மேலும் அறிய
திருவாரூரில் டாஸ்மாக் கடைகளால் மக்கள் அவதி- நடவடிக்கை எடுப்பாரா ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன்...!
’’திருவாரூர் மாவட்ட ஆட்சியராக புதிதாக பொறுப்பேற்றுள்ள காயத்ரி கிருஷ்ணன் அவர்கள் பெண்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு விம்மல் பகுதியில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரிக்கை’’

மக்கள் அதிகாரம் அமைப்பினர்
திருவாரூர் விளமல் டாஸ்மாக் மதுகடையினை முற்றிலும் அகற்றிட கோரி மக்கள் அதிகாரம் அமைப்பினர் வலியுறுத்தல்.
தமிழ்நாடு முழுவதும் பூரண மதுவிலக்கு கொண்டுவர வலியுறுத்தி தொடர்ந்து பல்வேறு தரப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் பள்ளி, கல்லூரி, கோயில்கள், ஆகிய இடங்களுக்கு அருகாமையில் மதுபான கடைகள் இருக்க கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் மதுபான கடைகள் தற்போது வரை இருந்து வருகிறது. இதனால் அதிகளவில் விபத்துக்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் திருவாரூர் அருகே மன்னார்குடி சாலையில் விளமல் பகுதியில் சாலை ஓரத்தில் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான கடையின் காரணமாக அதிக அளவில் விபத்துகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் திருவாரூர் மாவட்ட மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம் தலைமையில், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் முஜிபுர் ரகுமான், மக்கள் அதிகாரம் மாவட்ட அமைப்பாளர் முரளி மற்றும் பலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது,
திருவாரூர் விளமல் பகுதியில் மன்னார்குடிக்கு செல்லும் சாலையில் இரண்டு டாஸ்மாக் மது கடைகள் உள்ளன. இந்த இடம் என்பது மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலம் என முக்கிய அலுவலங்களுக்கும் செல்லும் பிரதான சாலையாகும். மேலும் புதிய பேருந்து நிலையமும் அருகாமையில் அமைந்துள்ளது. மேலும் திருவாரூர்-மன்னார்குடி சாலை, தஞ்சை-நாகை பிரதான சாலை, திருவாரூர்-கும்பகோணம் சாலை என அனைத்து சாலைகளும் இணைக்கின்ற முக்கிய பகுதியாக இருந்து வருகிறது.
குறிப்பாக அரசு மருத்துவக்கல்லூரிக்கு அவசர சிகிச்சைக்காக செல்லும் 108 ஆம்புன்ஸ் எந்த நேரமும் செல்கின்ற பகுதியாகும். இதனால் எந்த நேரமும் போக்குவரத்து மிகுந்த பகுதியாக இருந்து வருகிறது. இந்த பிரதான சாலையில் 2 டாஸ்மாக் மதுகடைகளால் எப்போதும் மதுபிரியர்கள் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் அவர்கள் வாகனங்கள் ரோட்டில் நிற்பதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. அவசர பயணம் செல்பவர்கள் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர். மது போதையில் திரிபவர்களால் அந்த வழியாக செல்லும் மக்கள், குறிப்பாக பெண்களுக்கு மிகுந்த தொந்தரவாக இருந்து வருகிறது.

எனவே அனைத்து தரப்பு மக்களின் நலன் கருதி உடனடியாக இந்த 2 டாஸ்மாக் மதுக்கடைகளை முற்றிலும் அகற்றிட வேண்டும். மேலும் இந்த இரண்டு மதுக்கடைகளை அகற்ற வலியுறுத்தி கடந்த பல வருடங்களாக அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலர்களிடமும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கிறார்களே தவிர இதுவரை கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது திருவாரூர் மாவட்ட ஆட்சியராக புதிதாக பொறுப்பேற்றுள்ள காயத்ரி கிருஷ்ணன் அவர்கள் பெண்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு, விளமல் பகுதியில் செயல்பட்டுவரும் இரண்டு மதுபான கடைகளையும் உடனடியாக அந்த இடத்திலிருந்து அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் அனைத்து அமைப்பினரையும் திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















