தஞ்சையில் அதிகரித்துவரும் போதை பொருட்கள் விற்பனை - மெடிக்கல் ஷாப்புகளில் திடீர் ஆய்வு
தஞ்சாவூரில், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களை குறி வைத்து, மெடிக்கல்களில் போதை மாத்திரைகள் விற்கப்படுகிறதா என போதை தடுப்பு பிரிவு போலீசார் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழகத்தில் கஞ்சா, போதை பொருட்கள்,போதை சாக்லெட் போன்றவை விற்பனை அதிகளவில் உள்ளதை தடுக்கும் வகையில், போலீசார் பல்வேறு ஆய்வுகளை நடத்தி, குற்றவாளிகளை பிடித்து வருகின்றனர். பள்ளி,கல்லுாரி மாணவர்களை குறிவைத்து விற்கப்படும் போதை பொருட்கள், சாக்லெட், மாத்திரைகளின் விற்பனையையும், அதற்கு காரணமாக உள்ள குற்றவாளிகளை பிடிக்கவும் போதை பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் பல இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, தஞ்சாவூர் மண்டல போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, டி.எஸ்.பி., பரத் சீனிவாசன், தஞ்சாவூர் சுகாதார ஆய்வாளர் விமல்ராஜ், இன்ஸ்பெக்டர் ராஜேஷ், தலைமை காவலர் மகேஸ்வரி, போலீசார் செந்தில் குமார் ஆகியோர், தஞ்சவூரில் உள்ள சுமார் 10க்கும் மேற்பட்ட மெடிக்கல், கடைகளில் போதை மாத்திரை விற்கப்படுகிறதா என ஆய்வு நடத்தினர்.
இது குறித்து போலீசார் ஒருவர் கூறுகையில், தஞ்சையில் நாளுக்கு நாள் போதை விற்பனை அதிகரித்து வருகிறது. வெளி மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கஞ்சாவை கடத்தி வருகின்றனர். அதனை போலீசார் நோட்டமிட்டு, பிடிக்கின்றார்கள். ஆனால் போதை விற்பனை நடந்து கொண்டு இருக்கின்றது கஞ்சா விற்பனை தடுத்துள்ளதால், பல்வேறு வகையான போதை மாத்திரைகள், டானிக்குகள், ஊசிகள் விற்பனை ரகசியமாக மெடிக்கல் ஷாப்புகளில் நடந்து வருகின்றது. இது போன்ற போதை பொருள்கள் மெடிக்கல் ஷாப்புகளில் விற்பனை செய்யப்படுகிறதா என, அனைத்து மாவட்டங்களிலும் திடீர் என சோதனை நடைபெற்று வருகின்றது. அதன்படி தஞ்சை மாவட்டத்திலுள்ள குறிப்பிட்ட 10 மெடிக்கல் ஷாப்புகளில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் போதை பொருள்கள் கிடைக்க வில்லை. வரும் நாட்களில் அனைத்து மெடிக்கல் ஷாப்புகளிலும் திடிர் சோதனை நடத்தப்படவுள்ளது.மேலும், போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் சிறுவர்களிடம் பைகளில் கொடுத்து அனுப்பி, அருகிலுள்ள ஊர்களில் சென்று விற்பனை செய்கின்றார்கள். அவர்கள் பெரும்பாலான விற்பனை அதிகாலை நேரத்தில் அதிகமாக நடைபெறுவதாக கூறப்படுகிறது.
போதை பொருள் விற்பனை செய்பவர்கள், குறிப்பிட்ட செல்போன் எண்ணுக்கு தகவல் கொடுக்கின்றார். பின்னர் அவர், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மற்றொரு இடத்திற்கு சென்று பைகளை வாங்கி கொண்டு, சாதாரணமாக சென்று விடுகிறார்கள். இதனால் போலீசார் பிடிப்பது சிரமம் ஏற்படுகின்றது. சில நேரங்களில் போலீசார் கண்காணிக்கப்படுவது குறித்து தகவல் தெரிந்து விடுவதால், அவர்கள் வேறு இடத்தை மாற்றி விடுகிறார்கள்.தஞ்சையில் தற்போது சுமார் 22 வயதிற்குட்ப்பட்ட இளைஞர்கள் தான் அதிகமாக போதை பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர். போலீசார் தஞ்சை மாநகரத்திற்குட்ப்பட்ட சுற்றுப்பகுதியில், ரகசியமாக கண்காணித்து, அவர்களின் செயல்பாடுகளை நோட்டமிட்டு, பின் தொடர்ந்து சென்றால் மட்டுமே, போதை பொருள் விற்பனையை தடுக்க முடியும் என்றார்.