’மயிலாடுதுறையில் திமுக பேரணி’ போக்குவரத்து நெரிசலில் சிக்கிய கலெக்டர்..!
மயிலாடுதுறையில் திமுகவினர் பேரணி மற்றும் சாலை நடுவே வைத்த வானவேடிக்கையால் மாவட்ட ஆட்சியர் வாகனம் உட்பட்ட ஏராளமானோர் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய அவதி அடைந்தனர்.
நாகையில் இருந்து மயிலாடுதுறை மாவட்டம் பிரிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் திமுக மயிலாடுதுறை மாவட்டத்தின் பொறுப்பாளர் என தனியாக அறிவிக்காமல் நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் என நிமித்து ஒருங்கிணைந்த நாகை மாவட்டமாகவே செயல்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது முதல் முறையாக மயிலாடுதுறை மாவட்டத்தின் புதிய திமுக பொறுப்பாளராக முன்னாள் நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரான நிவேதா.முருகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதனை அடுத்து மயிலாடுதுறையில் உள்ள திமுக அலுவலகத்தில் இருந்து பேருந்து நிலையம் வரை புதிய திமுக மாவட்ட பொறுப்பாளர் நிவேதா.முருகன் தலைமையில் திமுகவினர் திடீர் பேரணியாக வந்து புதிய பேருந்து வாயில் பகுதியில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். இதன் காரணமாக பெரிய கடை வீதி, பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால், மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு பணியை முடித்துக் கொண்டு அவ்வழியே வந்த மாவட்ட ஆட்சியர் லலிதாவின் வாகனம் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. அனுமதி இன்றி திமுகவினர் திடீர் பேரணியால் போதிய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் இல்லாததால் மாவட்ட ஆட்சியரின் பாதுகாவலர் மற்றும் உதவியாளர்கள் ஆட்சியரின் காரில் இருந்து இறங்கி போக்குவரத்து நெரிசலை சீர் செய்து அங்கிருந்த தாமதமாக புறப்பட்டு சென்றனர்.
இருப்பினும் அரைமணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்கு உள்ளனர். மேலும், நடுரோட்டில் பட்டாசுகளை வெடித்தும், தொடர்ந்து 15 நிமிடத்திற்கு வெடிக்கக் கூடிய வான வேடிக்கைகளை சாலையின் நடுவில் வைத்து வெடிக்க செய்தனர். அப்பகுதியில் ஒரே ஒரு போக்குவரத்து காவலர் மட்டுமே போக்குவரத்தை சீர்செய்து கொண்டிருந்த நிலையில், திமுகவினரின் இந்த செயலால் போக்குவரத்து நெரிசல் அதிகமாவதை உணர்ந்த அந்த காவலர் ஓரமாக வெடியை வெடியுங்கள் என்று திமுகவினரிடம் அமைதியான முறையில் வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால், அதனை ஏற்காமல் திமுகவினர் தொடர்ந்து அவர்கள் பாணியிலேயே வெடிகளை வெடித்தனர்.. திமுகவினர் இந்த செயலால் அவர்கள் நிகழ்ச்சி முடிந்து அப்பகுதியைவிட்டு சென்ற அரை மணி நேரத்திற்கு மேலும் போக்குவரத்து நெரிசல் நீடித்தது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்