மன்னர் சரபோஜி பிறந்தநாள் விழா: உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கலெக்டர்
தஞ்சாவூர் சங்கீத மகால் தர்பார் ஹாலில் மன்னர் சரபோஜியின் 247-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அவரது உருவச் சிலைக்கு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் சங்கீத மகால் தர்பார் ஹாலில் மன்னர் சரபோஜியின் 247-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அவரது உருவச் சிலைக்கு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மன்னர் சரபோஜியால் செம்மை பெற்ற சரஸ்வதி மகால் நூலகம்
சர்வதேச புகழ்பெற்றுத் திகழும் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம் மன்னர் சரபோஜியால் தான் செம்மை பெற்றது. தஞ்சை, வல்லம் நகரங்கள் மட்டுமே இவரது ஆளுகைக்குள் இருந்தன. இந்த நகரங்களின் அப்போதைய மக்கள் தொகை 25 ஆயிரம் பேர் தான். ஆனால், சரபோஜி மன்னர் இறந்தபோது அவரது இறுதி ஊர்வலத்தில் 90 ஆயிரம் பேர் கலந்து கொண்டதாக ஆங்கிலேயர் எழுதிவைத்த ஆவணங்கள் சொல்கின்றன.
ஆளுகைக்கு அப்பால் வசித்த மக்களிடமும் செல்வாக்கு
மன்னர் இறந்த நாளில் தஞ்சை மக்கள் யாருமே உணவு அருந்தவில்லையாம். மறுநாள் அஸ்தி கரைக்கும் நிகழ்வில் 30 ஆயிரம் பேர் பங்கேற்றார்கள் என்றும் அந்த ஆவணங்கள் சொல்கின்றன. அந்தளவுக்கு தனது ஆளுகைக்கு அப்பால் வசித்த மக்களிடமும் செல்வாக்கு பெற்ற மனிதராக திகழ்ந்தார் சரபோஜி மன்னர்.
மன்னர் சரபோஜியும் அவருக்கு குருவாக விளங்கிய ஸ்வார்ட்ஸ் பாதிரியாரும் கைகோர்த்து சரஸ்வதி மஹால் நூலகத்தை உருவாக்கினார்கள். வடமொழி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளிவந்த இலக்கியம், இசை, மருத்துவம் சார்ந்த ஓலைச்சுவடிகளையும், நூல்களையும் தேடிப்பிடித்துக் கொண்டுவந்து இந்த நூலகத்தில் இடம்பெறச் செய்தனர். அப்போதே இங்கு சுமார் 5,000 புத்தகங்கள் இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய பெருமைகள் கொண்ட மன்னர் சரபோஜியின் பிறந்த நாள் இன்று
மன்னர் சரபோஜி சிலைக்கு மாலை அணிவிப்பு
தஞ்சாவூர் சங்கீத மகால் தர்பார் ஹாலில் மன்னர் சரபோஜியின் 247-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அவரது உருவச் சிலைக்கு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விழாவில் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்து மன்னர் சரபோஜி சிலைக்கு மாலை அணிவித்தனர்.
பின்னர், சங்கீத மஹாலில் நடைபெற்ற விழாவில் புலவர் ஏபு.சந்தானம் தமிழில் எழுதிய சிவஞானபோதம் என்ற புத்தகம், சுதர்ஷன் எழுதிய சாந்தி ரத்னாகரம்-1 என்ற புத்தகம், ரவி எழுதிய பஞ்சரத்ன பிரபந்தமு என்ற புத்தகம், முனைவர் வீரராகவன் & அனிதா எழுதிய விஷ்ண்வாதி ஸ்தோத்ரஸங்கிரஹம் என்ற புத்தகம், ராமச்சந்திரன் எழுதிய கல்யாண வைபவ மங்களாஷ்டகே என்ற புத்தகம், வீரராகவன் எழுதிய வர்ணதீபிகா என்ற புத்தகங்களையும் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வெளியிட திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் பெற்றுக் கொண்டனர்.
மறுபதிப்பு புத்தகங்கள் வெளியீடு
மேலும், 6 மறுபதிப்பு புத்தகங்களை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டார். விழாவில் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பேசியதாவது: மன்னர் சரபோஜி அவர்களின் 247- வது பிறந்த நாள் விழா கொண்டாடுவது அவரது சிறப்பான பணிகளுக்காக நாம் செலுத்துகிற மரியாதையாகும். உலகில் பெருமை வாய்ந்த சரஸ்வதி மஹால் நூலகமும், அந்த நூலகத்தில் காலத்தால் அழிக்க முடியாத ஓலைச் சுவடிகளையும், பழமை வாய்ந்த வரலாற்று நூல்களையும் பாதுகாத்து வரும் தலைமுறைக்கும், மக்களுக்கும் பழைய வராலாறுகளையும், பண்பாடு, கலை, கலாச்சாரம் இவற்றை தொடர்ந்து போற்றக்கூடிய உணர்வுகளை சரஸ்வதி மஹால் நூலகம் காலமெல்லாம் நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது.
எனவே, பெருமை வாய்ந்த மன்னர் சரபோஜி அவர்களை என்றென்றும் போற்றுவோம். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் மாவட்ட ஊராட்சித் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, துணை மேயர் மரு.அஞ்சுகம் பூபதி, சரஸ்வதி மகால் நூலக ஆயுள் உறுப்பினர் சிவாஜிராஜா போன்ஸ்லே, சரஸ்வதி மகால் நிர்வாக அலுவலர் (பொ) மற்றும் முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், அரண்மனை தேவஸ்தானம் அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, துணை ஆட்சியர் (பயிற்சி) சங்கர நாராயணன், சதய விழா குழுத் தலைவர் செல்வம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.