மயிலாடுதுறையில் தடை செய்யப்பட்ட 2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - 1 லட்சம் ரூபாய் அபராதம்
மயிலாடுதுறையில் அரசால் தடைசெய்யப்பட்ட 2 டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த நகராட்சி அதிகாரிகள், 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக், பிளாஸ்டிக் கப் உள்ளிட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் மயிலாடுதுறையில் பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்படுவதாக நகராட்சி நிர்வாகத்துக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து, நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தமிழ்ஒளி ஆகியோர் தலைமையில் நகராட்சி மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் மயிலாடுதுறை நகரில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது திருவிழந்தூர் காவிரி பாலம் அருகே உள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட நெகிழிப்பொருள்கள் சுமார் 2 டன் அளவிற்கு இருந்ததை கண்டு பிடித்த அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் கடைக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
மயிலாடுதுறையில் 96 சிற்றிலக்கியங்களை 49 வினாடிகளில் ஒப்புவித்து சாதனை படைத்ததை நோபல் வேர்ல்டு ரெக்கார்டு அமைப்பு பதிவு செய்துள்ளது.
மயிலாடுதுறையில் தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருபவர் சௌந்தரபாண்டியன் மகள் ஜீவனாஸ்ரீ. சௌந்தரபாண்டியன் தமிழாசிரியர் என்பதால் சிறுவயது முதல் ஜீவனாஸ்ரீக்கும் தமிழ் மீதும், தமிழ் இலக்கியங்கள் மீதும் ஆர்வம் இருந்துள்ளது. இதையடுத்து, அவர் பள்ளியில் நடைபெற்ற பல்வேறு தமிழ் கட்டுரைப் போட்டிகள், பேச்சுப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை பெற்றுள்ளார்.
இந்நிலையில், தமிழ் சார்ந்து ஏதேனும் சாதனை படைக்க வேண்டும் என விரும்பிய ஜீவனாஸ்ரீக்கு தமிழ் சிற்றிலக்கியங்களின் பெயர்களை கற்றுத் தந்துள்ளார் சௌந்தரபாண்டியன். இதையடுத்து, 96 சிற்றிலக்கியங்களின் பெயர்களையும் குறைந்த நேரத்தில் ஒப்புவிக்க மாணவி தயாரானார். இதையடுத்து, இவரது சாதனையை நோபல் வேர்ல்டு ரெக்கார்டு அமைப்பு சாதனையாக பதிவு செய்தது. இதில், மாணவி 96 சிற்றிலக்கியங்களின் பெயர்களை 49 வினாடிகளில் சொல்லி சாதனை படைத்துள்ளார்.