதான ராஜமாணிக்கம், 55 வயதான கலாமதி, 58 வயதான வடிவேல், 55 வயதான வசந்தா, 45 வயதான பொன்னாச்சி ஆகிய 11 பேர் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அருகில் இருந்த மரத்திலிருந்து பலத்த சத்தத்துடன் பறந்து வந்த கதண்டு வண்டுகள் தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்த கூலித் தொழிலாளர்களை தாக்கி கடித்துள்ளது. இதில் லேசான காயமடைந்த நான்கு பேர் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். மேலும் படுகாயம் அடைந்த ஏழு பேர் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்த கொள்ளிடம் காவல்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர். நூறு நாள் வேலையில் ஈடுபட்டு தொழிற்சாலைகளை கதண்டு வண்டு கடித்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் பல இடங்களில் இது போன்ற விஷ வண்டுகள் அங்கங்கே கூடு கட்டி வருவதும், அவ்வப்போது மக்களையும், மரத்தடியில் விளையாடும் குழந்தைகளையும் கடித்து காயப்படுத்துவதும், இதனால் சிலர் உயிரிழக்கும் சம்பங்களும் நடந்தேறி வருவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினரின் உதவியுடன், தீயணைப்பு மீட்பு பணிகள் இல்லாத நேரங்களில் இது போன்று பழைமையான மரங்கள், கட்டிடங்களை அவ்வப்போது ஆய்வு செய்து அவற்றில் கூடு கட்டியுள்ள விஷ வண்டுகளை அழிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சமுக ஆர்வலர்கள் பலரும் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மயிலாடுதுறை அருகே ஒரு மூதாட்டி கதண்டு வண்டு கடித்து உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.






















