தஞ்சாவூரில் கீழவெண்மணி 57ம் ஆண்டு நினைவுநாள் அனுசரிப்பு
கீழ வெண்மணி தியாகிகளின் 57 ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி இடதுசாரிகள் பொதுமேடை சார்பில் தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் அருகில் நடைபெற்றது.

தஞ்சாவூர்: புயல், மழையால் வேலையிழந்த விவசாயத் தொழிலாளர்களுக்கு ரூபாய் 15,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்று இடதுசாரிகள் பொதுமேடை சார்பில் தஞ்சையில் நடைபெற்ற கீழவெண்மணி 57ம் ஆண்டு நினைவு நாளில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் கடந்த 1968 ஆம் ஆண்டு கூலி உயர்வு போராட்டம் நடைபெற்றது இதில் நாகப்பட்டினம் மாவட்டம் கீழவெண்மணி கிராமத்தில் போராடிய விவசாயத் தொழிலாளர்கள், பெண்கள், குழந்தை உட்பட 44 பேர் ஒரு வீட்டிற்குள் பூட்டி தீ வைத்துக் கொளுத்தப்பட்டனர். கீழ வெண்மணி தியாகிகளின் 57 ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி இடதுசாரிகள் பொதுமேடை சார்பில் தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் அருகில் நடைபெற்றது.
இந்த நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் தி.திருநாவுக்கரசு தலைமை வகித்தார். இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளர் துரை. மதிவாணன் முன்னிலை வகித்தார். இதில் சமீபத்தில் பெய்த புயல் மழையினால் குறுவை, சம்பா, தாளடி உள்ளிட்ட சாகுபடிகள் பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயத் தொழிலாளர்கள் மூன்று மாத காலம் வேலை இழந்து உள்ளனர். பல்லாயிரம் தொழிலாளர்கள் குடும்பங்களின் துயரநிலை கருதி தமிழ்நாடு அரசு நிவாரணமாக ரூபாய் 15,000 ம் வழங்க வேண்டும்.
ஏழைகளின் வாழ்வை,வேலையை பறிக்கின்ற 100 நாள் வேலை திட்டத்தின் புதிய சட்டத்தை திரும்ப பெற வேண்டும். வருடம் முழுவதும் விவசாய தொழிலாளர்களுக்கு வேலை அளிக்கின்ற வகையில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்கப்பட வேண்டும், விவசாய வேலைகள் உள்ளிட்டு பல்வேறு வேலைகள் செய்யும் அனைவருக்கும் ஏழாவது ஊதியக்குழு அடிப்படையில் தினசரி சம்பளத்தை ரூபாய் 800 ஆக நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில் மக்கள் அதிகாரம் மூத்த தலைவர் காளியப்பன், சிபிஎம்எல் மக்கள் விடுதலை மாநிலத் துணைத்தலைவர் அருணாச்சலம், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்ட தலைவர் அழகு தியாகராஜன், மகஇக எழுத்தாளர் சாம்பான், திராவிட தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ரங்கராஜ், ஜனநாயக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஜோதிவேல், சிஐடியு நிர்வாகி செல்வம், என்டிஎல்எப் மாவட்ட தலைவர் அருள், செயலாளர் தாமஸ், பொருளாளர் லட்சுமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





















