கும்பகோணத்தில் சத்துக்கள் நிறைந்த வெள்ளரிப்பழத்தின் விற்பனை கனஜோர்
உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் என்பதால் மக்கள் போட்டி போட்டுக் கொண்டு வெள்ளரிப்பழத்தை வாங்கி செல்கின்றனர்.
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் வெள்ளரிப்பழம் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. ஒரு பழம் ரூ.100 விற்பனை செய்யப்படுகிறது. உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் என்பதால் மக்கள் போட்டி போட்டுக் கொண்டு வெள்ளரிப்பழத்தை வாங்கி செல்கின்றனர்.
வெள்ளரிப்பழம் விற்பனை அமோகம்
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் கொளுத்தி எடுத்தது. இப்போதோ சொல்லிக் கொள்ளவே வேண்டாம். வெளியில் தலைக்காட்ட முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெயில் கொளுத்தி வருகிறது. சாலைகளில் அனல் காற்று வீசுவதால் வாகனத்தில் செல்ல முடியாத நிலை உள்ளது. வெப்பத்திலிருந்து தங்களை காத்துக் கொள்ள பொதுமக்கள் இளநீர், நுங்கு, வெள்ளரி உள்ளிட்ட குளிர்ச்சி தரும் உணவுப்பொருட்களை சாப்பிட்டு வருகின்றனர். இதை விட அதிகளவில் வெள்ளரிப்பழம் விற்பனை ஆகி வருகிறது.
சாலையோரக் கடைகளில் விற்பனை மும்முரம்
ஏற்கனவே வெள்ளரிப்பிஞ்சு விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. அதை போல் கும்பகோணத்தில் வெள்ளரிப்பழம் விற்பனை பல்வேறு இடங்களில் தீவிரமாக நடந்து வருகிறது. சாலையோர கடைகளில் பொதுமக்கள் விரும்பி வாங்கி சாப்பிட்டு வருவதால் அவற்றின் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. ஒரு வெள்ளரிப்பழம் ரூ.50 முதல் ரூ.120 வரை விற்பனையாகிறது.
ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த வெள்ளரிப்பழம்
வெள்ளரிப்பழத்தில் ஆரோக்கிய நன்மைகள் பல உண்டு. கோடைகாலத்தில் இந்த பழத்தை நாம் உண்ணும் போது நமக்கு பல்வேறு ஆரோக்கிய பலன்கள் கிடைக்கின்றன. இது தாகத்தை தீர்க்கும் ஒரு மிகச்சிறந்த பழமாகும். இந்த பழம் பெரும்பாலும் கோடை காலங்களில் அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது. இந்த பழத்தில் எவ்வளவு சுவை நிரம்பி இருக்கிறதோ அந்த அளவுக்கு ஆரோக்கிய குணமும் நிரம்பியுள்ளது.
வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்தது
இந்த பழத்தில் வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் ஆகிய சிறந்த சத்துக்கள் உள்ளன. மேலும் இதில் வைட்டமின்கள் பி 1, பி 6 மற்றும் கே, ஃபோலேட், காப்பர், மெக்னீசியம் மற்றும் உணவு நார்சத்துகளும் நிறைந்து காணப்படுகின்றன. வெள்ளரிப் பழம் சுவையில் இனிப்பும் இல்லாமல் வித்தியாசமான சுவையில் இருக்கும். சாப்பிட மாவு போலவும் முலாம்பழத்தைப் போன்றும் சுவை இருக்கும். அதனால் நீரிழிவு பிரச்சினை உள்ளவர்களும் இந்த பழத்தை சாப்பிடலாம். கூடுதல் சுவைக்காக இந்த பழத்தில் நாட்டுச் சர்க்கரை சேர்த்தும் சாப்பிடுவார்கள்
உடலை குளிர்விக்கும் தன்மை கொண்டது
வெள்ளரிப் பழத்தில் நீர்ச்சத்து அதிகமாக நிறைந்துக் காணப்படுகிறது. இதனால் கோடை காலங்களில் நமது உடல் நீர்ச்சத்துடன் இருக்க இந்த பழம் பெரிதும் உதவுகிறது. அதிக வெப்ப காலங்களில் நமது உடலை குளிர்வித்து வெப்பத்தில் இருந்து பாதுகாக்கிறது. இதில் அடங்கியுள்ள முக்கிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் தேவையான சத்துக்களை நமது உடலுக்கு வழங்குகிறது. இந்த வெள்ளரிப்பழத்தின் விற்பனைதான் தற்போது கும்பகோணத்தில் சூடுபிடித்துள்ளது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ,”கும்பகோணம் திருப்பனந்தாள் திருவிடைமருதூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெள்ளரி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ50 ஆயிரம் வரை செலவாகிறது. வெள்ளரியை முதலில் பிஞ்சுக்காக சாகுபடி செய்வோம். வியாபாரிகள், பொதுமக்கள் சிலர் தங்களுக்கு வெள்ளரி பழமாக வேண்டும் என்று கேட்டால் அவர்களுக்காக வெள்ளரி பிஞ்சு பழமாகும் வரை சாகுபடி நிலத்தில் விட்டு விடுவோம். வியாபாரிகளுக்கு விற்றது போக இருக்கும் பழத்தினை நாங்கள் சாலையோரம் கடைகளில் விற்பனை செய்து வருகிறோம்” என்றனர்.