விடிய, விடிய வெளுத்தெடுத்த கனமழை... இளம் சம்பா, தாளடி பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை
தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் நாற்று நடவு செய்து 15 நாட்களே ஆன இளம் சம்பா - தாளடி பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் நேற்று மாலையில் தொடங்கிய கனமழை விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையால் இளம் சம்பா, தாளடி நாற்றுகள் நீரில் மூழ்கி விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இடைவிடாமல் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,466 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. இந்த தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் நாற்று நடவு செய்து 15 நாட்களே ஆன இளம் சம்பா - தாளடி பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை பல்வராயன் பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான விளைநிலங்கள் கடல் போல் காட்சியளிக்கிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் இடுப்பளவு தண்ணீரில் நாற்று நடவு செய்து 15 நாட்களே ஆன இளம் சம்பா - தாளடி பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இப்பகுதியில் வடிகால் வாய்க்கால் முறையாக தூர்வராதால் மழைநீர் வடியாமல் விளைநிலங்களில் தேங்கியிருப்பதாகவும், மழை நீர் தொடர்ந்து தேங்கி இருப்பதால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் ஏக்கருக்கு 25 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார் தலைமையில் விவசாயிகள் தஞ்சை அருகே பல்லவராயன் பேட்டை பகுதியில் மழையால் வயலில் பெருமளவில் தேங்கிய தண்ணீரில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வடிகால் வாய்க்கால்களை தூர்வாராததால் தான் வயலில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற முடியவில்லை. எனவே வடிகால் வாய்க்கால்களை உடனே தூர்வார வேண்டும் , பாதிக்கப்பட்ட பயிர்களை அரசு அதிகாரிகள் பார்வையிட்டு கணக்கீடு செய்ய வேண்டும். உரிய இழப்பீடு வழங்க வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்தப் போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலடிக்குமுளை, நல்வழி கொல்லை, பாலமுத்தி ஆகிய கிராமங்களில் சுமார் 50 ஏக்கருக்கு மேல் சம்பா பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையினால் இப்பகுதியில் உள்ள வாத்தலை வாய்க்கால் எனப்படும் வாய்க்காலில் ஆளடிக்குமுளை கிராமத்தில் தொடங்கி பால முத்தி வரையில் கோரைப் புட்கள் மண்டி கிடக்கிறது.
இதனால் மழை நீர் வெளியேறாமல் தேங்கிய நிலையில் மழை நீர் வயலுக்குள் புகுந்து பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் கடன் வாங்கி கஷ்டப்பட்டு பயிரிடப்பட்ட நிலையில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலை உருவாகியுள்ளது. இது பற்றி அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், இந்த வாய்க்காலை தூர்வார வேண்டுமென பலமுறை அதிகாரிகள் இடத்தில் கோரிக்கை வைத்தும் மூன்று வருடத்திற்கு ஒருமுறை தான் எஸ்டிமேட் ஒதுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்
பசி என்பது மூன்று வருடத்திற்கு ஒருமுறை வருவது கிடையாது கஜா புயலில் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்த நிலையில் நெற்பயிர்களை நம்பி இருந்த எங்களுக்கு தற்போது வாய்க்கால் தூர்வாரப்படாததால் நெற்பயிர்களும் சேதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே போர்க்கால அடிப்படையில் வாய்க்காலை தூர்வாரி பயிர்களை காப்பாற்ற வேண்டும் என விவசாயிகள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.






















