அழுகிய நாற்றுகளுடன் விவசாயிகள் போராட்டம் - மழை பாதித்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு தர கோரிக்கை
மழையால் பாதிக்கப்பட்டுள்ள சம்பா, தாளடி நெல் சாகுபடிக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் வழங்க கோரிக்கை
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கும்பகோணம் தலைமை அஞ்சலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட செயலாளர் தர்மராஜன் தலைமை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையினால் சம்பா, தாளடி நெற்பயிர்கள் அனைத்தும் அழுகி நாசமாகி விட்டன. இதனை தமிழக முதல்வர், எதிர்கட்சிதலைவர் உள்ளிட்டவர்கள் பார்வையிட்டு சென்றனர். பலத்த மழை வெள்ளம் பாதிப்புக்கு தமிழ்நாடு அரசு கோரியுள்ள 4,025 கோடி நிதி மற்றும் தற்போதைய பாதிப்புக்கு கோரும் நிதியையும் முழுமையாக மத்திய அரசு வழங்கிட வேண்டும். முழுமையாக அழிந்துள்ள சம்பா, தாளடி நெல் சாகுபடிக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் வழங்க வேண்டும். மேலும், குறுவை அறுவடை செய்ய வேண்டிய நிலையில் மழை நீரில் மூழ்கி அழிந்து போன ஏக்கருக்கு 30 ஆயிரம் வழங்க வேண்டும்.
நெல், பூக்கள், நிலக்கடலை, மரவள்ளி, உளுந்து, வாழை, கரும்பு, மக்காச்சோளம், பருத்தி, நிலக்கடலை மற்றும் காய்கறிகள், மானாவாரி தோட்டக்கலை பயிர்கள் பெருமளவு பாதித்துள்ளது. இவ்விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மழை,வெள்ள பாதிப்பால் இறந்து போனவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். மழை வெள்ள பாதிப்பு மற்றும் கோமாரி மர்ம நோய்களால் பாதிக்கப்பட்டு இறந்து போன கால்நடைகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மர்ம நோய் ஏற்படாத வகையில் முன்னேற்பாடு நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலைவாய்ப்பு வருமானத்தை இழந்து உள்ள விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். 2020-2021 ஆம் ஆண்டு பயிர் காப்பீடு திட்டத்தில் விடுபட்டுப் போன கிராமங்களின் விவசாயிகளுக்கும், ஒதுக்கீடு செய்து இதுவரை இழப்பீடு வழங்கப்படாத விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும்.
வருடந்தோறும் மழை காலங்களில் வாய்க்கால்களை துார் வாருவதை விட்டு விட்டு, முன்கூட்டியே அனைத்து வடிகால் மற்றும் பாசன வாய்க்கால்களை துார் வாரவேண்டும். கடன்களையும், நகைகளை அடமானம் வைத்தும்,வட்டிக்கு வாங்கி சாகுபடி செய்த விவசாயிகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.சம்பா, தாளடி சாகுபடிக்கு தேவையான ரசாயன உரங்களை தட்டுப்பாடின்றி வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயிகள் கையில் அழுகிய நாற்றுகளுடன் கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.