மயிலாடுதுறை: ’சுருக்கு மடி வலைக்கு அனுமதி வேண்டும்’ : 21 கிராம மீனவர்கள் தொடர் போராட்டம்..!
சுருக்கு மடி வலைக்கு அனுமதி வழங்க கோரி 21 மீனவ கிராமங்களை சேர்ந்த 5000-க்கும் மேற்பட்ட மீனவர்கள், தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் இரண்டாவது நாளாக ஈடுபட்டுள்ளனர்.

கடலில் மீன்வளத்தைப் பாதுகாக்கும் நோக்கில், மீன்வளத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தமிழக கடற்கரையில் தடைசெய்த மீன்பிடி வலையான சுருக்குமடி வலை மற்றும் இரட்டைமடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்து வருகின்றனா். இதுபோன்ற அரசால் தடை செய்த வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பில் ஈடுபடும்போது, அதிக கடற்பரப்பு மீன் பிடிப்புக்கு உட்படுத்தப்படுகிறது. அத்துடன், பல்வேறு வகையான சிறு மீன்கள் உட்பட அதிக அளவில் மீன்கள் பிடிபடுவதுடன், கடலின் அடிப்பகுதியில் உள்ள இயற்கை சூழ்நிலையும் பாதிக்கப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் மீன்களின் இனப்பெருக்கம் தடுக்கப்பட்டு, மொத்த மீன் உற்பத்தியும் பாதிக்கப்படுகிறது. அதேபோல், தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்களைப் பிடிப்பதால், மீனவா்களிடையே பல்வேறு பிரச்னைகள் மற்றும் மீனவா்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், மீன்வளமும் அழிக்கப்படும் சூழ்நிலை உள்ளது.

இதைக் கருத்தில்கொண்டே மீனவா்கள் சுருக்கு மடி, இரட்டை மடி உள்ளிட்ட அரசால் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித் தொழிலில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தி வருகிறது. மேலும், மீனவா்கள் எவரேனும் தடைசெய்த மீன்பிடி வலையான சுருக்கு மடி வலை, இரட்டைமடி வலைகள் வைத்திருந்தால், சம்பந்தப்பட்ட மீன்வளத் துறை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஒப்படைக்கத் தவறும் பட்சத்திலும், எதிா்வரும் காலங்களில் தடைசெய்த மீன்பிடி வலையான சுருக்குமடி வலை மற்றும் இரட்டைமடி வலைகளைக் கொண்டு மீன் பிடிப்பது தெரியவரும் பட்சத்திலும், தடைசெய்யப்பட்ட இந்த வலைகளை மறைமுகமாக பெரிதும் லாபம் தரும் நோக்கத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மீனவா்களுக்கு விற்பனை மற்றும் விநியோகம் செய்வோா் மீதும் தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-இன் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மீன்பிடி ஒழுங்கு முறை சட்டம் படி தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டுள்ள 21 வகை யான மீன்பிடி ஒழுங்குமுறையை நடைமுறைப்படுத்தாமல் சுருக்குமடி வலையை மட்டும் தடை செய்துள்ளதாகவும். தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கும் மற்ற மீனவர்களுக்கு அரசு அனுமதித்து வருவதாகவும். எனவே, சுருக்கு மடி மீனவர்களையும் கடலுக்குச் செல்ல அனுமதிக்கவேண்டும் என கூறி மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த சுருக்குமடி வலை பயன்படுத்தும் மீனவர்கள் அவர் அவர் கிராமங்களில் நேற்று முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் நாகப்பட்டினம் மாவட்ட மீன்வளத்துறை இணை இயக்குனர் ரெட்சல் மற்றும் உதவி இணை இயக்குனர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் மீனவர்களின் கோரிக்கையை அரசிடம் எடுத்துக்கூறி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதனை ஏற்க மறுத்த மீனவர்கள் சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என தெரிவித்து கலைந்து சென்ற அதனை தொடர்ந்து மீனவர்கள் இரவு நேரத்திலும் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர்.

இந்த சூழலில் இன்று 2-வது நாளாக மீனவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களது போராட்டத்திற்கு அரசு செவி சாய்க்கவில்லை என்றால் போராட்டத்தை தீவிரப்படுத்த போவதாகவும், ரேஷன் கார்டு மற்றும் ஆதார் அட்டைகளை அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்க போவதாகவும், தெரிவித்து திடீரென மயிலாடுதுறை மாவட்டம் மடவாய்மேடு மீனவ கிராமத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மீனவ பெண்கள் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து புதுப்பட்டினம் காவல் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கரை ஏறி வந்து உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து உள்ளனர்.





















