21 வருஷம் ஆகிடுச்சு... குடமுழுக்கு எப்போது நடத்துவீங்க ஆபீசர்ஸ்... வலுக்கிறது பக்தர்களின் கோரிக்கை
தாராசுரம் பகுதியில் அமைந்துள்ள ஐராவதீஸ்வரர் கோவில், சோழர் கால கட்டிடக்கலைக்கும் சிற்பக்கலைக்கும் சிறந்த உதாரணமாக விளங்குகிறது.

தஞ்சாவூர்: சோழர்களின் பெருமையை பேசும் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் குடமுழுக்கு நடத்தி 21 ஆண்டுகள் ஆயிடுச்சுங்க. 2028- மகாமகம் விழாவிற்குள் குடமுழுக்கை நடத்துவீங்களா என்று பக்தர்கள், பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திற்கு அருகில் தாராசுரம் பகுதியில் அமைந்துள்ள ஐராவதீஸ்வரர் கோவில், சோழர் கால கட்டிடக்கலைக்கும் சிற்பக்கலைக்கும் சிறந்த உதாரணமாக விளங்குகிறது. கி.பி. 12ஆம் நூற்றாண்டில் சோழ மன்னரால் கட்டப்பட்டது. இந்த கோவிலில் சிவன் சன்னதி, தெய்வநாயகி அம்பாள், சரபேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், குபேரலிங்கம், துர்கை ஆகிய சன்னதிகள் உள்ளன.
இந்த கோயிலில் 4 பிரகாரங்கள், அம்மன் சன்னதி, நந்திமண்டபம் 1008 சிற்பங்கள் மற்றும் கோவில் வளாகம் முழுவதும் கலைநுணுக்க வேலைபாடுகளுடன் கொண்ட சிலைகள் உள்ளன. யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றான இந்த கோயில் இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. தினமும் 500-க்கும் மேற்பட்ட வெளிநாடுகள், வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

குடமுழுக்கு நடந்து 21 ஆண்டுகள் நிறைவு
கோயிலுக்கு வரும் வெளிநாடு, வெளிமாநில சுற்றுலா பயணிகள், கோவிலில் உள்ள கலைத்திறன்களை கண்டு ரசித்து சென்றாலும், பல ஆண்டுகளாக குடமுழுக்கு நடத்தவில்லை என்பது ஒரு குறையாக உள்ளது. தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலில் கடந்த 2004-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22-ந் தேதி குடமுழுக்கு நடைபெற்றது. இந்த கோயிலில் குடமுழுக்கு நடைபெற்று 21 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. பொதுவாக கோயில்களில் 12 ஆண்டுக்கு ஒரு முறை குடமுழுக்கு செய்வது ஆகம விதி.
ஆனால் 21 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் குடமுழுக்கு நடத்தப்படாமல் உள்ளது. எனவே தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலை புதுப்பித்து குடமுழுக்கு நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கும்பகோணத்தை பகுதி பக்தர்கள் தரப்பில் கூறுகையில், ஒவ்வொரு கோவிலுக்கும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடத்த வேண்டும் என்பது ஆகம விதி. ஆனால் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில் குடமுழுக்கு நடத்தப்பட்டு 21 ஆண்டுகள் ஆகிறது. பாதுகாப்பிற்காக எடுத்து செல்லப்பட்ட சிலைகள் அனைத்தும் தஞ்சையில் உள்ளது.
கோயிலில் எந்ததெந்த சிலைகள் எங்கு இருந்தன என்ற விவரங்கள் கல்வெட்டில் உள்ளன. அந்த தகவலின் படி மீண்டும் கோயிலில் சிலைகள் பிரதிஷ்டை செய்ய வேண்டும். தினமும் பக்தர்கள் வழிபாட்டில் இருந்த சிலைகள் அனைத்தும் தற்போது வேறு இடத்தில் இருப்பது ஆகம விதிகளுக்கு எதிரானது.

தொல்லியல் துறை பராமரிப்பு சரியில்லை
கோயிலில் தொல்லியல் துறை சார்பில் சரிவர பராமரிப்பது இல்லை. தாராசுரம் கோயிலைச் சுற்றிஉள்ள பகுதிகள் மேடாகி விட்டதால், கோயில்ஏறத்தாழ 5 அடி அளவுக்கு பள்ளத்தில் இருக்கிறது. இதனால், மழைக் காலங்களில் நீர் தேங்குகிறது. இதை வெளியேற்ற அமைக்கப்பட்ட புதைவடிகால் அமைப்புகள் காலப்போக்கில் சேதமடைந்துவிட்டன.
இதனால், மழைநீர் வடியாமல் கோயிலிலேயே தேங்குகிறது. கோயில் உள்ளே அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டி கோயிலுக்கு வெளியே கொண்டு செல்லப்பட்டுள்ளது. அந்த குடிநீர் தொட்டியை சமூக விரோத செயலுக்கு பயன்படுத்துகின்றனர். கோயில் வளாகத்தில் உட்பிரகாரத்தில் தரையில் அமைக்கப்பட்டுள்ள கற்கள் சரிவர இல்லாததால் நடந்து செல்பவர்களின் கால்களை பதம் பார்க்கிறது. ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை சிற்பங்கள் பாசிபிடிக்காமல் இருக்க உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கு ரசாயன கலவை கொண்டு சுத்தம் செய்வார்கள். ஆனால் அதையும் செய்ததாக தெரியவில்லை.
மொட்டை கோபுரமாக காட்சி அளிக்கிறது
ஆனால் 2004-ம் ஆண்டுக்கு பிறகு ரசாயன கலவை கொண்டு சுத்தம் செய்யவில்லை.பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் சமீபத்தில் தான் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கோயிலின் ராஜகோபுரம் பல ஆண்டுகளாக மொட்டை கோபுரமாக காட்சி அளிக்கின்றன. கோயில் கோபுரத்தில் உள்ள சிற்பங்கள் சில உடைந்தும், சேதமடைந்தும் காணப்படுகிறது. கோயிலில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மத்திய தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் பயனில்லை.
வருகிற 2028- ம் ஆண்டு மகாமகம் விழாவிற்கு முன்னதாக கோவில் குடமுழுக்கு நடத்தப்படும் என்று ஆய்விற்கு வந்த தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அதற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. கோயில் திருப்பணிகளை இப்போதே தொடங்கினால் தான் பணிகள் முடிக்கப்பட்டு உரிய நேரத்தில் குடமுழுக்கு நடத்த முடியும். என்றனர்.





















