சிதிலமடைந்த ராஜராஜசோழனின் தாத்தா கட்டிய அய்யனார் கோயில் - கண்டுகொள்ளாத மத்திய, மாநில அரசுகள்
’’திருப்பணி செய்ய அறநிலையத்துறையினர், இந்திய தொல்லியியல் துறையினரிடம் ஆணை வாங்க வேண்டும் என்றனர். தொல்லியியல் துறையினரிடம் கேட்டால், உரிய பதில் கூறாமல், சுமார் 65 ஆண்டுகளாக கிடப்பில் போட்டுள்ளனர்’’
சோழ மன்னர்களுக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய திருப்புறம்பியத்தில் அபாய நிலையில் பகவதி அய்யனார் கோயில்
சுமார் 96 ஆண்டுகள் ஆன நிலையில், திருப்புறம்பியத்தை சேர்ந்த கிராமவாசிகள், போதுமான நிதியை திரட்டி, திருப்பணி செய்ய, அறநிலையத்துறையினரிடம் உத்தரவு கேட்டனர்
கண்டு கொள்ளாத தமிழக அரசு
கும்பகோணத்தை அடுத்த திருப்புறம்பியம் கிராமத்திலுள்ள பகவதி அம்மன் கோயில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயிலாகும். கிபி.880 ஆம் நுாற்றாண்டில் விஜயாலாய சோழனுக்கும், வரகுணபாண்டியனுக்கும் மிகப்பெரிய போர் நடைபெற்றது. அப்போது, விஜயாலய சோழன், தனக்கு துணையாக பல்லவ மன்னன், அபராஜிதவர்மன், கங்கமன்னன், பிருதிவிபதி ஆகியோரிடம் போரிட்டு, விஜயாலயா சோழன் வெற்றி பெற்றான். வரகுண பாண்டியனை, கொள்ளிடம் ஆற்றை கடந்து விரட்டி சென்ற விஜயாலயா சோழன், தொடர்ந்து தனது மீன் கொடியுடன் ஒடினால், தனக்கு ஆபத்து வந்து விடும் என்பதால், மீன் கொடியை சுருட்டிகொண்டு ஒடினான். மீன் கொடியை சுருட்டிய இடம் தான் இப்போது, மீன்சுருட்டி ஊரானது.
விஜயாலயா சோழனுக்கும், வரகுண பாண்டியனுக்கும் நடந்த போரில், கங்கமன்னன், வீரமரணம் அடைந்தான். அவன் இறந்த இடத்தில் நடுக்கல் நடப்பட்டது. பின்னர் விஜயாலயா சோழன், கங்கமன்னன் வீரமரணம் அடைந்த பகுதியில் நடப்பட்ட நடுக்கல் பகுதியில் பகவதி அய்யனார் கோயிலை கட்டினான். சோழர் மன்னர்களுக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய பகுதிதான், இப்போது திருப்புறம்பியமாக மாறி மருவி விட்டது என வரலாறு கூறுகிறது. தன் வம்சத்தை விருத்தியடைந்தின் நினைவாக அக்காலத்தில் சோழர் வம்சவத்தினர்கள், வழிபாடு செய்துள்ளனர் என்றும் வரலாற்று ஆசிரியர்கள் கூறியுள்ளார்கள்.
மேலும், திருப்புறம்பியத்தில், சோழர்களுக்கும், எதிரிகளுக்கும் நடைபெற்ற போரில், அப்பகுதியில் முழுவதும், ஆயிரக்கணக்கான, போர்கள் வீரமரணம் அடைந்ததால், போல் நடைபெற்ற பகுதிகளில் எல்லாம் ரத்தமாக இருந்ததால், அப்பகுதி உதிரம்பட்டிஎன்று பெயர் வந்தது. அந்த போர் வீரர்களை அடக்கம் செய்து பால் தெளிக்கும் இடம் தான் பாலிபடுகை என்றும், அவர்களுக்கு இறுதி கடன் செலுத்தும் இடமான பரியாரித்தோப்பும், ஈமச்சடங்கு முடித்து விட்டு குளித்த இடம் தான் கண்ணாற்றுக்குட்டை என போர் நடந்தற்கான சான்றுகள் உள்ளன என வரலாறு கூறுவதுண்டு. தஞ்சையை ஆண்ட மன்னன் ராஜராஜசோழனின் தாத்தாவாகிய விஜயாலயா சோழன், சோழர் சாம்ராஜியத்தை உருவாக்கியவர் கட்டிய பகவதி அய்யனார் கோயில், தற்போது சிதிலமடைந்து, எப்போது விழுமோ என்ற நிலையில் ஆபத்தான வகையில் செடி கொடிகள் மண்டி காட்டியளிக்கிறது. திருப்புறம்பியத்தின் தென் கிழக்கு தெருவின், கடைசியில் சென்று, அங்கு நடவு செய்துள்ள வயல் வரப்புகளில் சுமார் ஒரு கிலோ மீட்டர் நடந்து சென்றால், மூங்கில் மரங்களால் சூழப்பட்ட பகுதியின் வழியாக அதனுள் உள்ள ஒற்றையடி பாதையில் நடந்து சென்றால், சுமார் 1000 ஆண்டுகள் பழமையான ஆலமரம் பிரமாண்டமாக காட்சியளிக்கிறது. அதன் எதிரில், மண்ணால் கட்டப்பட்டகட்டிடத்தில் பகவதி அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்கள் உள்ளன.
பகவதி அம்மன் கோயில் மிகவும் சிதிலமடைந்து காணப்பட்டதால், கடந்த 1953 ஆம் ஆண்டு, திருப்புறம்பியத்தை சேர்ந்த முக்கியஸ்தர்கள், திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்தனர். அப்போது, போதுமான மின் விளக்குகள் வசதி, தண்ணீர் இல்லாத காலம் என்பதால், கிணறு வெட்டியும், விளக்குகளை கொண்டு சென்று திருப்பணி செய்ததாக அப்பகுதியிலுள்ளவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், சுமார் 96 ஆண்டுகள் ஆன நிலையில், திருப்புறம்பியத்தை சேர்ந்த கிராமவாசிகள், போதுமான நிதியை திரட்டி, திருப்பணி செய்ய, அறநிலையத்துறையினரிடம் உத்தரவு கேட்டனர். ஆனால் அறநிலையத்துறையினர், இந்தியதொல்லியியல் துறையினரிடம் ஆணை வாங்க வேண்டும் என்றனர். இந்திய தொல்லியியல் துறையினரிடம் கேட்டால், உரியபதில் கூறாமல், சுமார் 65 ஆண்டுகளாக கிடப்பில் போட்டுள்ளனர்.
எனவே, தமிழக அரசு, சோழர் சாம்ராஜியத்தை உருவாக்கியவரும், சோழர்களில் முதன்மையானவரும், சோழர் வம்சத்திற்கு திருப்புமுனையை ஏற்படு்த்தியவர் கட்டிய 1000 ஆண்டுகள் பழமையான திருப்புறம்பியம், பகவதி அய்யனார் கோயிலை, உடனடியாக திருப்பணி தொடங்கி, கும்பாபிஷேகம் செய்திட வேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து, அக்கிராமத்தை சேர்ந்தவர் கூறுகையில்,சோழர் காலத்து கோயில் என்பதால், வருடந்தோறும் வெளி நாடு, வெளி மாநிலம், வெளி மாவட்டத்திலிருந்து, கல்வியாளர்கள், கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள், விபரமறிந்த சுற்றுலாவாசிகள் வந்து பார்வையிட்டு சென்று வருகிறார்கள்.
வருடந்தோறும் கர்நாடக மாநிலத்தில் இருந்து சுமார் 10 குடும்பத்தினர், ஒரு நாள் வந்து அங்குள்ள ஆலமரத்தின் கீழ் அமர்ந்து, தரிசனம் செய்வார்கள். வெளி நாடு மற்றும் இங்குள்ள வரலாற்று ஆசிரியர்கள், வந்து திருப்புறம்பியம், உதிரம்பட்டி, பாலிபடுகை, பரியாரித்தோப்பு, கண்ணாற்றுக்குட்டை உள்ளிட்ட இடங்களில் பார்வையிடுவார்கள். தஞ்சையில் ராஜராஜசோழனுக்கு, தமிழக அரசு விமர்சையாக விழா எடுக்கிறது. ஆனால் சோழர் வம்சத்தை உருவாக்கியவரான விஜயாலய சோழனையும், அவர் கட்டிய கோயிலையும் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர். சோழர் வரலாற்றில், திருப்புறம்பியம் என்பது முக்கியமானதாகும் என்று திருப்புறம்பியத்தில் பிறந்த வரலாற்று ஆசிரியரான சதாசிவபண்டாரத்தார், நுாலில் குறிப்பிட்டுள்ளார்.
இக்கோயிலை கட்டுவதற்கு, அறநிலையத்துறையும், இந்திய தொல்லியியல் துறை போட்டி போடுவது விட்டு விட்டு, திருப்புறம்பியத்தில் உள்ள பகவதி அய்யனார் கோயிலையும் திருப்பணி செய்து, கும்பாபிஷேகம் நடத்த உரிய ஆணையை வழங்க, அறநிலையத்துறை அமைச்சர் உத்தரவிட வேண்டும். எனவே, தமிழக அரசு உடனடியாக, திருப்புறம்பியத்திலுள்ள பகவதி அய்யனார் கோயிலை, உடனடியாக சீரமைத்து, திருப்பு செய்து, கும்பாபிஷேகம் செய்திடவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.