குழந்தைகளிடம் மழலை மொழி.. முதியோரிடம் அன்பு மொழி: மக்கள் மனம் கவர்ந்த தஞ்சை கலெக்டர்
குழந்தைகளிடம் மழலை மொழியில் பேசியும், மூதாட்டியிடம் காலில் செருப்பை போடுங்கள். அப்போதுதான் பேசுவேன் என்று எளிமை காட்டி நான் உங்களில் ஒருத்தி என்று சொல்லாமல் அதை செயலில் காட்டி மக்களை கவர்ந்தார்.
தஞ்சாவூர்: குழந்தைகளிடம் மழலை மொழியில் பேசியும், மூதாட்டியிடம் காலில் செருப்பை போடுங்கள். அப்போதுதான் பேசுவேன் என்று எளிமை காட்டி நான் உங்களில் ஒருத்தி என்று சொல்லாமல் அதை செயலில் காட்டி மக்களை கவர்ந்தார் தஞ்சை கலெக்டர் பிரியங்கா பங்கஜம்.
குழந்தைகளிடம் மழலை மொழியில் கொஞ்சி பேசினார்
முதல்வரின் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் படி, தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது பள்ளிக் குழந்தைகள் உணவு சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். அவர்களிடம் மழலை மொழியில் பேசி கொஞ்சியது அனைவரையும் கவரும் வகையில் இருந்தது. மிக முக்கியமாக தான் கலெக்டர் என்ற தோரணையே இல்லாமல் நம் வீட்டில் ஒருவர் என்பது போல் கலெக்டர் பிரியங்கா பங்கஜத்தின் செயல்பாடுகள் இருந்தது. குழந்தைகள் சாப்பிட்டுக் கொண்ட இருந்த வகுப்பறையில் காலில் இருந்த செருப்பை கழற்றிவிட்டு உள்ளே சென்று அனைவரையும் வியக்க வைத்தார்.
மேலும் பேராவூரணி வட்டம் காலகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது மக்களிடம் சிகிச்சை நல்ல முறையில் அளிக்கப்படுகிறதா என்பதையும், மருந்துகள் இருப்பு, மருத்துவர் பணியாளர் வருகைப் பதிவேடு ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், காலகம் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் செயல்பாடுகளையும், கொன்றைக்காடுஅரசு உயர்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்து மாணவர்களின் கல்வித் திறன் பற்றியும், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், சமையல் கூடம் நன்கு பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்தும், குழந்தைகள் நேயப் பள்ளி மற்றும் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மூதாட்டி ஒருவர் தான் காலில் அணிந்திருந்த செருப்பை கழற்றி விட்டு கலெக்டரிடம் ஒரு மனுவை கொடுக்க முயன்றார்.
காலில் செருப்பை போட்டால்தான் பேசுவேன்
அப்போது புன்னகையுடன் காலில் செருப்பை போடுங்கள். அப்போதுதான் பேசுவேன் என்று கலெக்டர் கூற, அந்த மூதாட்டியின் முகத்தில் அப்படி ஒரு மலர்ச்சி. தனது பேத்தியிடம் பேசுவது போல் தன் குறையை கூறினார். அதை பொறுமையாக கேட்டுக் கொண்டார் கலெக்டர். பின்னர் தனக்கு கொடுக்கப்பட்ட இளநீரை அந்த மூதாட்டியிடம் கொடுத்தார். இதனால் மற்றொரு இன்ப அதிர்ச்சியை அந்த மூதாட்டி ஏற்பட்டது. தண்ணீர் பிரச்னைக்கு மனு கொடுத்த அவருக்கு உடனே இளநீர் கொடுத்துவிட்டார் கலெக்டர்.
உர விற்பனை மையத்தில் ஆய்வு
பின்னர் பேராவூரணி தேர்வு நிலைப் பேரூராட்சியில் வளம் மீட்பு பூங்காவின் செயல்பாடுகளையும், இப்பூங்காவில் உரம் தயாரிக்கும் பணிகள், மீன் வளர்ப்புக் குளம், பசுமைகுடில், உரம் விற்பனை மையம் அமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். பேராவூரணியில் ரூ.4 கோடியே 90 லட்சம் அரசு மானியத்தில் 21 உறுப்பினர்களின் பங்களிப்புடன் கூடிய பேரா வூரணி கயிறு உற்பத்தி நிறுவனம் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு 3 மாதத்தில் துவங்குவதற்காக தயார் நிலையில் இருப்பதை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார். பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஏராளமான பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றார்.
11 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள்
பின்னர், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மு.பாலகணேஷ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இம்முகாமில் 11 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளை வழங்கினார். இந்த நிகழ்வில் போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத், உதவி ஆட்சியர் (பயிற்சி) உத்கர்ஷ் குமார், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ, இணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் மரு.செல்வகுமார் மற்றும் அரசுத்துறை உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.