Mahalaya Amavasya 2024: திருவையாறில் குவிந்த பொதுமக்கள்... முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு
மாதம்தோறும் வரும் அமாவாசை அன்று மறைந்த மூதாதையர்களுக்கு திதி கொடுக்க தவறியவர்கள் புரட்டாசி மாதம் மஹாளய அமாவாசை அன்று தர்ப்பணம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
தஞ்சாவூா்: மாதம்தோறும் வரும் அமாவாசை அன்று மறைந்த மூதாதையர்களுக்கு திதி கொடுக்க தவறியவர்கள் புரட்டாசி மாதம் மஹாளய அமாவாசை அன்று தர்ப்பணம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அந்த வகையில் இன்று மஹாளய அமாவாசையை ஒட்டி திருவையாறு படித்துறையில் ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்து முன்னோர்களை வழிப்பட்டனர்.
புரட்டாசி மாதத்தில் வரும் விசேஷமாக மஹாளய அமாவாசை
புரட்டாசி மாதத்தின் விசேஷங்களில் ஒன்று மஹாளய அமாவாசை. புரட்டாசி மாதத்தின் முதல் 15 நாள்கள் மகாளயபட்சம் என்று போற்றப்படுகிறது. தட்சிணாயினப் புண்ணியகாலமான ஆடி மாத அமாவாசை அன்று பித்ருக்கள் தங்கள் உலகங்களில் இருந்து புறப்பட்டு புரட்டாசி மாதம் பூவுலகுக்கு வந்து சேர்வார்கள்
.
புரட்டாசி மாதம் அமாவாசை தினம் வரை அவர்கள் நம்மோடு தங்கியிருப்பதாக ஐதிகம். எனவேதான் அந்தப் பதினைந்து நாள்களும் முன்னோர்கள் வழிபாடு மேற்கொள்ளவேண்டும் என்று நம் முன்னோர்கள் கருதினர். ஆனால் எல்லோராலும் பதினைந்து நாள்களும் வழிபாடு செய்ய இயலாது. என்றாலும் குறைந்தபட்சம் மகாளய அமாவாசை தினத்திலாவது முன்னோர் வழிபாடு செய்ய வேண்டியது அவசியம்.
முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்வது சிறப்பு
நதிக்கரைகளில், சமுத்திரக் கரைகளில் மகாளய அமாவாசை தர்ப்பணம் செய்வது மிகவும் சிறப்பு. இயலாதவர்கள் வீட்டிலேயே செய்யலாம். எள்ளும் தண்ணீரும் எடுத்துக்கொண்டு முன்னோர்களின் பெயரைச் சொல்லி விடுவதன் மூலம் முன்னோர்களை எளிதாகத் திருப்தி செய்ய முடியும். மகாளய அமாவாசை நாளில் செய்யும் தர்ப்பணம் பித்ருக்களின் ஆசியைப் பெற்றுத்தரும். ஆண்டுதோறும் முன்னோர் வழிபாடு செய்யாதவர்கள்கூட இந்த நாளில் செய்கிறபோது ஆண்டுமுழுவதும் வழிபட்ட பலன் கிடைத்துவிடும்.
மாதம் தோறும் வரும் அமாவசை அன்று மறைந்த மூதாதையர்களுக்கு திதி கொடுக்க தவறியவர்கள் புரட்டாசி மாதம் மஹாளய அமாவாசை அன்று தர்ப்பணம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
இன்று புரட்டாசி மஹாளய அமாவாசையை ஒட்டி வழிபாடு
அதன்படி இன்று புரட்டாசி மாதம் மஹாளய அமாவாசை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி கரை புஷ்பமண்டப படித்துறையில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் புனித நீராடி, அரிசி, காய்கறி, கீரை உள்ளிட்ட பொருட்களை புரோகிதர்களுக்கு தானமாக வழங்கி, மறைந்த தங்கள் முன்னோர்களை நினைத்து எள் தண்ணீரை காவிரி ஆற்றில் விட்டு சூரிய பகவானுக்கு தீபம் காட்டி வழிப்பட்டனர். பின்னர் ஐயாறப்பர் கோவிலில் சென்று சாமி தரிசனம் செய்தனர். கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமானவர்கள் வந்து காவிரிக் கரையில் புனித நீராடி மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்துச் சென்றனர். இதனையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். இதேபோல் தஞ்சை புது ஆற்று படித்துறைகளிலும் ஏராளமானவர்கள் தங்களை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். தொடர்ந்து முன்னோர்களை நினைத்து மனமுருகி வழிபட்டனர். இதனால் வழக்கத்தை விட பேருந்துகளில் அதிக பயணிகள் கூட்டம் இருந்தது. காலை முதல் பொதுமக்கள் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த வண்ணம் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.