நெல் மூட்டைகளுடன் லாரியை கடத்தி இரண்டாவது மனைவியின் வீட்டுக்கு எடுத்து சென்ற நபர் கைது...!
மயிலாடுதுறையில் நெல் மூட்டைகளுடன் லாரியை கடத்தி சென்ற சரவணனை இரண்டாவது மனைவி வீட்டில் போலீசார் கைது செய்துள்ளனர்
மயிலாடுதுறை அருகே அரசு நேரடிநெல் கொள்முதல் நிலையத்திலிருந்து நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் வைப்பதற்காக லாரியில் கொண்டுவரப்பட்ட நெல்மூட்டைகளை லாரியுடன் கடத்திச் சென்ற கில்லாடி ஆசாமியை தீவிர தேடுதலுக்கு பிறகு மயிலாடுதுறை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு, கீழமருதாந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜி. லாரி ஓட்டுநரான இவர் கடந்த சனிக்கிழமை அன்று மணல்மேடு கேசிங்கன் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை லாரியில் ஏற்றிக்கொண்டு மயிலாடுதுறையில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு முன் நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.
மறுநாள் காலை சென்று பார்த்தபோது நெல் மூட்டைகளுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியை காணவில்லை, அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் லாரியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை இதனையடுத்து லாரி கடத்தப்பட்டதை உணர்ந்த ராஜி, இதுகுறித்து லாரி உரிமையாளர் விஜயகுமார் தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் லாரி உரிமையாளர் விஜயகுமார் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் லாரி காணாமல் போயுள்ளது என புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட மயிலாடுதுறை காவல்துறையினர் புகாரின்பேரில் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
விசாரணையில் கடந்த ஆண்டு இதேபோன்று மயிலாடுதுறை கூறைநாடு பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் நெல் மூட்டைகளுடன் லாரியை கடத்திச் சென்றதும், பின்னர் கடத்திய நபர் போலீசாரிடம் சிக்கியதும் நினைவிற்கு வந்தது. அதையடுத்து காவல்துறையினர் விசாரணையில் அந்த நபர் கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அட்சயநல்லூர் கொத்தட்டை என்ற கிராமத்தில் உள்ள அவரது இரண்டாவது மனைவியின் வீட்டிற்கு லாரியை நெல் மூட்டைகளுடன் கடத்தி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர் சரவணனின் இரண்டாவது மனைவியின் வீட்டின் முன்பு லாரியை நிறுத்திவிட்டு பதுங்கி இருந்தது தெரியவந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
இதையடுத்து வீட்டை சுற்றி வளைத்த காவல்துறையினர் 11.90 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லாரி மற்றும் நெல் மூட்டைகளை கைப்பற்றி, சரவணனை கைது செய்து மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் லாரியில் இருந்த நெல் மூட்டைகளை நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைத்த போலீசார் லாரியை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
இருசக்கர வாகனம், கார் உள்ளிட்ட சில ரக வாகனங்கள் காணாமல் போவதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். மேலும் ஒரு சில நேரங்களில் கனரக வாகனங்களும் திருடப்பட்டு இருக்கிறது. ஆனால் அரசு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு முன்பு நிறுத்திவிட்டு சென்ற லாரியினை நெல் மூட்டைகளுடன் கடத்திச் சென்ற சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது.