மயிலாடுதுறை 114.48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.. அமைச்சர் ஆய்வு
மயிலாடுதுறையில் 114.48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் பயன்பாட்டுக்கு வரும் என அமைச்சர் எ.வ.வேலு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட்டு, மாவட்டத்தின் முதல் ஆட்சியராக இரா.லலிதா நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, மயிலாடுதுறை தெற்குவீதியில் உள்ள தற்காலிக கட்டடத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்நிலையில், மன்னம்பந்தல் ஊராட்சி பால் பண்ணை அருகில் 114.48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நிரந்தர மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் பிற அரசு துறை அலுவலக கட்டட கட்டுமானப் பணிகளின் தரத்தினை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று இரண்டாவது முறையாக பார்வையிட்டார்.
முன்னதாக ஆய்வுக்கு வருகை தரும் அமைச்சரை வரவேற்க மாவட்ட ஆட்சியர் லலிதா, மயிலாடுதுறை நகர் மன்ற தலைவர் செல்வராஜ் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் ஆட்சியர் அலுவலகம் கட்டும் இடத்தில் காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த அமைச்சர் காரை விட்டு இறங்கும் முன்பு அமைச்சருக்காக காத்திருந்த மாவட்ட ஆட்சியர் லலிதா அமைச்சரின் கார் கதவை திறந்து வரவேற்றார். பொதுவாக அமைச்சரின் உதவியாளர் அல்லது பாதுகாப்பு அதிகாரிகள் அமைச்சர்களின் கார் கதவை திறந்து விடுவது வழக்கம். ஆனால் திமுகவினர், துறைசார்ந்த அதிகாரிகள் பலர் இருந்தும் அவர்கள் யாரும் அமைச்சரின் கார் கதவை திறக்க முன்வராத நிலையில் இந்திய ஆட்சிப் பணி ஐஏஎஸ் அதிகாரி அவர் வகிக்கும் பதவியினை மறந்து அமைச்சரின் கார் கதவை திறந்துவிட்ட நிகழ்வு பலரது மத்தியில் பேசு பொருளாகியுள்ளது.
இந்நிகழ்விற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு கூறுகையில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க 114.48 கோடி நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டு, 18 மாதங்களில் கட்டப் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. தரைதளம் மற்றும் 7 அடிக்குமாடி தளங்களுடன் 26,024 சதுரமீட்டர் பரப்பளவில் கட்டப்படவுள்ளது. மேலும் இந்த பணியினை 03.10.2023 முடித்து தர ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் இதனை விரைவாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என முதல்வர் கருதுவதால் விரைவில் முடிப்பதற்காக தான் மீண்டும் இன்று ஆய்வுக்கு வந்தேன். ஒப்பந்ததாரர் ஒப்பந்த தேதிக்கு மூன்று காலம் முன்னதாகவே பணியை முடித்து தருவதாக தெரிவித்துள்ளார். ஆகையால் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளது.
மேலும் மாநில சாலைகள் அமைப்பை பொறுத்த வரை முழுமையாக நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட பின்னரே சாலை அமைக்கும் பணி தொடங்கும். சாலை பணிக்காக நிலம் கையகப்படுத்துவதற்காகவும் காலதாமதத்தை போக்க ஐந்து நில எடுப்பு டிஆர்ஓ நியாயம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் மாநில சார்பில் மேற்கொள்ளும் சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார். விழுப்புரம் - நாகை நான்கு வழி சாலைக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு உரிய தொகை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு, மத்திய அரசு நெடுஞ்சாலை துறை அதிகாரியுடன் பேசி இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் பொது பணித்துறையில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்கள் நிதி நிலைமை சீரானதும் நல்ல தீர்வு பெற்று தருவோம் என தெரிவித்தார். ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் லலிதா, சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்