30 ஆண்டுகளாக இருக்கும் வீடுகள்; காலி செய்ய சொல்லும் நெடுஞ்சாலை துறை - அச்சத்தில் மயிலாடுதுறை மக்கள்
மயிலாடுதுறையில் ரயில்வே மேம்பாலம் பராமரிப்புப் பணிக்காக அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்புவாசிகளின் வீடுகளை காலி செய்ய நெடுஞ்சாலைத்துறை அறிவுறுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த சித்தர்காடு பகுதியில் மயிலாடுதுறை ரயில்வே ஜங்ஷன் அருகில் கும்பகோணம் மயிலாடுதுறை தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் ரயில்வே ஜங்ஷன் அருகில் அமைந்துள்ளதால், ரயிலுக்காக கேட் போடப்பட்டு மற்ற வாகனங்கள் காத்திருக்காமல் போக்குவரத்து பிரச்சினை இன்றி வாகனங்கள் எளிதாக சென்று வருகிறது.
இந்நிலையில் இந்த மொழிப்போர் தியாகி சாரங்கபாணி நினைவு மேம்பாலம் கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேலாகின்றது. இந்த மேம்பாலத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது, மீண்டும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவுள்ளதால், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடம் மற்றும் அதன் அருகில் உள்ள புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பவர்களை காலி செய்ய நெடுஞ்சாலைத்துறையினர் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.
இந்த சூழலில், பராமரிப்புப் பணிக்காக அந்த இடத்தை காலி செய்ய சொல்லக்கூடாது, அவ்வாறு காலி செய்ய வேண்டுமென்றால் அதற்கு பதிலாக குடியிருக்க மாற்று இடம் வழங்க வேண்டும், வீடுகளை காலி செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என அப்பகுதியினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர். மேலும் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், அந்த பாலம் மற்றும் பொதுமக்கள் குடியிருக்கும் சர்சைக்குரிய பகுதியில் சென்னை நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலைய துணை இயக்குனர் ஜெயந்தி தலைமையில் பொறியாளர்கள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வில் மேம்பாலத்தின் கீழ்பகுதியில் வீடுகட்டி குடியிருந்து வருபவர்கள், வீடுகளை காலி செய்தால் மட்டுமே பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முடியும் என்ற சூழல் உள்ளது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, ஆய்வுக்கு வந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம், அங்கு வசிக்கும் குடும்பத்தினர் 30 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு வசிக்கும் தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். இடத்தை காலி செய்வதற்கும் கால அவகாசம் வழக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.