EPS Vs Udhayanidhi Stalin: இபிஎஸ்சை இழுக்காதீங்க! உதயநிதி ஸ்டாலினுக்கு இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்றம்..
எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
![EPS Vs Udhayanidhi Stalin: இபிஎஸ்சை இழுக்காதீங்க! உதயநிதி ஸ்டாலினுக்கு இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்றம்.. The Madras High Court has ordered an interim restraining order against Minister Udayanidhi Stalin in the Edappadi Palaniswami case EPS Vs Udhayanidhi Stalin: இபிஎஸ்சை இழுக்காதீங்க! உதயநிதி ஸ்டாலினுக்கு இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்றம்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/21/98fc8b7ac95bf6f28f8ff3bcfedcee0a1695283288316589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்புபடுத்தி கருத்துக்களை தெரிவிக்க, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், செப்டம்பர் 7ஆம் தேதி வெளியிட்டிருந்த அறிக்கையில், சானாதனத்திற்கான அர்த்தத்தை அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தன் வீட்டில் உள்ள புத்தக அலமாரியில் இருக்கும் தேடிக்கொண்டிருப்பதாக தெரிவித்திருந்தார். கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக ஆட்டுதாடியின் பின்னால் நீண்ட நாள் ஒளிஞ்சிருக்க முடியாது என்றும், அந்த ஆடே காணாமல் போகும்போது உங்கள் நிலைமை என்னாகும் என்பதை யோசித்துப் பாருங்கள் என்று எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்தை வெளியிட்டிருந்தார்.
இந்த அறிக்கையில் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், அவதூறு பரப்பும் வகையிலும், உதயநிதி பேசியிருப்பதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மான நஷ்ட ஈடு கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தன்னை பற்றி பேச அமைச்சர் உதயநிதிக்கு தடை விதிக்க வேண்டுமெனவும், ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மான நஷ்ட் ஈடாக வழங்க உத்தரவிட வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனு நீதிபதி மஞ்சுளா முன் விசாரணைக்கு வந்தபோது, ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக விசாரிக்கப்பட்டு வரும், கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் ஒரு முறை கூட விசாரணைக்கு அழைத்து சம்மன் அனுப்பவில்லை எனவும், விசாரிக்கப்படவில்லை எனவும், அரசு இயந்திரம் அவர்கள் வசம் தான் உள்ளதால் விசாரித்திருக்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும், எந்த ஊழல் வழக்கும் இல்லை. திமுக முக்கிய நிர்வாகி 2018ல் அளித்த ஊழல் புகாரில் ஆதாரங்கள் இல்லை என ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையில் அளிக்கப்பட்டு, அதை அரசும் ஏற்றுள்ளதாகவும், இது சம்மந்தமான வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது எனவும், நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பொய்யான குற்றச்சாட்டுக்கள், எக்ஸ் சமூக வலை தளத்தில் தெரிவித்ததாகவும், அதை 6 லட்சத்து 72 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர் எனவும், தேர்தல் நேரத்தில் அவதூறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது.
இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, அரசியல் தலைவர்கள் பரஸ்பரம் அறிக்கைகள் விடுவது வழக்கம் என்றாலும், இந்த வழக்கில் உள்ள ஆதாரங்களில் இருந்து உதயநிதி அறிக்கை அவதூறாக உள்ளதாகவும், இதை அனுமதித்தால் மனுதாரருக்கு ஈடுகட்ட முடியாத இழப்பு ஏற்படும் என்பதால், மேற்கொண்டு இதுபோல அறிக்கைகள் வெளியிட கூடாது என உதயநிதி ஸ்டாலினுக்கு தடை விதிக்க ஆரம்பகட்ட முகாந்திரம் உள்ளது எனக் கூறி, இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், மனுவுக்கு 2 வாரங்களில் பதிலளிக்க உதயநிதி ஸ்டாலினுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)